| 1 | யோபு மறுமொழியாக: |
| 2 | நீங்கள் எதுவரைக்கும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்? |
| 3 | இப்போது பத்துமுறை என்னை நிந்தித்தீர்கள்; நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை. |
| 4 | நான் தவறாக நடந்தது உண்மையானாலும், என் தவறு என்னுடன்தான் இருக்கிறது. |
| 5 | நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்று இருப்பீர்கள் என்றால் |
| 6 | தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள். |
| 7 | இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை. |
| 8 | நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார். |
| 9 | என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் தலையின் கிரீடத்தை எடுத்துப்போட்டார். |
| 10 | அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார். |
| 11 | அவர் தமது கோபத்தை என்மேல் எரியச் செய்தார்; என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார். |
| 12 | அவருடைய தண்டுப்படைகள் ஏகமாக வந்து, எனக்கு விரோதமாகத் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றி முகாமிட்டார்கள். |
| 13 | என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள். |
| 14 | என் சொந்தமக்கள் விலகிப்போனார்கள். என் நண்பர்கள் என்னை மறந்துவிட்டார்கள். |
| 15 | என் வீட்டு மக்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக நினைக்கிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் நிலையற்றவன். |
| 16 | நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு பதில் கொடுக்கமாட்டான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று. |
| 17 | என் மூச்சு என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன். |
| 18 | சிறுபிள்ளைகளும் என்னை அசட்டை செய்கிறார்கள்; நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள். |
| 19 | என் உயிர்நண்பர்கள் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் நேசித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள். |
| 20 | என் எலும்புகள் என் தோலுடனும் என் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது. |
| 21 | என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது. |
| 22 | தேவனைப்போல நீங்களும் என்னை ஏன் துன்பப்படுத்தவேண்டும்? என் உடல் எரிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியில்லாமல் இருக்கிறதென்ன? |
| 23 | ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புத்தகத்தில் வரையப்பட்டு |
| 24 | அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும், ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும். |
| 25 | என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். |
| 26 | இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன். |
| 27 | அவரை நானே பார்ப்பேன்; வேறே கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த ஏக்கத்தினால் என் உள்ளிருக்கும் உறுப்புகள் எனக்குள் சோர்ந்துபோகிறது. |
| 28 | காரியத்தின் காரணம் எனக்குள் கண்டுபிடிக்கப்படும்போது, நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே. |
| 29 | பட்டயத்திற்குப் பயப்படுங்கள்; நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியவேண்டுமேன்று, கோபமானது பட்டயத்தினால் உண்டாகும் தண்டனையை வரவழைக்கும் என்றான். |