| 1 | இதினால் என் இருதயம் தத்தளித்து, தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது. |
| 2 | அவருடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாகக் கேளுங்கள். |
| 3 | அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார். |
| 4 | அதற்குப்பின்பு அவர் சத்தமாக முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறச்செய்கிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது. |
| 5 | தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாகக் குமுறச் செய்கிறார்; நாம் விளங்கமுடியாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார். |
| 6 | அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார். |
| 7 | தாம் உண்டாக்கின எல்லா மனிதரும் தம்மை அறியவேண்டுமென்று, அவர் எல்லா மனிதருடைய கைகளையும் முடக்கிப்போடுகிறார். |
| 8 | அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும். |
| 9 | தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும். |
| 10 | தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது தண்ணீரின் மேற்பரப்பு உறைந்துபோகும். |
| 11 | அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறவைக்கிறார். |
| 12 | அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியவைக்கிறார். |
| 13 | ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரச்செய்கிறார். |
| 14 | யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும். |
| 15 | தேவன் அவைகளைத் திட்டமிட்டு, தம்முடைய மேகத்தின் மின்னலை மின்னச்செய்யும் விதத்தை அறிவீரோ? |
| 16 | மேகங்கள் தொங்கும்படி வைக்கும் எடையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும் |
| 17 | தென்றலினால் அவர் பூமியை அமைக்கும்போது, உம்முடைய ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையையும் அறிவீரோ? |
| 18 | செய்யப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவருடன் இருந்து விரித்தீரோ? |
| 19 | அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்; இருளின் காரணமாக முறைதவறிப் பேசுகிறோம். |
| 20 | நான் பேசத்துணிந்தேன் என்று யாராவது ஒருவன் அவருக்கு முன்பாகச் சொல்லமுடியுமோ? ஒருவன் பேசத்துணிந்தால் அவன் அழிக்கப்பட்டுப்போவானே. |
| 21 | இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கச் செய்திருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான கதிர்கள் வருகிறபோது |
| 22 | ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கமுடியாதே; தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு. |
| 23 | சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கமுடியாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகா நீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார். |
| 24 | ஆகையால் மனிதர் அவருக்குப் பயப்படவேண்டும்; தங்கள் மனதில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார் என்றான். |