வேதாகமத்தை வாசி

யாத்திராகமம் 22

                   
புத்தகங்களைக் காட்டு
1ஒருவன் ஒரு மாட்டையோ ஒரு ஆட்டையோ திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நான்கு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கவேண்டும்.
2திருடன் திருடும்போது கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவனுடைய இரத்தப்பழி அடித்தவனைச் சேராது.
3சூரியன் அவன்மேல் உதித்தபின்பு, அவனுடைய இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவனுடைய கையில் ஒன்றும் இல்லாமல் இருந்தால், தான் செய்த திருட்டுக்காக விற்கப்படுவான்.
4அவன் திருடின மாடோ, கழுதையோ, ஆடோ உயிருடன் அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இருமடங்காக அவன் கொடுக்கவேண்டும்.
5ஒருவன் மற்றவனுடைய வயலிலோ திராட்சைத்தோட்டத்திலோ தன்னுடைய மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன்னுடைய சொந்தவயலிலும் திராட்சைத்தோட்டத்திலும் உள்ள பலனில் சிறந்ததை எடுத்து, பதிலுக்குக் கொடுக்கவேண்டும்.
6அக்கினி எழும்பி, முட்களில் பற்றி, தானியப்போரையோ, விளைந்த பயிரையோ, வயலிலுள்ள வேறு எதையாவது எரித்துப்போட்டால், அக்கினியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதத்திற்கு ஈடு செய்யவேண்டும்.
7ஒருவன் பிறனிடம் பணத்தையோ, பொருட்களையோ பாதுகாப்பிற்காக வைத்திருக்கும்போது, அது அவனுடைய வீட்டிலிருந்து திருட்டுப்போனால், திருடன் அகப்பட்டால், அவன் அதற்கு இருமடங்காக கொடுக்கவேண்டும்.
8திருடன் அகப்படாவிட்டால், அந்த வீட்டுக்காரன் தான் பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடம் அவனைக் கொண்டுபோகவேண்டும்.
9காணாமல்போன மாடு, கழுதை, ஆடு, உடை முதலியவைகளில் ஏதாவது ஒன்றை வேறொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றம்சொன்னால், இரண்டு பேர்களுடைய வழக்கும் நியாயாதிபதிகளிடம் வரவேண்டும்; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இருமடங்கு கொடுக்கவேண்டும்.
10ஒருவன் தன்னுடைய கழுதையையோ மாட்டையோ ஆட்டையோ மற்ற ஏதாவதொரு மிருகஜீவனையோ ஒருவனிடம் விட்டிருக்கும்போது, அது செத்தாலும், காயப்பட்டாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும்
11அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று கர்த்தரின் நாமத்தில் ஆணையிட்டால் அவர்கள் இருவருக்கும் அதுவே நியாயம்தீர்க்கட்டும்; உடையவன் அதை அங்கீகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கத்தேவையில்லை.
12அது அவனிடமிருந்து திருடப்பட்டுப்போனால், அவன் அதனுடைய எஜமானுக்கு அதற்காக ஈடுகொடுக்கவேண்டும்.
13அது வேட்டையாடப்பட்டுப்போனால், அதற்கு சாட்சியை ஒப்புவிக்கவேண்டும். வேட்டையாடப்பட்டதற்காக அவன் ஈடுகொடுக்கத் தேவையில்லை.
14ஒருவன் பிறனிடம் எதையாவது இரவலாக வாங்கியிருந்தால், அதற்குரியவன் கூட இல்லாதபோது, அது காயப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு ஈடுசெய்யவேண்டும்.
15அதற்குரியவன் கூட இருந்தால், அவன் ஈடுகொடுக்கத் தேவையில்லை; அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால், அது அவனுடைய வாடகைக்கு வந்த சேதம்.
16திருமணத்திற்கு நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடு உறவுகொண்டால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளைத் திருமணம்செய்யவேண்டும்.
17அவளுடைய தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னால், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிசமுறையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.
18சூனியக்காரியை உயிரோடு வைக்கவேண்டாம்.
19மிருகத்தோடு உறவுவைக்கிற எவனும் கொல்லப்படவேண்டும்.
20கர்த்தர் ஒருவரைத்தவிர வேறு தெய்வங்களுக்குப் பலியிடுகிறவன் அழிக்கப்படவேண்டும்.
21அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே.
22விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;
23அவர்களை அதிகமாக ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாகக் கேட்டு
24கோபமடைந்து, உங்களைப் பட்டயத்தால் கொலைசெய்வேன்; உங்களுடைய மனைவிகள் விதவைகளும், உங்களுடைய பிள்ளைகள் திக்கற்றப் பிள்ளைகளுமாவார்கள்.
25உங்களுக்குள் ஏழையாக இருக்கிற என்னுடைய மக்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடம் வட்டி வாங்கவேண்டாம்.
26பிறனுடைய ஆடையை பதிலாக வாங்கினால், பொழுதுமறையும் முன்பே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக.
27அவன் ஆடை அதுதானே, அதுவே அவன் தன்னுடைய உடலை மூடிக்கொள்ளுகிற துணி; வேறு எதினாலே போர்த்திப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுடைய வார்த்தையைக் கேட்பேன், நான் இரக்கமுள்ளவராக இருக்கிறேன்.
28தேவனை நிந்திக்காமலும், உன்னுடைய மக்களை ஆளுகிறவர்களைச் சபிக்காமலும் இரு.
29முதல் முதல் பழுக்கும் உன்னுடைய பழத்தையும், வடியும் உன்னுடைய ஆலையின் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன்னுடைய மகன்களில் முதலில் பிறந்தவனை எனக்குக் கொடுப்பாயாக.
30உன்னுடைய மாடுகளிலும் உன்னுடைய ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக; குட்டியானது ஏழுநாட்கள் தன்னுடைய தாயோடு இருக்கட்டும்; எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக.
31நீங்கள் எனக்குப் பரிசுத்த மனிதர்களாக இருக்கவேண்டும்; வெளியிலே பீறுண்ட இறைச்சியைச் சாப்பிடாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.