வேதாகமத்தை வாசி

அப்போஸ்தலர் 18

                   
புத்தகங்களைக் காட்டு
1அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து;
2யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப் போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்து தேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் நாமமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான்.
3அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி, வேலைசெய்துகொண்டுவந்தான்.
4ஓய்வு நாள்தோறும் இவன் ஜெப ஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்தி சொன்னான்.
5மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்.
6அவர்கள் எதிர்த்துநின்று தூஷித்தபோது, அவன் தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன்; இதுமுதல் புறஜாதியாரிடத்திற்குப் போகிறேனென்று அவர்களுடனே சொல்லி,
7அவ்விடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்னும் பேருள்ள ஒருவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்ததாயிருந்தது.
8ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.
9இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே;
10நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.
11அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.
12கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒருமனப்பட்டு, பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோய்:
13இவன் வேதப்பிரமாணத்துக்கு விகற்பமாய்த் தேவனைச் சேவிக்கும்படி மனுஷருக்குப் போதிக்கிறான் என்றார்கள்.
14பவுல் பேசுவதற்கு எத்தனப்படுகையில், கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத நடக்கையாயிருக்குமேயானால் நான் உங்களுக்குப் பொறுமையாய்ச் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும்.
15இது சொற்களுக்கும், நாமங்களுக்கும், உங்கள் வேதத்துக்கும் அடுத்த தர்க்கமானபடியினாலே, இப்படிப்பட்டவைகளைக்குறித்து, விசாரணைசெய்ய எனக்கு மனதில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,
16அவர்களை நியாயாசனத்தினின்று துரத்திவிட்டான்.
17அப்பொழுது கிரேக்கரெல்லாரும் ஜெப ஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை.
18பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகோதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியா தேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.
19அவன் எபேசு பட்டணத்துக்கு வந்தபோது, அங்கே அவர்களை விட்டு நீங்கி, ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷணைபண்ணினான்.
20அவன் இன்னுஞ் சிலகாலம் தங்களுடனே இருக்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டபோது அவன் சம்மதியாமல்,,
21வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு,
22செசரியா பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப் போய், சபையைச் சந்தித்து, அந்தியோகியாவுக்குப் போனான்.
23அங்கே சிலகாலம் சஞ்சரித்தபின்பு, புறப்பட்டு, கிரமமாய்க் கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீஷரெல்லாரையும் திடப்படுத்தினான்.
24அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான்.
25அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம் பண்ணிக்கொண்டுவந்தான்.
26அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது, ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள்.
27பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள்.
28அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.