| 1 | யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும். |
| 2 | இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும். |
| 3 | என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாக பேசும். |
| 4 | தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது. |
| 5 | உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி கொடும்; நீர் ஆயத்தப்பட்டு எனக்கு முன்பாக நில்லும். |
| 6 | இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன். |
| 7 | இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்காது. |
| 8 | நான் என் காதாலே கேட்க நீர் சொன்னதும், நான் கேள்விப்பட்ட உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்: |
| 9 | நான் மீறுதல் இல்லாத சுத்தமுள்ளவன், நான் குற்றமற்றவன், என்னில் பாவமில்லை. |
| 10 | இதோ, என்னில் அவர் குற்றம் கண்டுபிடிக்கப்பார்க்கிறார், என்னைத் தமக்கு எதிரியாக நினைத்துக்கொள்ளுகிறார். |
| 11 | அவர் என் கால்களைத் தொழுவத்திலே அடைத்து, என் நடைகளையெல்லாம் காவல் வைக்கிறார் என்று சொன்னீர். |
| 12 | இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்கு மறுமொழியாகச் சொல்லுகிறேன்; மனிதனைவிட தேவன் பெரியவராயிருக்கிறார். |
| 13 | அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் குறித்துக் காரணம் சொல்லவில்லையென்று நீர் அவருடன் ஏன் வழக்காடுகிறீர்? |
| 14 | தேவன் ஒரு முறை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம் முறை பார்த்து மாற்றுகிறவரல்லவே. |
| 15 | ஆழ்ந்த தூக்கம் மனிதர்மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் படுத்திருக்கும்போது |
| 16 | அவர் இரவு நேரத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனிதருடைய காதுகளுக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே பயமுறுத்தி |
| 17 | மனிதன் தன்னுடைய செயலைவிட்டு நீங்கவும், மனிதருடைய பெருமை அடங்கவும் செய்கிறார். |
| 18 | இவ்விதமாக அவனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் உயிரைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார். |
| 19 | அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் எல்லா எலும்புகளிலும் கடுமையான வியாதியினாலும் தண்டிக்கப்படுகிறான். |
| 20 | அவன் உயிர் அப்பத்தையும், அவனுடைய ஆத்துமா ருசிகரமான ஆகாரத்தையும் வெறுக்கும். |
| 21 | அவனுடைய உடல் காணப்படாமல் அழிந்து, மூடப்பட்டிருந்த அவனுடைய எலும்புகள் வெளிப்படுகிறது. |
| 22 | அவனுடைய ஆத்துமா பாதாளத்திற்கும், அவனுடைய உயிர் மரணத்திற்கும் நெருங்குகிறது. |
| 23 | ஆயிரத்தில் ஒருவராகிய பரிந்துபேசுகிற தூதனானவர் மனிதனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிப்பதற்கு, அவனுக்கு சாதகமாக இருந்தாரென்றால் |
| 24 | அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காமல் இருக்க: நீர் அவனைக் காப்பாற்றும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார். |
| 25 | அப்பொழுது அவனுடைய உடல் வாலிபத்தில் இருந்ததைவிட ஆரோக்கியமடையும்; தன் இளவயது நாட்களுக்குத் திரும்புவான். |
| 26 | அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது, அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்துடன் பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனிதனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார். |
| 27 | அவன் மனிதரை நோக்கிப் பார்த்து: நான் பாவம் செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பலன் கொடுக்கவில்லை. |
| 28 | என் ஆத்துமா படுகுழியில் இறங்காமல் இருக்க, அவர் அதை காப்பாற்றுவார் ஆகையால் என் உயிர் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான். |
| 29 | இதோ, தேவன் மனிதனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை உயிருள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பதற்கும் |
| 30 | அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார். |
| 31 | யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும். |
| 32 | சொல்லவேண்டிய நியாயங்கள் இருந்ததென்றால், எனக்குப் பதில் கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க எனக்கு ஆசையுண்டு. |
| 33 | ஒன்றும் இல்லாதிருந்ததென்றால் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன் என்றான். |