| 1 | மோசேயிடம் கர்த்தர் பேசினார். அவர், |
| 2 | “இஸ்ரவேல் ஜனங்களிடம் இந்த கட்டளைகளைக் கூறு: நீங்கள் கானான் நாட்டிற்குபோய்க் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் கானான் நாடு முழுவதையும் பெற்றுக்கொள்வீர்கள். |
| 3 | தெற்குப் பக்கம் ஏதோம் அருகிலுள்ள சீன் பாலைவனத்தின் ஒரு பகுதியைப் பெறுவீர்கள். உங்களது தெற்கு எல்லையானது கிழக்கே இருக்கிற சவகடலின் கடைசியில் தொடங்கும். |
| 4 | இது ஸ்கார்ப்பியன் கணவாயின் தெற்காகக் கடந்து செல்லும். சீன் பாலைவனத்தின் வழியாக, காதேஸ்பர்னேவுக்கும் பிறகு ஆத்சார் ஆதாருக்கும், பின் அங்கிருந்து அஸ்மோனாவுக்கும் செல்லும். |
| 5 | அஸ்மோனிலிருந்து எல்லையானது எகிப்து நதியில் போய், பிறகு அது மத்தியத்தரைக் கடலில் போய் முடியும். |
| 6 | மத்தியத்தரைக் கடல் உங்களது மேற்கு எல்லையாக இருக்கும். |
| 7 | உங்கள் வடக்கு எல்லையானது மத்தியத்தரைக் கடலில் தொடங்கி, லெபனானில் உள்ள ஓர் மலைக்குச் செல்லும். |
| 8 | ஓர் என்னும் மலையிலிருந்து, இது லெபோ ஆமாத்திற்குப் போகும். பிறகு சேதாத்திற்குப் போகும். |
| 9 | பின்னர் அவ்வெல்லையானது, சிப்ரோனுக்குப் போய் ஆத்சார் ஏனானிலே முடியும். அதுதான் உங்கள் வடக்கு எல்லையாகும். |
| 10 | உங்கள் கிழக்கு எல்லையானது ஏனானிலே தொடங்கி, அது சேப்பாமுக்குப் போகும், |
| 11 | சேப்பாமிலிருந்து ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாவிற்குப் போகும். எல்லையானது தொடர்ந்து கலிலேயா ஏரிக்குத் தொடரும். |
| 12 | பிறகு அந்த எல்லையானது யோர்தான் நதிவரைத் தொடரும். அது மரணக் கடலில் போய் முடியும். இவை தான் உங்கள் நாட்டைச் சுற்றியுள்ள எல்லைகள் ஆகும்” என்றார். |
| 13 | எனவே, மோசே இந்த கட்டளைகளை இஸ்ரவேல் ஜனங்களிடம் கொடுத்தான். “அதுதான் நீங்கள் பெறப்போகிற நாடு. இதனைச் சீட்டுக்குலுக்கல் மூலமாக 9 கோத்திரங்களுக்கும் மனாசேயின் பாதி குடும்பத்திற்கும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். |
| 14 | ரூபன் மற்றும் காத்தின் கோத்திரத்தினரும் மனாசேயின் பாதிக் குடும்பத்தினரும் ஏற்கெனவே தங்கள் நாட்டைப் பெற்றுள்ளனர். |
| 15 | அந்த இரண்டரைக் கோத்திரத்தினரும் எரிகோவின் அருகில் யோர்தானுக்குக் கிழக்கே உள்ள நாடுகளைப் பெற்றுள்ளனர்” என்றான். |
| 16 | பிறகு கர்த்தர் மோசேயோடு பேசினார். |
| 17 | அவர், “நாட்டைப் பங்கு வைக்க ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனான யோசுவாவும், |
| 18 | கோத்திரங்களின் தலைவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு தலைவர் இருப்பார். அவர்கள் நாட்டைப் பங்கு போட்டுக் கொடுப்பார்கள். |
| 19 | பின் வருபவை அந்த தலைவர்களின் பெயர்களாகும்: யூதாவின் கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகனான காலேபு; |
| 20 | சிமியோனின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகனான சாமுவேல்; |
| 21 | பென்யமீனின் கோத்திரத்திலிருந்து கிஸ்லோனின் மகனான எலிதாது; |
| 22 | தாணின் கோத்திரத்திலிருந்து யொக்லியின் மகனான புக்கி; |
| 23 | யோசேப்பின் மகனான மனாசேயின் கோத்திரத்திலிருந்து எபோதின் மகனாகிய அன்னியேல்: |
| 24 | எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து சிப்தானின் மகனாகிய கேமுவேல்; |
| 25 | செபுலோனின் கோத்திரத்திலிருந்து பர்னாகின் மகனாகிய எலிசாப்பான்; |
| 26 | இசக்காரின் கோத்திரத்திலிருந்து ஆசானின் மகனாகிய பல்த்தியேல்; |
| 27 | ஆசேரின் கோத்திரத்திலிருந்து செலோமியின் மகனான அகியூத்; |
| 28 | நப்தலியின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகனான பெதாக்கேல்” என்றார். |
| 29 | இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் கானான் தேசத்தைப் பங்கிடும்படி கர்த்தர் இவர்களைத் தெரிந்தெடுத்தார். |