1 | அதன்பின் ஆண்டவர் என்னை நோக்கி: “நீ அகன்றதோர் வரை பலகையை எடுத்து அதில் மனிதர் எழுதுவதுபோல சாதாரண எழுத்துக்களில் மகேர் சாலால் கஸ்பாசைக்குறித்து எழுது. |
2 | உரியா என்ற குருவும் எபரேக்கியாவின் மகன் செக்கரியாவும் எனக்கு உண்மையுள்ள சாட்சிகளாயிருக்கட்டும்” என்றார். |
3 | நான் இறைவாக்கினளுடன் கூடியபொழுது அவள் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி, “அவனுக்கு 'மகேர்சாலால் கஸ்பாசு' என்று பெயரிடு. |
4 | ஏனெனில் இச்சிறுவன் “அப்பா, அம்மா” என்று அழைக்க அறியு முன்னே, தமஸ்கின் செல்வங்களும் சமாரியாவிலுள்ள கொள்ளைப் பொருள்களும் அசீரிய அரசனால் வாரிக்கொண்டு போகப்படும்” என்றார். |
5 | மீண்டும் ஆண்டவர் என்னோடு உரையாடி, |
6 | “அமைதியாய் ஓடுகின்ற சீலோவா சிற்றாற்றின் நீரை வேண்டாமென்று இந்த மக்கள் மறுத்து விட்டார்கள்: இரட்சீனையும், இரமலியாவின் மகனையும் கண்டு அச்சத்தால் துவண்டு வீழ்கிறார்கள். |
7 | ஆதலால் ஆண்டவர் ஆற்றலுடன் பெருக்கெடுத்தோடும் பேராற்றைப் போன்ற அசீரிய அரசனையும் அவன் மேன்மையான படைகள் அனைத்தையும் அவர்களுக்கு எதிராக அணிதிரண்டு வரச் செய்தார்: கால்வாய்கள் அனைத்தையும் அதன் வெள்ளம் நிரப்பும்: எல்லாக் கரைகள் மேலும் அது புரண்டு பாயும்: |
8 | எங்கும் வெள்ளக்காடாய், காட்டாறாய் ஓடும்: யூதா நாட்டுக்குள் புகுந்து அதன் கழுத்தை எட்டும்: இம்மானுவேலே, அதன் கிளைகள் உன் நாட்டின் பரப்பையெல்லாம் நிரப்பி நிற்கும்: |
9 | மக்களினங்களே, ஒருங்கிணையுங்கள்: ஆயினும் நொறுக்கப்படுவீர்கள்: தொலைநாட்டிலுள்ள அனைத்து மக்களே, செவிகொடுங்கள்: போருக்கென இடையைக் கட்டிக் கொள்ளுங்கள்: ஆயினும் கலக்கமுறுவீர்கள். போர்க்கோலம் கொள்ளுங்கள்: ஆயினும் முறியடிக்கப்படுவீர்கள். |
10 | ஒன்று கூடிச் சதித்திட்டம் தீட்டுங்கள்: அதுவும் விழலுக்கு இறைத்த நீராகும்: கூடிப்பேசி முடிவெடுங்கள்: அதுவும் பயனற்றுப் போகும். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார். |
11 | தமது வலிமையுள்ள கையை என்மேல் வைத்து ஆண்டவர் எனக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த மக்களின் வழிகளை நான் பின்பற்றாதிருக்க எனக்குக்கட்டளை பிறப்பித்தார்: |
12 | “இந்த மக்கள் சதித்திட்டம் என்று அழைப்பதையெல்லாம் நீங்கள் சதித்திட்டம் என்று சொல்லாதீர்கள். அவர்கள் எதற்கு அஞ்சி நடுங்குகிறார்களோ, அதற்கு நீங்கள் அஞ்சவேண்டாம், நடுங்கி நிலைகுலையவும் வேண்டாம்: |
13 | படைகளின் ஆண்டவர் ஒருவரையே தூயவர் எனப் போற்றுங்கள்: அவருக்கே அஞ்சுங்கள்: அவர் திருமுன்னேயே நடுங்குங்கள், |
14 | அவரே திருத்தூயகமாய் இருப்பார்: இஸ்ரயேலின் இரு குடும்பத்தாருக்கும், இடறு கல்லாகவும், தடுக்கிவிழச் செய்யும் கற்பாறையாகவும் இருப்பார்: எருசலேமில் குடியிருப்போருக்குப் பொறியும் கண்ணியுமாய் இருப்பார். |
15 | அவர்களில் பலர் தடுமாற்றம் அடைவர்: இடறிவீழ்ந்து நொறுக்கப்படுவர்: கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர். |
16 | இந்தச் சான்றுரையைப் பாதுகாப்பாயக் கட்டிவை: என் சீடரிடையே இந்த இறைக்கூற்றை முத்திரையிட்டு வை: |
17 | யாக்கோபு குடும்பத்தாருக்குத் தம் முகத்தை ஆண்டவர் மறைத்துள்ளார், ஆண்டவருக்காக நான் காத்திருப்பேன்: அவர்மேல் என் நம்பிக்கையை நிலைநிற்கச் செய்வேன். |
18 | படைகளின் ஆண்டவர் சீயோன் மலையில் குடி கொண்டிருக்கிறார்: நானும் அவர் எனக்களித்த குழந்தைகளும் இஸ்ரயேலில் அவருக்கு அடையாளங்களாகவும் அறிகுறிகளாகவும் இருக்கிறோம். |
19 | “மாயவித்தைக்காரரையும், முணுமுணுத்து மந்திரங்களை ஓதிக் குறி சொல்வோரையும் அணுகிக் குறி கேளுங்கள் என்று அவர்கள் உங்களிடம் சொல்வார்கள். மக்கள் தம் குலதெய்வத்தை நாடிக் குறி கேளாதிருப்பார்களோ? உயிருள்ளோருக்காகச் செத்தவர்களை விசாரிப்பதல்லவா முறைமை?” என்பார்கள். |
20 | “இறைக்கூற்றையும் சான்றுரையையும் நாடித்தேடுங்கள்” என்று அவர்கள் சொல்லாததனால் அவர்களுக்கு விடிவு காலம் வராது என்பது உறுதி. |
21 | பெருந்துன்பத்தோடும், பசிக்கொடுமையோடும் அவர்கள் நாட்டைக் கடந்து செல்வார்கள்: பசியால் வாடி வதங்கும்போது வெறிகொண்டு தங்கள் அரசனையும், தெய்வத்தையும் வசை மொழியால் சபிப்பார்கள்: முகத்தை உயர்த்தி அண்ணார்ந்து பார்ப்பார்கள். |
22 | தலையைத் தாழ்த்தித் தரையை உற்று நோக்குவார்கள்: எங்கு நோக்கினும் காரிருள், கடுந்துயர், மன வேதனைகளே புலப்படும்: காரிருள் அவர்களை ஆட்கொள்ளும். |