| 1 | கர்த்தரை துதியுங்கள்! கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கிற மனிதன் சந்தோஷமாயிருப்பான். அவன் தேவனுடைய கட்டளைகளை நேசிக்கிறான். |
| 2 | அவன் சந்ததியினர் பூமியில் பெரியோராயிருப்பார்கள். நல்லோரின் சந்ததியினர் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள். |
| 3 | அம்மனிதனின் குடும்பம் செல்வத்தில் சிறந்திருக்கும். அவன் நன்மை என்றென்றைக்கும் தொடரும். |
| 4 | தேவன் நல்லோருக்கு இருளில் பிரகாசிக்கும் ஒளியைப் போன்றவர். தேவன் நன்மையும், தயவும், இரக்கமுமுள்ளவர். |
| 5 | தயவும், தயாளகுணமும் பெற்றிருப்பது ஒருவனுக்கு நல்லது. தனது வியாபாரத்தில் நியாயமாயிருப்பது ஒருவனுக்கு நல்லது. |
| 6 | அவன் விழமாட்டான், ஒரு நல்ல மனிதன் என்றென்றும் நினைவுக்கூரப்படுவான். |
| 7 | அவன் தீய செய்திக்குப் பயப்படமாட்டான். அவன் கர்த்தரை நம்புகிறதால் தன்னம்பிக்கையோடிருப்பான். |
| 8 | அவன் தன்னம்பிக்கையுள்ளவன். அவன் பயப்படமாட்டான். அவன் தனது பகைவர்களைத் தோற்கடிப்பான். |
| 9 | அவன் ஏழைகளுக்கு இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறான். அவனது நன்மை என்றென்றைக்கும் தொடரும். |
| 10 | தீயோர் இதைக்கண்டு கோபமடைவார்கள். அவர்கள் கோபத்தால் தங்கள் பற்களைக் கடிப்பார்கள். பின்பு அவர்கள் மறைந்து போவார்கள். தீயோர் அவர்கள் மிகவும் விரும்புவதைப் பெறுவதில்லை. |