| 1 | எதுதூன் என்னும் இராகத்தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஆசாபின் பாடல் நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார். |
| 2 | என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது. |
| 3 | நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என்னுடைய ஆவி சோர்ந்துபோனது. (சேலா) |
| 4 | நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமுடியாதபடி கலக்கமடைகிறேன். |
| 5 | ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன். |
| 6 | இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து, என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது. |
| 7 | ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயை செய்யாமலிருப்பாரோ? |
| 8 | அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோனதோ? |
| 9 | தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா) |
| 10 | அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருடங்களை நினைவுகூருவேன். |
| 11 | கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய ஆரம்பகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; |
| 12 | உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன். |
| 13 | தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்? |
| 14 | அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; மக்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கச்செய்தீர். |
| 15 | யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை, உமது வல்லமையினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா) |
| 16 | தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே, தண்ணீர்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது. |
| 17 | மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது. |
| 18 | உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் உலகை பிரகாசிக்கச் செய்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது. |
| 19 | உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமல்போனது. |
| 20 | மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர். |