| 1 | கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்! உலகம் முழுவதும் கர்த்தரை நோக்கிப் பாடட்டும். |
| 2 | கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்! அவரது நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்! ஒவ்வொரு நாளும் அவர் நம்மை பாதுகாப்பதைப் பற்றிச் சொல்லுங்கள்! |
| 3 | தேவன் உண்மையிலேயே அற்புதமானவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுங்கள். தேவன் செய்கிற வியப்பிற்குரிய காரியங்களை எங்குமுள்ள ஜனங்களுக்குச் சொல்லுங்கள். |
| 4 | கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர். வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர். |
| 5 | பிற தேசங்களின் “தெய்வங்கள்” எல்லாரும் வெறும் சிலைகளே. ஆனால் கர்த்தரோ வானங்களை உண்டாகினவர். |
| 6 | அவருக்கு முன்னே அழகிய மகிமை ஒளி வீசும். தேவனுடைய பரிசுத்த ஆலயத்தில் பெலனும் அழகும் விளங்கும். |
| 7 | குடும்பங்களும் தேசங்களும் கர்த்தருக்கு மகிமையும், துதியும் நிரம்பிய பாடல்களைப் பாடுவார்கள். |
| 8 | கர்த்ருடைய நாமத்தைத் துதியுங்கள். உங்கள் காணிக்கைகளோடு ஆலயத்திற்குச் செல்லுங்கள். |
| 9 | கர்த்தருடைய அழகான ஆலயத்தில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். கர்த்தரைப் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தொழுதுகொள்ளுங்கள். |
| 10 | கர்த்தரே அரசரென்று தேசங்களுக்கெல்லாம் அறிவியுங்கள்! அதனால் உலகம் அழிக்கப்படுவதில்லை. கர்த்தர் ஜனங்களை நியாயமாக அரசாளுவார். |
| 11 | விண்ணுலகங்களே! மகிழ்ச்சிகொள்ளுங்கள். பூமியே! களிகூரு. கடலும் அதிலுள்ளவையும் களிப்பால் குரல் எழுப்பட்டும்! |
| 12 | வயல்களும் அதில் விளைந்துள்ள அனைத்தும் மகிழ்ச்சிகொள்ளட்டும்! வனத்தின் மரங்களே, பாடி மகிழுங்கள்! |
| 13 | கர்த்தர் வருகிறார் ஆதலால் மகிழ்ச்சியடையுங்கள். கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வந்துகொண்டிருக்கிறார். நீதியோடும் நியாயத்தோடும் அவர் உலகை ஆளுகை செய்வார். |