| 1 | ஓய்வுநாளின் பாடல் கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைப் புகழ்ந்து பாடுவதும் |
| 2 | பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும் |
| 3 | காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும். |
| 4 | கர்த்தாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் செயல்களுக்காக ஆனந்த சத்தமிடுவேன். |
| 5 | கர்த்தாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள். |
| 6 | மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; மூடன் அதை உணரமாட்டான். |
| 7 | துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும். |
| 8 | கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர். |
| 9 | கர்த்தாவே, உமது எதிரிகள் அழிவார்கள்; உமது எதிரிகள் அழிந்தேபோவார்கள்; எல்லா அக்கிரமக்காரர்களும் சிதறப்பட்டுபோவார்கள். |
| 10 | என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறேன். |
| 11 | என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்; எனக்கு விரோதமாக எழும்புகிற துன்மார்க்கர்களுக்கு நேரிடுவதை என்னுடைய காது கேட்கும். |
| 12 | நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். |
| 13 | கர்த்தருடைய ஆலயத்திலே நடப்பட்டவர்கள் எங்களுடைய தேவனுடைய முற்றங்களில் செழித்திருப்பார்கள். |
| 14 | கர்த்தர் உத்தமரென்றும், என்னுடைய கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கச்செய்யும்படி |
| 15 | அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாக இருப்பார்கள். |