| 1 | ஆசாபின் மஸ்கீல் என்னும் போதகப் பாடல் என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள். |
| 2 | என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்; ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன். |
| 3 | அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். |
| 4 | பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம். |
| 5 | அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை நிறுவி, அவைகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். |
| 6 | இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்; |
| 7 | தேவன்மேல் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறக்காமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்; |
| 8 | இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்களுடைய பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார். |
| 9 | ஆயுதமணிந்த வில்வீரர்களான எப்பிராயீமீர்கள் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள். |
| 10 | அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதிக்காமலும் |
| 11 | அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள். |
| 12 | அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார். |
| 13 | கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து, தண்ணீரைக் குவியலாக நிற்கும்படிச் செய்தார். |
| 14 | பகலிலே மேகத்தினாலும், இரவுமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார். |
| 15 | பாலைவனத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார். |
| 16 | கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படச்செய்து, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார். |
| 17 | என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, பாலைவனத்திலே உன்னதமானவருக்குக் கோபம் மூட்டினார்கள். |
| 18 | தங்களுடைய ஆசைக்கேற்ற உணவைக்கேட்டு, தங்களுடைய இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். |
| 19 | அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசி: தேவன் பாலைவனத்திலே உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ? |
| 20 | இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாகப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கமுடியுமோ? தம்முடைய மக்களுக்கு இறைச்சியையும் ஆயத்தப்படுத்துவாரோ என்றார்கள். |
| 21 | ஆகையால் கர்த்தர் அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசிக்காமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால் |
| 22 | யாக்கோபுக்கு விரோதமாக நெருப்பு பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கோபம் மூண்டது. |
| 23 | அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து |
| 24 | மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாகப் பெய்யச்செய்து, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். |
| 25 | தூதர்களின் அப்பத்தை மனிதன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாக அனுப்பினார். |
| 26 | வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து |
| 27 | இறைச்சியை தூளைப்போலவும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலளவாகவும் பெய்யச்செய்து |
| 28 | அவைகளை அவர்கள் முகாமின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கச்செய்தார். |
| 29 | அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்; அவர்கள் ஆசைப்பட்டதை அவர்களுக்குக் கொடுத்தார். |
| 30 | அவர்கள் தங்களுடைய ஆசையை வெறுக்கவில்லை; அவர்களுடைய உணவு அவர்களுடைய வாயில் இருக்கும்போதே. |
| 31 | தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களை அழித்து, இஸ்ரவேலில் வாலிபர்களை விழச்செய்தார். |
| 32 | இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள். |
| 33 | ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும், அவர்கள் வருடங்களைப் பயங்கரத்திலும் கழியச்செய்தார். |
| 34 | அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி; |
| 35 | தேவன் தங்களுடைய கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்களுடைய மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள். |
| 36 | ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி, தங்களுடைய நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள். |
| 37 | அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை. |
| 38 | அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல், அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார். |
| 39 | அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார். |
| 40 | எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி, பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள். |
| 41 | அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை எரிச்சலூட்டினார்கள். |
| 42 | அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள். |
| 43 | அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார். |
| 44 | அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமுடியாதபடி செய்தார். |
| 45 | அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். |
| 46 | அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய உழைப்பின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார். |
| 47 | கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து |
| 48 | அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார். |
| 49 | தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும், பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். |
| 50 | அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல், அவர்கள் உயிரைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார். |
| 51 | எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பிறந்த எல்லோரையும் அழித்து; |
| 52 | தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து, அவர்களை வனாந்திரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்; |
| 53 | அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாக வழிநடத்தினார்; அவர்கள் எதிரிகளைக் கடல் மூடிப்போட்டது. |
| 54 | அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்த மலைவரைக்கும் அழைத்துக்கொண்டுவந்து |
| 55 | அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார். |
| 56 | ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமல்போய் |
| 57 | தங்களுடைய தகப்பன்மார்களைப்போல வழிவிலகி, துரோகம்செய்து, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு |
| 58 | தங்களுடைய மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்களுடைய விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள். |
| 59 | தேவன் அதைக் கேட்டு கடுங்கோபமடைந்து, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து |
| 60 | தாம் மனிதர்களுக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி |
| 61 | தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து |
| 62 | தமது மக்களை வாளுக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார். |
| 63 | அவர்கள் வாலிபர்களை நெருப்பு எரித்தது, அவர்களுடைய கன்னிப்பெண்கள் வாழ்க்கைப்படாமலிருந்தார்கள். |
| 64 | அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை. |
| 65 | அப்பொழுது ஆண்டவர் தூக்கம் தெளிந்தவனைப்போலவும், திராட்சைரசத்தால் கெம்பீரிக்கிற பலசாலியைப்போலவும் விழித்து |
| 66 | தம்முடைய எதிரிகளைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரச்செய்தார். |
| 67 | அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல் |
| 68 | யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார். |
| 69 | தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார். |
| 70 | தம்முடைய ஊழியனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார். |
| 71 | கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய மக்களாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார். |
| 72 | இவன் அவர்களைத் தன்னுடைய இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன்னுடைய கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான். |