| 1 | யோபு மறுமொழியாக: |
| 2 | என் வசனத்தைக் கவனமாகக் கேளுங்கள்; இது நீங்கள் என்னை ஆறுதல் செய்வதுபோல இருக்கும். |
| 3 | நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; நான் பேசினபின்பு கேலிசெய்யுங்கள். |
| 4 | நான் மனிதனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? அப்படியானாலும் என் ஆவி வேதனைப்படாதிருக்குமா? |
| 5 | என்னைக் கவனித்துப்பாருங்கள், அப்பொழுது நீங்கள் ஆச்சரியப்பட்டு, உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள். |
| 6 | இதை நான் நினைக்கும்போது கலங்குகிறேன்; நடுக்கம் என் சரீரத்தைப் பிடிக்கும். |
| 7 | துன்மார்க்கர் முதிர்வயதுவரை உயிருடனிருந்து, ஏன் வல்லவராகவேண்டும்? |
| 8 | அவர்களுடன் அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள். |
| 9 | அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரமாக இருக்கும்; தேவனுடைய தண்டனை அவர்கள்மேல் வருகிறதில்லை. |
| 10 | அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது. |
| 11 | அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள். |
| 12 | அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள். |
| 13 | அவர்கள் செல்வந்தர்களாகத் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். |
| 14 | அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்பவில்லை; |
| 15 | சர்வவல்லவரை நாம் ஆராதிக்க அவர் யார்? அவரை நோக்கி ஜெபம் செய்வதினால் நமக்கு பலன் என்ன என்கிறார்கள். |
| 16 | ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிருக்காது; துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. |
| 17 | எத்தனை வேகமாக துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்; அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கும்போது, அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும். |
| 18 | அவர்கள் காற்றின் திசையிலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள். |
| 19 | தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவனுடைய பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; அவன் உணர்வடையும்விதத்தில் அதை அவனுக்குப் பலிக்கச் செய்கிறார். |
| 20 | அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய கடுங்கோபத்தை குடிப்பான். |
| 21 | அவனுடைய மாதங்களின் தொகை குறைக்கப்படும்போது, அவனுக்குப் பிறகு அவனுடைய வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன? |
| 22 | உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்? |
| 23 | ஒருவன் நிர்வாகத்துடனும் சுகத்துடனும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய் இறக்கிறான். |
| 24 | அவனுடைய உடல் கொழுப்பால் நிறைந்திருக்கிறது, அவனுடைய எலும்புகளில் ஊன் உறுதியாயிருக்கிறது. |
| 25 | வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்துடன் சாப்பிடாமல், மனவேதனையுடன் இறக்கிறான். |
| 26 | இருவரும் சமமாக மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; புழுக்கள் அவர்களை மூடும். |
| 27 | இதோ, நான் உங்கள் நினைவுகளையும், நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாகக் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன். |
| 28 | பிரபுவின் வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே? என்று சொல்லுகிறீர்கள். |
| 29 | வழியிலே நடந்து போகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா, அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா? |
| 30 | துன்மார்க்கன் ஆபத்து நாளுக்காக வைக்கப்படுகிறான்; அவனுடைய கோபாக்கினையின் நாளுக்காக கொண்டுவரப்படுகிறான். |
| 31 | அவனுடைய வழியை அவனுடைய முகத்திற்கு முன்பாக எடுத்துக் காட்டுகிறவன் யார்? அவனுடைய செய்கைக்குத் தக்க பலனை அவனுக்கு ஈடுகட்டுகிறவன் யார்? |
| 32 | அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; அவனுடைய கல்லறை காக்கப்பட்டிருக்கும். |
| 33 | பள்ளத்தாக்கின் புழுதி மண்கள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; அவனுக்கு முன்னாக அனேக மக்கள் போனதுபோல, அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்திற்குச் செல்லுவார்கள். |
| 34 | நீங்கள் வீணாக எனக்கு ஆறுதலை சொல்லுகிறது என்ன? உங்கள் மறுமொழிகளில் முழுவதும் பொய் இருக்கிறது என்றான். |