நீங்கள் ஜெபிக்கிறீர்களா? என்று கேட்கிறேன். ஏனெனில் கிறிஸ்தவத்தில் ஜெபமே பெரிய ஊக்கமளிக்கிறதாக இருக்கிறது.
கர்த்தருடைய பக்கத்தில் அனைத்தும் இருக்கிறது. ஜெபம் மட்டுமே அவை எல்லாவற்றையும் மக்களுக்கு பெற்றுதருகிறது. எல்லாமே அவருடைய பக்கத்தில் ஆயத்தமாயிருக்கிறது. ஆனால் அதற்கான வேண்டுகோள் எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கப்படும். கோணலான பாதைகள் செவ்வையாக்கபடும். கரடுமுரடான பாதைகள் சமமாக்கப்படும். ஆனால் ஜெபிக்காத மனிதனுக்கு ஒன்றுமே கிடைக்கப் போவதில்லை.
எந்த மனிதனாக இருந்தாலும், அவன் எவ்வளவு பெரிய பாவங்களை செய்திருந்தாலும், உதவியற்ற நிலையில் இருந்தாலும் தேவனை பிதாவாக அழைக்க கூடிய வழி இருக்கிறது. இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் செய்த தியாக பலியின் மூலமாக அந்த வழியை ஏற்படுத்தியிருக்கிறார். இனி தேவனுடைய பரிசுத்தமும் நீதியும் பாவிகளை பயமுறுத்தி அவர்களை பின்னுக்கு தள்ளப்போவதில்லை. ஆனால் இக்காரியங்கள் இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் சேருபவர்களுக்கும் கர்த்தருடைய கிருபையை தேடுபவர்களுக்கும் அவருடைய வார்த்தையை கேட்பவர்களுக்கும் மட்டுமே பொருந்தும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஏறெடுக்கப்பட்ட ஜெபம் ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை. அந்த நாமத்தினாலே மனிதன் தைரியமாக தேவனிடத்தில் கிட்டி சேர்ந்து நம்பிக்கையோடு தேவனிடம் கேட்கமுடியும். தேவனும் அந்த ஜெபத்தை கேட்பதற்கு ஆயத்தமாக இருக்கிறார். இந்த காரியங்களை சற்று சிந்தித்து பாருங்கள். இது உங்களை உற்சாகபடுத்தவில்லையா?
எப்போதுமே ஒரு வழக்கறிஞர் உங்களுக்காக பரிந்து பேசுகிறவராக அவர் மூலமாய் தேவனிடம் சேருகிறவர்களுக்காக காத்து கொண்டிருக்கிறார். அந்த வழக்கறிஞர் இயேசு கிறிஸ்துவே. அவர் நமது ஜெபத்தை தம்முடைய சர்வ வல்லமையுள்ள பரிந்துபேசுதலின் மூலமாக தேவனிடம் சேர்க்கிறார். நமது ஜெபம் இயேசுவின் வல்லமையோடு கலக்கும்போது மிகவும் இனிமையாக கர்த்தருடைய சமூகம் நோக்கி செல்கிறது. அந்த ஜெபம் நம்மில் இருந்து பிறக்கும்போது எத்தனை பெலவீனமானதாக இருந்தாலும் நம்முடைய பிரதான ஆசாரியனும் மூத்த சகோதரனுமாகிய இயேசுகிறிஸ்துவின் பக்கத்தில் மிகவும் மிகவும் பலமுள்ளதாகவும் வல்லமையுள்ளதாகவும் இருக்கிறது. ஒரு வங்கி காசோலை காகிதம் கையொப்பம் இல்லாமல் இருந்தால் அது வெறும் வெத்து காகிதமே. ஒரு பேனாவின் முனைப்பகுதியே அதற்கு மதிப்பை அளிக்கிறது. ஆதாமின் ஒரு ஏழைக்குழந்தை ஏறெடுக்கும் ஜெபம் மிகவும் பலவீனமானதுதான். ஆனால் இயேசுவின் கையினால் அதற்கு ஒப்புதல் கொடுக்கப்படும்போது அது மிகவும் பெலமுள்ளதாய் மாறுகிறது. ரோம சாம்ராஜ்யத்தில் ரோம குடியுரிமை பெற்ற ஜனங்களுக்கு உதவி செய்வதற்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பார். அவரின் வாசற்படி எப்போதும் திறந்திருக்கும். அதேபோல் அவரிடம் இரக்கத்திற்காக, கிருபைக்காக கெஞ்சின அனைத்து மக்களின் ஜெபத்தை கேட்க இயேசு கிறிஸ்துவின் காதும் திறந்தே இருக்கிறது. அதுவே இயேசுவின் பணி. அவர்களின் ஜெபத்தை கேட்பதே இயேசுவுக்கு சந்தோஷமானது. இந்த காரியங்களை சற்று யோசித்து பாருங்கள். இது உங்களுக்கு உற்சாகம் அளிக்கவில்லையா?
நாம் ஜெபிக்கும்போது ஏற்படும் பெலவீனங்களில் உதவி செய்வதற்கு பரிசுத்த ஆவியானவர் எப்போதுமே ஆயத்தமாய் இருக்கிறார். நாம் தேவனிடம் பேசுவதற்கு செய்கிற முயற்சிகளில் உதவுவதே பரிசுத்த ஆவியானவரின் வேலையில் சிறப்பான பகுதியாய் இருக்கிறது. எனக்கு ஒன்றுமே சொல்ல தெரியவில்லையே என்று கவலை படத்தேவையில்லை. நாம் ஆவியானவரிடம் உதவியை கேட்கும்போது அவர் உதவ தயாராயிருக்கிறார். கர்த்தருடைய மக்கள் ஏறெடுக்கிற ஜெபமானது ஆவியானவரின் வார்த்தைகளே. அவர்களுக்குள் வாசம் செய்கிற பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு கிருபையின் ஆவியை கொடுத்து ஜெபிக்கும்படி செய்கிறார். நிச்சயமாக கர்த்தருடைய பிள்ளைகளின் ஜெபங்கள் கேட்கப்படும் என நம்பலாம். இது வெறுமனே வாயின் வார்த்தைகளில் முனுமுனுப்பவர்களுக்கு அல்ல. பரிசுத்த ஆவியின் உதவியோடு மன்றாடுபவர்களுக்கு பொருந்தும். இந்த காரியங்களை சற்று யோசித்து பாருங்கள். இவை உங்களுக்கு உற்சாகம் அளிக்கவில்லையா?
ஜெபிக்கிறவர்களுக்கு மிகவும் அருமையான மகா பெரிய வாக்குதத்தங்கள் இருக்கிறது. இயேசுகிறிஸ்து பின்வரும் வசனங்களின் மூலமாக அதை சொல்லுகிறார் “கேளுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும். தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும். ஏனெனில் கேட்கிறவன் எவனும் பெற்று கொள்ளுகிறான். தேடுகிறவன் கண்டடைகிறான். தட்டுகிறவனுக்கு திறக்கப்படுகிறது." (மத்தேயு 7:7,8). மேலும் "நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளை கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்" (மத்தேயு 21:22). "நீங்கள் என் நாமத்தினாலே எதை கேட்பீர்களோ குமாரனில் பிதா மகிமைபடும்படியாக அதை செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்." (யோவான் 14:13,14). இரவில் சென்று தன்னுடைய நண்பனிடம் உணவு வருந்திகேட்ட உவமையிலிருந்தும், கைவிடப்பட்ட விதவையின் உவமையிலிருந்தும் இயேசு எதை சுட்டி காட்டுகிறார்? (லூக்கா 11:5, 18:1). இந்த வாக்கியங்களை சற்று சிந்தித்து பாருங்கள். இது உங்களை ஜெபிப்பதற்கு உற்சாகபடுத்தவில்லையா?
ஜெபத்தின் வல்லமையை விளக்கும் அருமையான உதாரணங்கள் வேதத்தில் இருக்கிறது. ஜெபத்தால் சாதிக்க முடியாத எந்த ஒரு பெரிய காரியமும் இல்லை. ஜெபத்திற்கு எதுவும் கடினமானதும் இல்லை. எதுவும் சாத்தியமற்றதும் இல்லை. ஜெபத்தால் செய்ய முடியாததோ, அல்லது ஜெபத்தால் எட்டமுடியாததோ என எதுவும் இல்லை. ஜெபம் நெருப்புக்கு எதிராகவும், காற்றுக்கு எதிராகவும், பூமிக்கு எதிராகவும், நீருக்கு எதிராகவும் ஜெயங்களை பெற்றிருக்கிறது. ஜெபம் செங்கடலை பிரித்தது. ஜெபம் கன்மலையில் இருந்து நீரையும், வானத்திலிருந்து அப்பத்தையும் கொண்டுவந்தது. ஜெபம் சூரியனை ஒரே நிலையிலே நிற்க வைத்தது. ஜெபத்தால் வானத்திலிருந்து அக்கினி இறங்கிவந்து எலியாவின் பலியை பட்சித்தது. ஜெபம் அகிதோப்பேலின் ஆலோசனையை பைத்தியமாக்கிவிட்டது. ஜெபம் சனகெரிப் ராஜாவின் இராணுவாட்களை தூக்கியெறிந்தது. ஸ்கொட்லாந்து ராணி மேரி ஜெபத்தை பற்றி சொன்னது மிகவும் மேன்மையானது. அவள் சொன்னது "பத்தாயிரம் போர்வீரர் கொண்ட படையை பார்க்கிலும் ஜான் நோக்ஸ் ஜெபத்திற்கு நான் பயப்படுகிறேன்." ஜெபம் வியாதிநிறைந்தவர்க்கு சுகம் கொடுத்தது. மரித்தவர்களை உயிரோடு எழுப்பியது. ஜெபம் அநேக ஆத்துமாக்களுக்கு மனந்திரும்புதலை கொண்டுவந்துள்ளது. ஹிப்போவின் ஆகஸ்தீனின் அம்மாவிற்கு ஒரு வயதான கிறிஸ்தவர் சொன்னது "அநேக வேண்டுதல்களுக்கு சொந்தகாரனாகிய உன் மகன் அழிந்துபோகப் போவதில்லை." ஜெபமும், வலிகளும், விசுவாசமும் எதை வேண்டுமானாலும் செய்யும். தேவனால் தத்தெடுக்கப்பட்டவனுக்கு எந்த ஒரு காரியமும் சாத்தியமற்றது கிடையாது. இந்த ஜனங்களை அழிக்கப் போகிறேன் என்று தேவன் சொன்னபோது மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்காக தேவனிடம் மன்றாடினார். (யாத்திராகமம் 32:10). எவ்வளவு தூரம் ஆபிரகாம் சோதோமின் இரக்கத்திற்காக மன்றாடினாரோ அவ்வளவு தூரம் தேவனும் இரக்கம் காட்டினார். ஆபிரகாம் ஜெபத்தை நிறுத்தும்வரைக்கும் தேவன் இரக்கத்தை குறைக்கவே இல்லை. சற்று இதை சிந்தித்து பாருங்கள். இது உங்களை உற்சாகபடுத்தவில்லையா?
ஆவிக்குரிய காரியங்களில் வெற்றிகளை பெறுவதற்கும், முன்னோக்கி செல்வதற்கும் நான் மேலே விளக்கிய ஜெபத்தை தவிர வேறு எந்த காரியத்தால் நமக்கு உதவி செய்ய முடியும்? தேவனின் இரக்கத்தை பெறவும், நம்முடைய வழிகளில் தடைபோடுகிற பாவத்தை மேற்கொள்ளுகிற பெலத்தை பெறவும் ஜெபத்தை தவிர எந்த காரியம் நமக்கு உதவும்? ஒருவேளை நரகத்தில் இருக்கும் சாத்தான்களுக்கு அப்படி ஒரு வழி இருந்திருந்தால் அவர்கள் எத்தனை ஆவலுடனும் சந்தோஷத்துடனும் அதை செய்திருப்பார்கள்.
ஆனால் இத்தனை சிறப்புமிக்க ஜெபத்தை அசட்டை செய்கிற மனிதன் முடிவில் எங்கே போகப்போகிறான் தெரியுமா? ஜெபமே செய்யாமல் மரிக்கிற மனிதனுக்கு கிடைக்க கூடிய பங்கு என்ன தெரியுமா? ஆனால் நிச்சயமாக இதை வாசிக்கிற நீங்கள் அந்த கூட்டத்தில் இருக்ககூடாது என விரும்புகிறேன். மறுபடியும் கேட்கிறேன் நீங்கள் ஜெபிக்கிறீர்களா?