1 | ஐயோ! பொன் இப்படி மங்கிப் போயிற்றே! பசும்பொன் இப்படி மாற்றுக் குறைந்து போயிற்றே! திருத்தலக் கற்கள் தெருமுறை எங்கும் சிதறிக் கிடக்கின்றனவே! |
2 | பசும்பொன்னுக்கு இணையான சீயோனின் அருமை மைந்தர் இன்று குயவனின் கைவினையாம் மண்பாண்டம் ஆயினரே! |
3 | குள்ளநரிகளும் பாலூட்டித் தம் குட்டிகளைப் பேணிக்காக்கும்! பாலைநிலத் தீக்கோழியென என் மக்களாம் மகள் கொடியவள் ஆயினளே! |
4 | பால்குடி மறவாத மழலைகளின் நாவு தாகத்தால் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும்! பச்சிளங் குழந்தைகள் கெஞ்சுகின்ற உணவுதனை அளித்திடுவார் யாருமிலர்! |
5 | சுவையுணவு அருந்தினோர் நடுத்தெருவில் நலிகின்றனர்! பட்டுடுத்தி வளர்ந்தோர் குப்பைமேட்டில் கிடக்கின்றனர்! |
6 | ஒருவரும் கை வைக்காமல் நொடிப்பொழுதில் வீழ்ச்சியுற்ற சோதோமின் பாவத்தைவிட, என் மக்களாம் மகளின் குற்றம் பெரிதாமே! |
7 | அவள் இளவரசர் பனியினும் தூயவராய்ப் பாலினும் வெண்மையராய்ப் பவளத்தினும் சிவந்த மேனியராய் நீல மணிக் கட்டழகராய் இருந்தனர்! |
8 | இப்பொழுதோ, அவர்கள் தோற்றம் கரியினும் கருமை ஆனது: அவர்களைத் தெருக்களில் அடையாளம் காண இயலவில்லை! அவர்கள் தோல் எலும்போடு ஒட்டியிருந்தது. காய்ந்த மரம்போல் அது உலர்ந்து போனது! |
9 | பசியினால் மாண்டவர்களினும் வாளினால் மாண்டோர் நற்பேறு பெற்றோர்! ஏனெனில், முன்னையோர் வயல் தரும் விளைச்சலின்றிக் குத்துண்டவர் போல் மாய்ந்தனர்! |
10 | இரங்கும் பெண்டிரின் கைகள் தம் குழந்தைகளை வேகவைத்தன! என் மக்களாகிய மகள் அழிவுற்றபோது பிள்ளைகளே அன்னையர்க்கு உணவாயினர்! |
11 | ஆண்டவர் தம் சீற்றத்தைத் தீர்த்துக் கொண்டார்: தம் கோபக் கனலைக் கொட்டினார்: சீயோனில் நெருப்பை மூட்டினார்: அது அதன் அடித்தளங்களை விழுங்கிற்று. |
12 | பகைவரும் எதிரிகளும் எருசலேம் வாயில்களில் நுழைவர் என்று மண்ணுலகின் மன்னரோ பூவுலகில் வாழ்வோரோ நம்பவில்லை. |
13 | நகரின் நடுவே நீதிமானின் இரத்தம் சிந்திய இறைவாக்கினரின் பாவமும் குருக்களின் குற்றமுமே இதற்குக் காரணமாம்! |
14 | அவர்கள் குருடரெனத் தெருக்களில் தடுமாறினர்: அவர்கள்மீது இரத்தக் கறை எவ்வளவு படிந்திருந்ததெனில், அவர்கள் ஆடைகளைக்கூட எவராலும் தொட இயலவில்லை. |
15 | விலகுங்கள்! தீட்டு! விலகுங்கள்! தொடாதீர்கள்! என்று அவர்களைப் பார்த்துக் கூவினார்கள்: அவர்கள் அகதிகளாய் அலைந்து திரிந்தார்கள். 'இனி நம்மிடம் குடியிரார்,' 'இனி எம்மிடையே தங்கக்கூடாது' என்று வேற்றினத்தார் கூறினர். |
16 | ஆண்டவரே தம் முன்னிலையினின்று அவர்களைச் சிதறடித்தார்: இனி அவர்களைக் கண்ணோக்கமாட்டார். குருவை மதிப்பார் இல்லை: முதியோர்க்கு இரங்குவார் இல்லை. |
17 | உதவியை வீணில் எதிர்பார்த்து எம் கண்கள் பூத்துப்போயின! எம்மை விடுவிக்க இயலாத நாட்டினர்க்காய்க் கண் விழித்துக் காத்திருந்தோம்! |
18 | எம் நடமாட்டம் கவனிக்கப்பட்டது: எம் தெருக்களில் கூட எம்மால் நடக்க முடியவில்லை: எம் முடிவு நெருங்கிவிட்டது: எம் நாள்கள் முடிந்துவிட்டன: எம் முடிவு வந்து விட்டது. |
19 | வானத்துப் பருந்துகளிலும் விரைவாய் எம்மைத் துரத்துவோர் வருகின்றனர்: மலைகளில் எங்களைத் துரத்தி வந்தார்கள்: பாலையில் எங்களுக்காய்ப் பதுங்கி இருந்தார்கள். |
20 | ஆண்டவரின் திருப்பொழிவு பெற்று எம் உயிர் மூச்சாய்த் திகழ்ந்தவர், அவர்கள் வெட்டிய குழியில் வீழ்ந்தனர்! “அவரது நிழலில் வேற்றினத்தார் நடுவில் நாம் வாழ்வோம்” என்று அவரைக் குறித்தே எண்ணியிருந்தோம்! |
21 | ஊசு நாட்டில் வாழும் மகளே! ஏதோம்! அகமகிழ்ந்து அக்களித்திடு! கிண்ணம் உன்னையும் வந்தடையும்! நீ குடிவெறி கொண்டு ஆடையின்றிக் கிடப்பாய்! |
22 | மகளே! சீயோன்! உன் குற்றப்பழி நீங்கிவிட்டது: உன் அடிமைத்தனம் இனியும் தொடராது: மகளே! ஏதோம்! உன் குற்றத்திற்காக நீ தண்டிக்கப்படுவாய்! உன் பாவங்கள் வெளிப்படுத்தப்படும்! |