வேதாகமத்தை வாசி

Click to Subscribe

ஏசாயா 9

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது: முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்: பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார்.
2காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்: சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.
3ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்: அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்: அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்: கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.
4மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்: அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்: அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர்.
5அமளியுற்ற போர்க்களத்தில் போர்வீரன் அணிந்திருந்த காலணிகளும், இரத்தக் கறைபடிந்த ஆடைகள் அனைத்தும் நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும்.
6ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்: அவர் திருப்பெயரோ “வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்” என்று அழைக்கப்படும்.
7அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது: தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்: இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலை பெயராது உறுதிப்படுத்துவார்: படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.
8யாக்கோபுக்கு எதிராக ஓர் வார்த்தையை ஆண்டவர் அனுப்பியுள்ளார்: அது இஸ்ரயேல் மேல் இறங்கித் தன் செயலைச் செய்யும்.
9எப்ராயிமியர், சமாரியாவின் குடிகள் ஆகிய அனைத்து மக்களும் இதை அறிந்து கொள்வார்கள்.
10செருக்கினாலும் இதயத்தில் எழும் இறுமாப்பினாலும் அவர்கள் சொல்லுவதாவது: “செங்கல் கட்டடம் இடிந்து வீழ்ந்தது: எனினும், செதுக்கிய கற்களால் நாங்கள் கட்டியெழுப்புவோம். காட்டத்தி மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன: எனினும், அவற்றிற்குப் பதிலாகக் கேதுரு மரங்களை வைப்போம்”.
11ஆதலால் ஆண்டவர் இரட்சீனின் அதிகாரிகளை அவர்களுக்கு எதிராய்க் கிளர்ந்தெழச் செய்தார்: அவர்கள் பகைவரைத் தூண்டி விட்டார்.
12கிழக்கிலிருந்து சிரியரும், மேற்கிலிருந்து பெலிஸ்தியரும் வந்தார்கள்: தங்கள் வாயை விரிவாய்த்திறந்து இஸ்ரயேலரை விழுங்கிவிட்டார்கள்: இவையெல்லாம் நடந்தும், அவரது சீற்றம் தணியவிலலை: ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை.
13தங்களை நொறுக்க வைத்தவரிடம் மக்கள் திரும்பவில்லை: படைகளின் ஆண்டவரைத் தேடவுமில்லை.
14ஆதலால், ஆண்டவர் இஸ்ரயேலில் உயர்ந்தோர்முதல் தாழ்ந்தோர்வரை அனைவரையும், ஒலிவமரக்கிளையையும் நாணலையும் ஒரேநாளில் வெட்டி வீழ்த்துவார்:
15முதியவரும், மதிப்புமிக்கவருமே உயர்ந்தோர்: பொய்யைப் போதிக்கும் இறைவாக்கினரோ தாழ்ந்தோர்.
16இந்த மக்களை வழிநடத்தியோர் அவர்களை நெறிபிறழச் செய்தனர்: அவர்களால் வழி நடத்தப்பட்டவரோ அழிந்துபோயினர்.
17ஆதலால், அவர்களுடைய இளைஞரைக் குறித்து என் தலைவருக்கு மகிழ்ச்சி இல்லை: அவர்களிடையே வாழும் திக்கற்றோர், கைம்பெண்கள்மேல் இரக்கம் காட்டவில்லை: அவர்கள் அனைவரும்இறைப்பற்று இல்லாதவர்கள்: தீச்செயல் புரிபவர்கள்: எல்லாரும் மதிகேட்டையே பேசினர்: இவையெல்லாம் நடந்தும் அவர் சீற்றம் தணியவில்லை: ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை.
18கொடுமை தீயைப்போல் கொழுந்து விட்டு எரிந்தது: அது முட்புதர்களையும் நெருஞ்சி முள்களையும் தீய்த்துவிட்டது: காட்டின் அடர்ந்த பகுதிகளை அது கொளுத்தி விட்டது: அதனால் புகைமண்டலம் சுழன்று மேலே எழுந்தது.
19படைகளின் ஆண்டவரது சினத்தால் நாடு நெருப்புக்கு இரையானது: மக்கள் நெருப்புக்கு விறகைப் போல் ஆனார்கள்: ஒருவரும் தம் அடுத்திருப்பாரை விட்டு வைக்கவில்லை.
20அவர்கள் வலப்புறம் காண்பனவற்றைப் பிடுங்கித் தின்றும் பசி அடங்கவில்லை: இடப்புறம் இருப்பனவற்றை எடுத்து விழுங்கியும் மனம் நிறைவடையவில்லை: ஒவ்வொருவரும் தம் குழந்தையின் சதையைக் கூடத் தின்றனர்:
21மனாசே குடும்பத்தார் எப்ராயிம் குடும்பத்தாரையும் எப்ராயிம் குடும்பத்தார் மனாசே குடும்பத்தாரையும் கொன்று தின்றனர்: இரு குடும்பத்தாரும் ஒன்றுசேர்ந்து யூதாவின் மேல் பாய்ந்தனர்: இவையெல்லாம் நடந்தும் அவரது சீற்றம் தணியவில்லை: ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை:
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.