| 1 | கர்த்தாவே, தாவீது துன்புற்ற வகையை நினைத்துப்பாரும். |
| 2 | தாவீது கர்த்தருக்கு ஒரு வாக்குறுதி அளித்தான். யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்கு தாவீது ஒரு விசேஷ வாக்குறுதி அளித்தான். |
| 3 | தாவீது, “நான் என் வீட்டிற்குள் போகமாட்டேன், நான் என் படுக்கையில் படுக்கமாட்டேன், |
| 4 | நான் தூங்கமாட்டேன், என் கண்கள் ஓய்வெடுக்க விடமாட்டேன், |
| 5 | கர்த்தருக்கு ஒரு வீட்டை நான் கண்டுபிடிக்கும் மட்டும், யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குரிய வீட்டை நான் காணும்மட்டும், இக் காரியங்களில் ஒன்றையும் நான் செய்யமாட்டேன்!” என்றான். |
| 6 | எப்பிராத்தாவில் நாங்கள் இதைப்பற்றிக் கேள்விப்பட்டோம். கீரியாத் யாரீமில் உடன்படிக்கைப் பெட்டியை நாங்கள் கண்டோம். |
| 7 | நாம் பரிசுத்தக் கூடாரத்திற்குச் செல்வோம். தேவன் பாதங்களை ஓய்வாக வைக்கும் பாதப்படியில் நாம் தொழுதுகொள்வோம். |
| 8 | கர்த்தாவே நீர் ஓய்வுக்கொள்ளும் இடத்திலிருந்து எழும்பும். கர்த்தாவே, உமது வல்லமையுள்ள பெட்டியோடு எழும்பும். |
| 9 | கர்த்தாவே, உமது ஆசாரியர்கள் நன்மையை அணிந்திருக்கிறார்கள். உம்மைப் பின்பற்றுவோர் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். |
| 10 | உமது பணியாளகிய தாவீதின் நன்மைக்காக, நீர் தேர்ந்தெடுத்த அரசனைத் தள்ளிவிடாதேயும். |
| 11 | கர்த்தர் தாவீதுக்கு ஒரு வாக்குறுதியை அருளினார். தாவீதிடம் நேர்மையோடிருப்பதாகக் கர்த்தர் வாக்களித்தார். தாவீதின் குடும்பத்திலிருந்து அரசர்கள் வருவார்கள் என்று கர்த்தர் வாக்குறுதி அளித்தார். |
| 12 | கர்த்தர், “தாவீதே, உனது பிள்ளைகள் என் உடன்படிக்கைக்கும் நான் கற்பிக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்தால், உன் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் என்றென்றும் அரசராக இருப்பார்கள்” என்றார். |
| 13 | அவரது ஆலயத்திற்குரிய இடமாக விரும்பி கர்த்தர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார். அந்த இடத்தையே தம்முடைய ஆலயத்திற்காக விரும்பினார். |
| 14 | கர்த்தர், “என்றென்றைக்கும் எப்போதும் இதுவே என் இடமாக இருக்கும். நான் இருக்கப்போகும் இடமாக இதனைத் தேர்ந்தெடுக்கிறேன்” என்று சொன்னார். |
| 15 | நான் இந்நகரை மிகுதியான உணவினால் நிரப்பி ஆசீர்வதிப்பேன். ஏழைகளுக்கும் உண்ணும் உணவு மிகுதியாகக் கிடைக்கும். |
| 16 | மீட்பினால் ஆசாரியர்களை நான் உடுத்துவிப்பேன். என்னைப் பின்பற்றுவோர் இங்கு மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். |
| 17 | இங்கு நான் தாவீதைப் பலப்படுத்துவேன். நான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு ஒரு விளக்கை அளிப்பேன். |
| 18 | தாவீதின் பகைவர்களை வெட்கத்தால் மூடுவேன். ஆனால் நான் தாவீதின் அரசைப் பெருகும்படி செய்வேன்” என்றார். |