| 1 | “இடியும், மின்னலும் என்னை அச்சுறுத்துகின்றன. இதயம் என் நெஞ்சத்தில் துடிக்கிறது. |
| 2 | “ஒவ்வொருவரும் செவிகொடுங்கள்! தேவனுடைய சத்தம் இடியைப்போல முழங்குகிறது. தேவனுடைய வாயிலிருந்து வரும் இடியைப்போன்ற சத்தத்திற்குச் செவிகொடுங்கள். |
| 3 | முழுவானத்திற்கும் குறுக்காக மின்னும்படி, தேவன் அவரது மின்னலை அனுப்புகிறார். அது பூமி ழுழுவதும் ஒளிர்ந்தது. |
| 4 | மின்னல் ஓளிவீசி மறைந்த பிறகு, தேவனுடைய முழங்கும் சத்தத்தைக் கேட்கமுடியும். தேவன் அவரது அற்புதமான சத்தத்தால் முழங்குகிறார்! மின்னல் மின்னும்போது, தேவனுடைய சத்தம் முழங்குகிறது. |
| 5 | தேவனுடைய முழங்கும் சத்தம் அற்புதமானது! நாம் புரிந்துகொள்ள முடியாத, மேன்மையான காரியங்களை அவர் செய்கிறார். |
| 6 | தேவன் பனியிடம், ‘பூமியின் மேல் பெய்’ என்கிறார். மேலும் தேவன் மழையிடம், ‘பூமியின் மேல் பொழி’ என்கிறார். |
| 7 | தேவன் உண்டாக்கின எல்லா மனிதர்களும் அவர் என்ன செய்யமுடியும் என்பதை அறியுமாறு தேவன் அதைச் செய்கிறார். அது அவரது சான்று. |
| 8 | மிருகங்கள் அவற்றின் குகைகளுக்குள் புகுந்து அங்கேயே தங்கும். |
| 9 | தெற்கேயிருந்து சூறாவளி வரும். வடக்கேயிருந்து குளிர் காற்று வரும். |
| 10 | தேவனுடைய மூச்சு பனிக்கட்டியை உண்டாக்கும், அது சமுத்திரங்களை உறையச் செய்யும். |
| 11 | தேவன் மேகங்களை தண்ணீரினால் நிரப்புகிறார், அவர் இடிமேகங்களைச் சிதறடிக்கிறார். |
| 12 | பூமியில் எங்கும் சிதறிப்போகும்படி தேவன் மேகங்களுக்குக் கட்டளையிடுகிறார். தேவன் கட்டளையிடுகின்றவற்றை மேகங்கள் செய்யும். |
| 13 | பெருவெள்ளத்தை வரச்செய்து ஜனங்களைத் தண்டிக்கவோ, அல்லது வெள்ளத்தை வருவித்து அவரது அன்பை வெளிப்படுத்தவோ, தேவன் மேகங்களை உருவாக்குகிறார். |
| 14 | “யோபுவே, ஒரு நிமிடம் நின்று கவனித்துக்கேள். தேவன் செய்கிற அற்புதமான காரியங்களைக் குறித்துச் சற்று நின்று எண்ணிப்பார். |
| 15 | யோபுவே, தேவன் எவ்வாறு மேகங்களை அடக்கியாள்கிறார் என்பது உனக்குத் தெரியுமா? அவரது மின்னலை எவ்வாறு தேவன் ஒளிவிட வைக்கிறார் என்பது உனக்குத் தெரியுமா? |
| 16 | மேகங்கள் வானில் எவ்வாறு தொங்குகின்றன என்பது உனக்குத் தெரியுமா? தேவன் செய்த அற்புதமான காரியங்களுக்கு மேகங்கள் ஒரு எடுத்து காட்டு மட்டுமேயாகும்! அவற்றைப்பற்றிய யாவும் தேவனுக்குத் தெரியும். |
| 17 | ஆனால் யோபுவே, உனக்கு இக்காரியங்கள் தெரியாது. நீ வியர்க்கிறாய் என்பதும், உன் ஆடைகள் உடம்பில் ஒட்டிக்கொள்கின்றன என்பதும், தெற்கிலிருந்து வெப்பமான காற்று வீசும்போது, எல்லாம் அசையாமல் இருக்கின்றன என்பது மட்டுமே உனக்குத் தெரியும். |
| 18 | யோபுவே, வானைப் பரப்புவதற்கு நீ தேவனுக்கு உதவமுடியுமா? தேய்த்த பளபளப்பான கண்ணாடியைப்போல அது ஒளிரும்படி செய்யக் கூடுமா? |
| 19 | “யோபுவே, நாங்கள் தேவனுக்கு என்ன சொல்லவேண்டும் என்று கூறு! எங்களுக்குச் சரிவரத் தெரியாததால் சொல்வது குறித்து எண்ண இயலாமலிருக்கிறோம். |
| 20 | நான் அவரிடம் பேசவேண்டும் என்று தேவனிடம் கூறமாட்டேன். அழிவு வேண்டும் என்று கேட்கமாட்டேன். |
| 21 | ஒரு மனிதன் சூரியனை ஏறெடுத்துப் பார்க்க முடியாது. காற்று மேகங்களை அடித்துச் சென்றபின் அது வானில் மிகப் பிரகாசமாக ஒளி தருகிறது. |
| 22 | தேவனும் அவ்வாறே இருக்கிறார்! பரிசுத்த மலையிலிருந்து தேவனுடைய பொன்னான மகிமை பிரகாசிக்கிறது . தேவனைச் சுற்றிலும் பிரகாசமான ஒளி இருக்கிறது. |
| 23 | சர்வ வல்லமையுள்ள தேவன் மேன்மையானவர்! நாம் தேவனைப் புரிந்துகொள்ள முடியாது! தேவன் மிகுந்த வல்லமை உள்ளவர். ஆனால் அவர் நமக்கு நல்லவரும் நியாயமானவரும் ஆவார். தேவன் நம்மைத் துன்புறுத்த விரும்பமாட்டார். |
| 24 | ஆகவேதான் ஜனங்கள் தேவனை மதிக்கிறார்கள். ஆனால் தங்களை ஞானிகளாக நினைக்கிற அகங்காரம் உள்ளவர்களை தேவன் மதிக்கமாட்டார்” என்றான். |