வேதாகமத்தை வாசி

Click to Subscribe

நீதிமொழிகள் 8

                   
புத்தகங்களைக் காட்டு
1கவனியுங்கள்! ஞானமும், அறிவும்கவனிக்கும்படி உங்களை அழைக்கின்றன.
2அவை, மலையின் உச்சிமீது நிற்கின்றன. சாலையின் பக்கத்தில், பாதைகள் சந்திக்கும் இடத்தில் நிற்கின்றது.
3அவை நகர வாசல்களின் அருகில் உள்ளன. திறந்த கதவுகளின் வெளியே அவை அழைக்கின்றன.
4ஞானம் சொல்கிறதாவது: “ஜனங்களே, உங்களை நோக்கி அழைக்கிறேன். நான் எல்லா ஜனங்களையும் அழைக்கிறேன்.
5நீங்கள் முட்டாள்களாக இருந்தால், ஞானவான்களாகக் கற்றுக்கொள்ளுங்கள். முட்டாள் மனிதர்களே, புரிந்துகொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.
6கவனியுங்கள், நான் கற்றுத்தருபவை முக்கியமானவை நான் சரியானவற்றையே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
7எனது வார்த்தைகள் உண்மையானவை. நான் பொய்யான பாவங்களை வெறுக்கிறேன்.
8நான் சொல்வதெல்லாம் சரியானவை. என் வார்த்தைகளில் தவறோ பொய்யோ இல்லை.
9புரிந்துகொள்ளும் திறமை உடையவர்களுக்கு என் வார்த்தைகள் அனைத்தும் தெளிவானவை. அறிவுள்ள ஒருவன் இதனைப் புரிந்துகொள்வான்.
10எனது ஒழுக்கத்தை ஏற்றுக்கொள். இது வெள்ளியைவிட விலை மதிப்புடையது. இது சிறந்த பொன்னைவிட மதிப்பிற்குரியது.
11ஞானமானது முத்துக்களைவிட மதிப்புமிக்கது. ஒருவன் விரும்புகிற அனைத்துப் பொருட்களையும்விட இது மிகவும் மதிப்புடையது” என்று ஞானம் கூறுகிறது.
12நான் ஞானம். நான் நல்ல தீர்ப்புகளோடு வாழ்கிறேன். நீ என்னை அறிவாலும் நல்ல தீர்மானங்களாலும் கண்டுக்கொள்ள முடியும்.
13ஒருவன் கர்த்தரை மதிக்கும்போது அவன் தீய வைகளை வெறுக்கிறான். ஞானமாகிய நான் பெருமையை வெறுக்கிறேன். மற்றவர்களைவிட தன்னைப் பெரியவனாக நினைப்பவர்களையும் நான் வெறுக்கிறேன். நான் தீய வழிகளையும், பொய்சொல்லும் வாய்களையும் வெறுக்கிறேன்.
14ஆனால் ஞானமாகிய நான் ஜனங்களுக்கு நல்ல முடிவுகளை எடுக்கும் திறமைகளையும் நல்ல தீர்ப்புகளையும் வழங்குகிறேன். நான் புரிந்துகொள்ளும் வல்லமையும் கொடுக்கிறேன்.
15அரசர்கள் ஞானமாகிய என்னை ஆட்சிக்குப் பயன்படுத்துவார்கள். ஆளுபவர்கள் என்னை நியாயமான சட்டங்களை ஏற்படுத்தப் பயன்படுத்துவார்கள்.
16பூமியில் உள்ள ஒவ்வொரு நல்ல ஆட்சியாளனும் என்னைப் பயன்படுத்தி தனக்குக் கட்டுப்பட்ட ஜனங்களை ஆள்கிறான்.
17என்னை நேசிக்கிற ஜனங்களை ஞானமாகிய நான் நேசிக்கிறேன். என்னை கண்டுக்கொள்ள ஜனங்கள் கடுமையாக முயற்சித்தால் அவர்கள் கண்டுக்கொள்வார்கள்.
18ஞானமாகிய என்னிடமும் கொடுப்பதற்கென்று செல்வமும் மதிப்பும் உள்ளன. நான் உண்மையான செல்வத்தையும் வெற்றியையும் தருவேன்.
19நான் தருகின்ற பொருட்கள் சிறந்த பொன்னைவிட உயர்ந்தவை. எனது அன்பளிப்புகள் சுத்தமான வெள்ளியைவிட உயர்ந்தவை.
20ஞானமாகிய நான் ஜனங்களை நல் வழியிலேயே நடத்திச்செல்வேன். நான் அவர்களைச் சரியான நியாயத்தீர்ப்பின் வழியில் நடத்திச் செல்வேன்.
21என்னை நேசிக்கின்றவர்களுக்கு நான் செல்வத்தைத் தருவேன். ஆம், அவர்களின் வீட்டைக் களஞ்சியத்தால் நிரப்புவேன்.
22நீண்டகாலத்துக்கு முன், துவக்கத்தில் முதலாவதாக ஞானமாகிய நானே படைக்கப்பட்டேன்.
23ஞானமாகிய நான் துவக்கத்தில் உருவாக்கப்பட்டேன். உலகம் படைக்கப்படும் முன்னே நான் படைக்கப்பட்டேன்.
24ஞானமாகிய நான் கடல்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டேன். நான் தண்ணீருக்கு முன்னமே படைக்கப்பட்டேன்.
25ஞானமாகிய நான் மலைகளுக்கு முன்னமே பிறந்தவள். நான் குன்றுகளுக்கு முன்னமே பிறந்தேன்.
26கர்த்தர் பூமியைப் படைப்பதற்கு முன்னமே ஞானமாகிய நான் பிறந்தேன். நான் வயல் வெளிகளுக்கு முன்னமே பிறந்தேன். நான் உலகில் முதல் மண் உருவாக்கப்படும் முன்னமே தேவனால் பிறப்பிக்கப்பட்டேன்.
27கர்த்தர் வானத்தைப் படைக்கும்போது ஞானமாகிய நான் அங்கிருந்தேன். கர்த்தர் கடலின் எல்லைகளை நிலத்தைச்சுற்றி வட்டங்களாக வரைந்தபோதும் ஞானமாகிய நான் அங்கிருந்தேன்.
28கர்த்தர் வானத்தில் மேகங்களை வைப்பதற்கு முன்னரே நான் பிறப்பிக்கப்பட்டேன். கர்த்தர் கடலில் தண்ணீரை ஊற்றும்போதே நான் அங்கிருந்தேன்.
29கடல்களில் தண்ணீரின் அளவைக் கர்த்தர் நிர்ணயித்தபோதே நான் அங்கிருந்தேன். தண்ணீரானது கர்த்தருடைய அனுமதியின்றி உயர்ந்திட முடியாது. கர்த்தர் உலகத்தின் அஸ்திபாரத்தை உண்டாக்கிய போது நான் அங்கிருந்தேன்.
30நான் அவரது அருகில் திறமையுள்ள வேலைக் காரனாக இருந்தேன். கர்த்தர் என்னால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி அடைந்தார். நான் அவரை எப்பொழுதும்மகிழ்ச்சியோடுசிரிக்கச் செய்தேன்.
31தான் படைத்த உலகத்தைப் பார்த்து கர்த்தர் மகிழ்ந்தார். அவர் அதிலுள்ள ஜனங்களைப் பார்த்து மகிழ்ந்தார்.
32“குழந்தைகளே! இப்பொழுது நான் சொல்வதை கவனியுங்கள். நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் எனது வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
33எனது போதனைகளைக் கேட்டு ஞானம் பெறுங்கள். அதைக் கவனிக்க மறுக்காதீர்கள்.
34என்னைக் கவனிக்கிற எவனும் மகிழ்ச்சியாக இருப்பான். அவன் ஒவ்வொரு நாளும் என் வழிகளைக் கவனிப்பான். அவன் என் வழியருகில் காத்திருப்பான்.
35என்னைக் கண்டுக்கொள்கிறவன் வாழ்வைக் கண்டுக்கொள்கிறான். அவன் கர்த்தரிடமிருந்து நல்லவற்றைப் பெறுவான்.
36ஆனால் எனக்கு எதிராகப் பாவம் செய்கிறவன் தன்னையே புண்படுத்திக்கொள்கிறான். என்னை வெறுக்கிற அனைவரும் மரணத்தை விரும்புகிறார்கள்.”
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.