“கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது." (சங்கீதம் 116:15).
மாம்சத்தில் மிகவும் இருக்கத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய காரியத்தைப் பற்றிய ஆசீர்வாதமும் ஆறுதலும் தரும் வேத வசனங்களில் ஒன்று தான் நமது தியான வசனப்பகுதி. தேவனுடைய மக்கள் பெரும்பாலும் இந்த காரியத்தில் தேவ வார்த்தை என்ன சொல்லுகிறது. என்தை ஜெபத்துடன் ஆராய்ந்து, விசுவாசித்து புரிந்துகொண்டார்கள் என்றால், மரண பயத்திலிருந்து முழுமையாக இல்லாவிட்டாலும் பெரிய அளவில் விடுவிக்கப்படுவார்கள். ஐயோ! பலர் அவ்விதமாக இல்லாமல் அதற்கு பதிலாக தங்கள் எண்ணங்கள் மற்றும் கற்பனைகளுக்கு இடமளித்து, பயத்துக்கு ஆளாகிறார்கள். அவர்கள் விசுவாசத்து நடவாமல் தரிசித்து நடக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரை நோக்கிப் பார்த்து, அவருடைய வழிநடத்துதலுடன் வேத வசனத்தின்; வெளிச்சத்தில் ஒரு கிறிஸ்தவனின் மரணம் குறித்த தேவனுடைய வெளிப்பாட்டை அறிந்து, மரணம் பற்றிய சோகத்தையும், அவிசுவாசத்தையும் அகற்ற முயற்சிப்போம்.
“கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது." (சங்கீதம் 116:15). ஒரு விசுவாசி மாரிக்கும் போது தேவன் அவர் மீது கவனம் செலுத்துகிறார் என்பதை இந்த வேத வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. “அவர் பார்வைக்கு" என்ற வார்த்தையைக் கவனியுங்கள், தேவனுடைய கண்கள் எப்போதும் நம்மீது உள்ளன எனபது உண்மையே! அவர் உறங்குகிறதில்லை, தூங்குகிறதுமில்லை. நீர் என்னைக் காண்கிற தேவன் என்று நாம் எல்லாக் காலங்களிலும் அறிக்கைசெய்கிற உண்மைதான் அது. ஆனால் நம்முடைய முக்கியமான சந்தர்ப்பங்களில் அவர் அதிகக் கரிசனையும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று வேதம் சொல்கிறது. “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்” (சங்கீதம் 46:1). “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்” (ஏசாயா 43:2).
"கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது", இந்த வசனம் மரணத்தைப் பற்றி மிகவும் அரிதாகவே விசுவாசிகள் சிந்திக்கின்ற அம்சத்தை நம் முன் நிறுத்துகிறது. தேவனுடைய பார்வையில் இதை அவர் எவ்வாறு காண்கிறார் என்பதை இங்கே நாம் காண்கிறோம். மற்ற காரியங்களைப் போலவே மரணத்தைப் பற்றியும் நமது பார்வையில் அதிகம் சிந்திக்கிறோம். ஆனால் இந்த வேதபகுதி மரணத்தைப் பரலோக கண்ணோட்டத்தில் குறிப்பிடுகிறது. அது பயங்கரமானது, துயரமானது, மோசமானது என்று சொல்லாமல் “அருமையானது” என்று கூறுகிறது. இது நம்மில் ஒரு கேள்வியை எழுப்புகிறது: தேவனுடைய பக்தர்களின் மரணம் அவருடைய பார்வையில் ஏன் மதிப்புமிக்கதாக இருக்கிறது? மனித வாழ்வின் இந்தக் கடைசி நிகழ்வு அவருக்கு அருைமாய் இருப்பது ஏன்? இதற்கு ஓரிரு பதில்களை விரிவாகக் கூறாமல் சுருக்கமாகத் தர முயல்கிறேன்.
- கர்த்தருடைய பரிசுத்தவான்கள் அவருக்கு மதிப்புமிக்கவர்கள்.
பரிசுத்தவான்கள் எப்போதும் அவருக்கு அன்பானவர்கள்! அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே, வானங்கள் உருவாவதற்கு முன்னரே, அவருடைய அன்பு அவர்களின் மீது இருந்தது. அவர்களுக்காகவே அவர் தன்னுடைய உன்னதமான ஸ்தானத்தை விட்டு வந்தார். அவருடைய பரிசுத்தமான விலைமதிப்பற்ற இரத்தத்தை சிந்தி, இரட்சிப்பை கொடுப்பதற்காக தன் உயிரை தியாகமாக மனமுவந்து கொடுத்தார். அந்த பிரதான ஆசாரியரின் இதயத்தில் எழுதப்பட்டு, அவருடைய உள்ளங்கைகளில் பொறிக்கப்பட்டது அவர்களுடைய பெயர்களே! அவர்கள் அவரது பிதாவின் அன்பின் பரிசுகள். தம்முடைய பிள்ளைகள். அவரது சரீரத்தின் அங்கங்களாக இருக்கிறார்கள். ஆகவே அவர்ள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் அவர் நேசிக்கிறார். அவர்களின் தலையில் உள்ள முடியெல்லாம் எண்ணப்படும் அளவிற்கு அவர்கள் மீதான நேசம் ஆழமானது. அவர் தம்முடைய தூதர்களை அவர்களுக்கு ஊழியம் செய்யவும், அவர்களைப் பாதுகாக்கவும் அனுப்புகிறார். அவர்கள் அவருக்குப் பிரியமானவர்களாய் இருப்பதால் அவர்களுடைய மரணம் கூட பார்வைக்கு அருமையானது.
- மரணம் பரிசுத்தவான்களின் துக்கங்களையும் கவலைகளையும் முடிவுக்குக் கொண்டுவருகிறது
நாம் உபத்திரம் படுவது அவசியமாக இருக்கிறது. நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் (அப்போஸ்தலர் 14:22). ஆனால் "அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை." (புலம்பல் 3:33) தேவன் நம்முடைய உபத்திர விக்ஷயத்தில் அலட்சியமாக இருப்பதில்லை. தம் பழைய ஏற்பாடு மக்கள் குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” (ஏசாயா 63:9). “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்” (சங்கீதம் 103:13). அதேப்போல நமது பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து நமது பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடியவர் என்று நாம் வாசிக்கிறோம் (எபிரெயர் 4:15). ஆகையால் இங்கே அவருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வையில் விலைமதிப்புள்ளதாக இருப்பதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது – அதாவது அது அவர்களின் கவலைகள் மற்றும் பாடுகளுக்கு முடிவைக் குறிக்கிறது.
- தேவன் நமக்குப் போதுமானவர் என்பதைக் காண்பிக்கும் வாய்ப்பாக மரணம் இருக்கிறது
தேவன் தான் நேசிப்பவர்களின் தேவைகளை சந்திக்க ஊழியம் செய்வதைத் தவிர அவருடைய அன்பு வேறு எதிலும் திருப்தி அடைவதில்லை. மரண நேரத்தை விட ஒரு கிறிஸ்தவனுக்கு மிகவும் தேவையான உதவி வேறு எதிலும் இருக்காது. மனிதனின் இக்கட்டு தேவனின் செயல்பாட்டிற்கான வாய்ப்பு. எனவே இக்கட்டான சூழ்நிலையில் பிதாவாகிய தேவன் நடுங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய பிள்ளையிடம், “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே. நான் உன் தேவன். நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்" (ஏசாயா 4:10). இந்த காரணத்திற்காகவே ஒரு விசுவாசி நம்பிக்கையுடன் கூற முடியும்: “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர். உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" (சங்கீதம் 23:4). நம்முடைய ஒவ்வொரு பலவீனமும் அவருடைய பலத்தை நோக்கி அபயமிடுகிறது. நம்முடைய தேவை அவருடைய சர்வ வல்லமையுள்ள ஈவுக்காக வேண்டுகிறது. இந்தச் சத்தியம் ஆசீர்வாதமான வகையில் இந்த வார்த்தைகளில் உதாரணப்படுத்தப்படுகிறது: “ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்” (ஏசாயா 40:11). ஆம், நம்முடைய பலவீனங்களில் அவருடைய வல்லமை பூரணப்படுத்தப்படுகிறது. ஆகவே, அவருடைய அன்பாலும், கருணையாலும், வல்லமையாலும் அவருடைய பரிசுத்தவான்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பாக மரணம் இருப்பதால், அது தேவனுடைய பார்வையில் அருமையானது.
- மரணத்தின் மூலம் பரிசுத்தவான் நேரடியாக தேவனை நோக்கி செல்கிறான்.
தேவன் தன்னுடைய மக்கள் தன்னோடு இருப்பதை பார்த்து மகிழ்ச்சியடைகிறார், இந்த ஆசீர்வாதமான சத்தியம் அவர் பூமியில் ஊழியம் செய்தபோது உறுதியான சான்றாக வெளிப்படுகிறது. அவர் செல்லும் இடமெல்லாம் தம்முடைய அன்பான சீடர்களை அழைத்துச் சென்றார். கானா ஊரில் திருமணத்திற்கும், எருசலேமில் பரிசுத்த பண்டிகைக்காகவும், யாவீரு வீட்டில் மரித்த பெண்ணை உயிரோடு எழுப்பும் போதும். மறுரூப மலைக்கு போகும்பொதும் அவர் சென்ற எல்லா இடங்களிலும் அவர்கள் எப்போதும் அவரைப் பின்தொடர்ந்தனர். “அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும் ... நியமித்தார்" (மாற்கு 3:14). அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் (எபிரெயர் 13:8). அதனால்தான், “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.” என்ற இந்த உறுதியை நமக்குத் தருகிறார் (யோவான் 14:3). ஆகையால் பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது. “நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்” (2 கொரிந்தியர் 5:8).
ஒரு பக்தன் நம் மத்தியிலிருந்து பிரிந்தால் நாம் துக்கப்படுகையில், கிறிஸ்து மகிழ்ச்சியடைகிறார். “பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்" (யோவான் 17:24). பரலோகத்தில் அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் பிரவேசிக்கும் போதும் அவருடைய ஜெபத்திற்கு பதில் கிடைத்ததை எண்ணி நமதாண்டவர் பூரிப்படைகிறார். இந்த சாவுக்கேதுவான சரீரத்திலிருந்து விடுபட்ட தனது ஒவ்வொரு பிள்ளையின் வழியாக, அவர் அனுபவித்த துன்பங்களின் பலனைக் கணடு திருப்தி அடைகிறார். ஆகவே, கிறிஸ்துவுக்கு ஏற்படும் மகிழ்ச்சியின் காரணத்தால் பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
இங்கே “விலையேறப்பெற்றது” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரேய வார்த்தையின் முழுமையைக் கண்டறிவது மிகவும் சுவாரஸ்யமாக மற்றும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த வார்த்தை "விலைமதிப்பற்றது" என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது!" (சங்கீதம் 36:7) அந்தப் பரிசுத்தவான் எவ்வளவு மேன்மையாகவோ, தாழ்ச்சியாகவே வாழ்ந்தாலும், அவருடைய மரணம் கர்த்தரின் பார்வைக்கு அருமையானது.
அதே எபிரேய வார்த்தை “கனமானது" என்றும் மொழிபெயர்க்கப்படலாம். “உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு” (சங்கீதம் 49:5). இங்கே நாயகிகள் என்கிற பதம் கனமுள்ள பெண்கள் என்கிற வகையில் மொழிபெயர்க்கலாம். அகாஸ்வேரு அரசன் ஆமானிடம், “ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்;” (எஸ்தர் 6:6). ஆம், பூமிக்குப் பதிலாக பரத்திற்கு மாற்றம் பெறுவது உண்மையில் கனமானது தான். “இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாருக்கும் உண்டாகும், அல்லேலூயா” (சங்கீதம் 149:9).
இந்த வார்த்தையின் எபிரெயப் பதம் “பிரகாசம்” என்கிற அர்த்தத்தையும் கொண்டதாக விளங்குகிறது. “சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச் செல்லும்போதும்...” (யோபு 31:26). பரிசுத்தவான் மரணத்தில் விட்டுச் செல்கிற உறவினருக்கு அது இருள் நிறைந்தும், துயரம் நிறைந்தும் காணப்பட்டாலும், அது கர்த்தருடைய பார்வையில் பிரகாசமாக இருக்கிறது: “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்” (சகரியா 14:7). பரிசுத்தவான்களின் மரணம் கர்த்தருடைய பார்வையில் விலையேறப்பெற்றதாக, சிறந்ததாக, கனத்துக்குரியதாக, பிரகாசமானதாக இருக்கிறது. இந்தச் சிறிய தியானம் தம்முடைய பரிசுத்தவான்களுக்கு அருமையானதாக இருப்பதாக.