| 1 | உன்னதமானவரின் மறைவில் இருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். |
| 2 | நான் கர்த்தரை நோக்கி: நீர் என்னுடைய அடைக்கலம், என்னுடைய கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். |
| 3 | அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். |
| 4 | அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும். |
| 5 | இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும் |
| 6 | இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் வியாதிகளுக்கும் பயப்படாமல் இருப்பாய். |
| 7 | உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும், உன்னுடைய வலதுபுறத்தில் பத்தாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. |
| 8 | உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய். |
| 9 | எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்கு அடைக்கலமாகக்கொண்டாய். |
| 10 | ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன்னுடைய கூடாரத்தை அணுகாது. |
| 11 | உன்னுடைய வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். |
| 12 | உன்னுடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள். |
| 13 | சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய். |
| 14 | அவன் என்னிடத்தில் வாஞ்சையாக இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என்னுடைய பெயரை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். |
| 15 | அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்திரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடு இருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். |
| 16 | நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என்னுடைய இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன். |