| 1 | எலிகூ தன் பேச்சைத் தொடர்ந்தான். அவன், |
| 2 | “என்னோடு இன்னும் கொஞ்சம் பொறுமையாயிரும். இன்னும் சில வார்த்தைகளைக் கூட நான் பேச தேவன் விரும்புகிறார். |
| 3 | நான் எனது அறிவை எல்லோரோடும் பகிர்ந்துக்கொள்வேன், தேவன் என்னை உண்டாக்கினார், தேவன் நியாயமானவரென நான் நிரூபிப்பேன். |
| 4 | யோபுவே, நான் உண்மையைக் கூறிக் கொண்டிருக்கிறேன். நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்று நான் அறிவேன். |
| 5 | “தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர், ஆனால் அவர் ஜனங்களை வெறுப்பதில்லை. தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர், ஆனால் அவர் மிகுந்த ஞானமுள்ளவர். |
| 6 | தேவன் தீய ஜனங்களை வாழவிடமாட்டார், தேவன் ஏழைகளை எப்போதும் நியாயமாக நடத்துகிறார். |
| 7 | தக்க வழியில் நடப்போரைத் தேவன் கண்ணோக்குகிறார். அவர் நல்லோரை அரசர்களாயிருக்க அனுமதிக்கிறார். தேவன் நல்லோருக்கு என்றென்றும் மகிமையைக் கொடுக்கிறார். |
| 8 | எனவே ஜனங்கள் தண்டிக்கப்பட்டால், அவர்கள் விலங்குகளினாலும் கயிறுகளினாலும் கட்டப்பட்டால், அப்போது அவர்கள் தவறு செய்தவர்களாயிருப்பார்கள். |
| 9 | அவர்கள் செய்தது என்னவென்பதை தேவன் சொல்வார். அவர்கள் பாவம் செய்தார்கள் என்பதை தேவன் சொல்வார். அவர்கள் பெருமையாயிருந்தார்கள் என்பதை தேவன் சொல்வார். |
| 10 | தேவன் தனது எச்சரிக்கைக்குச் செவிசாய்க்குமாறு அந்த ஜனங்களைக் கட்டாயப்படுத்துவார். அவர்கள் பாவம் செய்வதை நிறுத்துமாறு தேவன் கட்டளையிடுவார். |
| 11 | அந்த ஜனங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவருக்குக் கீழ்ப்படிந்தால், தேவன் அவர்கள் வெற்றிக் காணச் செய்வார். அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள். |
| 12 | ஆனால் அந்த ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தால், அப்போது அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்கள், அறியாமையுடையவர்களாக மரித்துப்போவார்கள். |
| 13 | “தேவனைப்பற்றிக் கவலைப்படாத ஜனங்கள் எப்போதும் கசப்பானவர்கள், தேவன் அவர்களைத் தண்டிக்கிறபோதும் கூட, அவர்கள் தேவனிடம் உதவிக்காக ஜெபம் செய்ய மறுக்கிறார்கள். |
| 14 | அவர்கள் ஆண் விபசாரிகளைப்போல இளமையிலேயே மரித்துப்போவார்கள். |
| 15 | ஆனால் தேவன் ஜனங்கள் பெறும் தொல்லைகளால் அவர்களைத் தாழ்மையானவர்களாக்குவார். ஜனங்கள் எழுந்து அவருக்குச் செவிகொடுப்பதற்காக தேவன் அத்தொல்லைகளைப் பயன்படுத்துகிறார். |
| 16 | “யோபுவே, தேவன் உனக்கு உதவ விரும்புகிறார். தொல்லைகளிலிருந்து உன்னை விடுவிக்க தேவன் விரும்புகிறார். உனக்கு வாழ்க்கையை எளிதாக்க தேவன் விரும்புகிறார். உன் மேசையில் மிகுதியான உணவு இருக்கும்படியாகச் செய்ய தேவன் விரும்புகிறார். |
| 17 | ஆனால் இப்போது யோபுவே, நீ குற்றவாளியாக நியாயந்தீர்க்கப்பட்டாய். எனவே ஒரு தீயவனைப்போன்று நீ தண்டிக்கப்பட்டாய். |
| 18 | யோபுவே, செல்வங்கள் உன்னை மூடனாக்கவிடாதேயும். பணம் உனது மனதை மாற்றவிடாதேயும். |
| 19 | உனது பணம் இப்போது உனக்கு உதவாது. வல்லமையுள்ளோர் உமக்கு உதவவும் முடியாது. |
| 20 | இரவின் வருகையை விரும்பாதேயும். ஜனங்கள் இரவில் மறைந்துபோக முயல்கிறார்கள். அவர்கள் தேவனிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். |
| 21 | யோபுவே, நீ மிகவும் துன்புற்றிருக்கிறாய். ஆனால் தீமையைத் தேர்ந்துகொள்ளாதேயும். தவறு செய்யாதபடி எச்சரிக்கையாயிரும். |
| 22 | “தேவன் தமது வல்லமையினால் மேன்மையுற்றிருக்கிறார். தேவன் எல்லோரினும் மிகவும் சிறந்த போதகர்! |
| 23 | தேவன் செய்ய வேண்டுவதென்ன என்று ஒருவனும் தேவனுக்குக் கூற முடியாது. ‘தேவனே, நீர் தவறு செய்கிறீர்’ என்று ஒருவனும் தேவனிடம் கூற முடியாது! |
| 24 | “தேவன் செய்த காரியங்களுக்காக அவரைத் துதிக்க வேண்டுமென நினைவு கூருங்கள். தேவனைத் துதிக்கும் பல பாடல்களை ஜனங்கள் எழுதியிருக்கிறார்கள். |
| 25 | தேவன் செய்தவற்றை ஒவ்வொருவனும் காண முடியும். தூரத்து நாடுகளின் ஜனங்களும் அவற்றைப் பார்க்க இயலும். |
| 26 | ஆம், தேவன் மேன்னைமயானவர். ஆனால் அவரது மேன்மையை நாம் புரிந்து கொள்ள முடியாது, எத்தனை காலமாக தேவன் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் நாம் அறியமுடியாது. |
| 27 | “தேவன் பூமியிலிருந்து தண்ணீரை, மேலே எடுத்து, அதைப் பனியாகவும் மழையாகவும் மாற்றுகிறார். |
| 28 | ஆகையால் மேகங்கள் தண்ணீரைப் பொழிகின்றன. மழை பலர் மீது பெய்கிறது. |
| 29 | தேவன் மேகங்களை எவ்வாறு பரப்புகிறார் என்பதையும் வானத்தில் இடி முழக்கம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதையும் ஒருவனும் புரிந்து கொள்ள முடியாது. |
| 30 | பாரும்! தேவன் பூமியின் மீது மின்னலைப் பரப்பி, சமுத்திரங்களின் ஆழமான பகுதிகளை மூடினார். |
| 31 | தேசங்களை அடக்கியாள்வதற்கும் அங்கு மிகுதியான உணவுப் பொருட்களைக் கொடுப்பதற்கும், தேவன் அவற்றைப் பயன்படுத்துகிறார். |
| 32 | தேவன் அவரது கைகளால் மின்னலைப் பிடிக்கிறார், அவருக்கு விருப்பமான இடங்களில் தாக்குமாறு அதற்குக் கட்டளையிடுகிறார். |
| 33 | புயல் வந்துகொண்டிருப்பதை இடி எச்சரிக்கிறது. அது வந்துகொண்டிருப்பதை ஆடு, மாடுகள் கூட அறிகின்றன” என்றான். |