1 | ஒருவன் உணவுபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டுமானால், அவனுடைய காணிக்கை மெல்லிய மாவாக இருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் ஊற்றி, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு |
2 | அதை ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் நன்றியின் அடையாளமாக எரிக்கக்கடவன்; அது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி. |
3 | அந்த உணவுபலியில் மீதியாக இருப்பது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது. |
4 | நீ படைப்பது அடுப்பில் சமைக்கப்பட்ட உணவுபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்பட்ட புளிப்பில்லாத அதிரசங்களாகவோ, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளாகவோ இருப்பதாக. |
5 | நீ படைப்பது அடுப்பில் தட்டையான பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவுபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்யப்பட்டதாக இருப்பதாக. |
6 | அதைத் துண்டுதுண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் ஊற்றுவாயாக; இது ஒரு உணவுபலி. |
7 | நீ படைப்பது அடுப்பில் பொரிக்கும் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு பலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக. |
8 | இப்படிச் செய்யப்பட்ட உணவுபலியைக் கர்த்தருக்குச் செலுத்துவாயாக; அது ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படும்போது, அவன் அதைப் பலிபீடத்தின் அருகில் கொண்டுவந்து |
9 | அந்த சமைக்கப்பட்ட உணவுபலியிலிருந்து ஆசாரியன் நன்றியின் அடையாளமாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி. |
10 | இந்த உணவுபலியில் மீதியானது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; கர்த்தருக்குச் செலுத்தும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது. |
11 | நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த உணவுபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவு உள்ளவைகளையும் தேன் உள்ளவைகளையும் கர்த்தருக்குத் தகனபலியாக எரிக்கவேண்டாம். |
12 | முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து, அவைகளைக் கர்த்தருக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகளை நறுமண வாசனையாக எரிக்கக்கூடாது. |
13 | நீ படைக்கிற எந்த உணவுபலியிலும் உப்பு சேர்க்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் உணவுபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக. |
14 | முதற்பலன்களை உணவுபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், புதிய பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் உணவுபலியாகக் கொண்டுவரக்கடவாய். |
15 | அதின்மேல் எண்ணெய் ஊற்றி அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு உணவுபலி. |
16 | பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, நன்றியின் அடையாளமான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றுடன் எரிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு செலுத்தும் தகனபலி. |