வேதாகமத்தை வாசி

Click to Subscribe

ஓசியா 12

                   
புத்தகங்களைக் காட்டு
1எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் பெருக்கச்செய்து, அசீரியருடன் உடன்படிக்கை செய்கிறான்; எகிப்திற்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது.
2யூதாவோடும் கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்கு ஏற்றபடி விசாரிக்கப்போகிறார்; அவன் செயல்களுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார்.
3அவன் தாயின் கர்ப்பத்தில் தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான்; தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்.
4அவன் தூதனுடன் போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.
5கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நிலையான நாமம்.
6இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு.
7அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயம்செய்ய விரும்புகிறான்.
8எப்பிராயீம்: நான் செல்வந்தனானேன்; நான் பொருளைச் சம்பாதித்தேன்; நான் முயற்சிசெய்து தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று சொல்லுகிறான்.
9உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்தது முதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான், பண்டிகை நாட்களில் செய்யப்படுகிறதுபோல், மீண்டும் உன்னைக் கூடாரங்களில் தங்கியிருக்கச்செய்வேன்.
10அப்படியே தீர்க்கதரிசிகளுடன் சொன்னேன்; நான் அநேகம் தரிசனங்களை கொடுத்தேன்; தீர்க்கதரிசிகளைக் கொண்டு உவமைகளால் பேசினேன்.
11கீலேயாத் அக்கிரமத்தின் இடமோ? ஆம், அவர்கள் பொய்யரானார்கள்; கில்காலிலே காளைகளைப் பலியிடுகிறார்கள்; அவர்களுடைய பீடங்கள் வயல்வரப்புகளில் இருக்கிற கற்குவியல்களைப்போல் இருக்கிறது.
12யாக்கோபு சீரியா தேசத்திற்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக வேலைசெய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.
13கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான்.
14எப்பிராயீமோ அவரை மிகவும் கோபப்படுத்தினான்; ஆகையால் அவனுடைய ஆண்டவர் அவனுடைய இரத்தப்பழிகளை அவன்மேல் சுமத்தி, அவன் செய்த இகழ்ச்சியை அவன்மேல் திருப்புவார்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.