| 1 | தாவீதின் பாடல் தேவ பிள்ளைகளே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். |
| 2 | கர்த்தருடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள். |
| 3 | கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார். |
| 4 | கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது. |
| 5 | கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார். |
| 6 | அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும், சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார். |
| 7 | கர்த்தருடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும். |
| 8 | கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார். |
| 9 | கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும் கர்த்தருக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள். |
| 10 | கர்த்தர் பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார். |
| 11 | கர்த்தர் தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது மக்களுக்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார். |