| 1 | பின்னும் எலிகூ: |
| 2 | நான் பேசிமுடியும்வரை சற்றேபொறும்; இன்னும் தேவனின் சார்பாக நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக் காண்பிப்பேன். |
| 3 | நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கச்செய்வேன். |
| 4 | மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்; உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன். |
| 5 | இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர். |
| 6 | அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார். |
| 7 | அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களுடன் சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த இடத்தில் என்றைக்கும் அமர்ந்திருக்கவும் செய்கிறார். |
| 8 | அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும் |
| 9 | அவர், அவர்களுடைய செயல்களையும், அதிகமான அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி |
| 10 | அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார். |
| 11 | அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருடங்களைச் செழிப்பான வாழ்வாகவும் போக்குவார்கள். |
| 12 | அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி, ஞானம் அடையாமல் இறந்துபோவார்கள். |
| 13 | மாயமுள்ள இருதயத்தார் கோபத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள். |
| 14 | அவர்கள் இளவயதிலே இறந்துபோவார்கள்; இழிவானவர்களுக்குள்ளே அவர்கள் இறப்பார்கள். |
| 15 | சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு விலக்கி, அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கும்போது அவர்கள் செவியைத் திறக்கிறார். |
| 16 | அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி, இடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய உணவுப்பந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும். |
| 17 | ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்; நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும். |
| 18 | கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால் அவர் உம்மை ஒரு அடியினால் அழித்துவிடாமலிருக்க எச்சரிக்கையாயிரும்; அப்பொழுது மீட்கும் பொருளை அதிகமாகக் கொடுத்தாலும் அதற்கு நீர் தப்பமாட்டீர். |
| 19 | உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே. |
| 20 | மக்கள் தங்கள் இடத்தைவிட்டு அழிந்துபோகச்செய்கிற இரவை விரும்பாதிரும். |
| 21 | பாவத்தைத் திரும்பவும் செய்யாமல் எச்சரிக்கையாயிரும்; உபத்திரவத்தைவிட அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே. |
| 22 | இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப் போல் போதிக்கிறவர் யார்? |
| 23 | அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்? |
| 24 | மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும். |
| 25 | எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனிதருக்கு வெளிப்படுகிறது. |
| 26 | இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருடங்களின் தொகை எண்ணமுடியாதது. |
| 27 | அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது. |
| 28 | அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது. |
| 29 | மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ? |
| 30 | இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்; சமுத்திரத்தை இருளால் மூடுகிறார். |
| 31 | அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும், ஆகாரம்கொடுத்து காப்பாற்றுகிறவருமாயிருக்கிறார். |
| 32 | அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, அது எவைகளையெல்லாம் அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார். |
| 33 | அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும், புயல் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் தெரியப்படுத்தும். |