| 1 | அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக: |
| 2 | ஒரு மனிதன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் நன்மையாக இருக்கிறதினால் தேவனுக்கு நன்மையாக இருப்பானோ? |
| 3 | நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ? |
| 4 | அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி, உம்முடன் நியாயத்திற்கு வருவாரோ? |
| 5 | உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ? |
| 6 | காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர். |
| 7 | மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும், பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர். |
| 8 | பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது; கனவான் அதில் குடியேறினான். |
| 9 | விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது. |
| 10 | ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; திடீரென்று உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கச் செய்கிறது. |
| 11 | நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது, பெருவெள்ளம் உம்மை மூடுகிறது. |
| 12 | தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது. |
| 13 | நீர்: தேவன் எப்படி அறிவார், இருளுக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ? |
| 14 | அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; வானமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர். |
| 15 | அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ? |
| 16 | காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது. |
| 17 | தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள். |
| 18 | ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. |
| 19 | எங்கள் நிலைமை அழியாமல், அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள். |
| 20 | குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான். |
| 21 | நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும். |
| 22 | அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன். |
| 23 | நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அநீதியை உமது கூடாரத்திற்குத் தூரமாக்குவீர். |
| 24 | அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர். |
| 25 | அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார். |
| 26 | அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர். |
| 27 | நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர். |
| 28 | நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும். |
| 29 | மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள். |
| 30 | குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினால் அவன் விடுவிக்கப்படுவான் என்றான். |