1 | ஒருவன் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் பசுவானாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன். |
2 | அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். |
3 | பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும் |
4 | இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக. |
5 | அதை ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின் நெருப்பிலுள்ள கட்டைகளின்மேல் வைக்கப்பட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மேல் போட்டு எரிக்கக்கடவர்கள்; இது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி. |
6 | அவன் கர்த்தருக்குச் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதைச் செலுத்துவானாக. |
7 | அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து |
8 | தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். |
9 | பின்பு அவன் சமாதானபலியிலே அதின் கொழுப்பையும், நடுஎலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும் அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும் |
10 | இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன். |
11 | அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் செலுத்தும் தகன ஆகாரம். |
12 | அவன் செலுத்துவது வெள்ளாடாக இருக்குமானால், அவன் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, |
13 | அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். |
14 | அவன் அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள் மேலிருக்கிற கொழுப்பு முழுவதையும் |
15 | இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன். |
16 | ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளை எரிக்கக்கடவன்; இது நறுமண வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது. |
17 | கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் சாப்பிடக்கூடாது; இது உங்களுடைய குடியிருப்புகள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருக்கும் என்று சொல் என்றார். |