இப்போது இரண்டாம் பகுதிக்கு வருகிறோம். அந்நியபாஷை வரத்தின் பிரதான நோக்கம், அது ஒரு அடையாளமாகக் கொடுக்கப்பட்டது என்பதாகும். இது இந்த ஆராய்ச்சியின் மிக முக்கியமான பகுதி. இந்த வரம் கொடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதில் தெளிவுபெற்றுவிட்டால், இந்த வரத்தைப்பொறுத்தவரையில் ஆதித்திருச்சபையில் என்ன நடந்தது என்பதையும், வரலாற்றில் நிகழ்ந்தது என்ன என்பதையும், இன்று திருச்சபையில் என்ன நடந்தேறிக் கொண்டிருக்கிறது என்பதையும் எளிதில் அறிந்துகொள்ளலாம். அது வேதாகமத்தின் நோக்கத்துடன் பொருந்துகிறதா, இல்லையா என்பதைத் தீர்மானித்துவிடலாம். அதைத்தொடர்ந்து, இன்றைய திருச்சபைகளில் செயல்படுத்தப்படும் இந்த வரமானது மெய்யானதா அல்லது போலியானதா என்பதையும் தீர்மானித்துவிடலாம். வேதாகமத்தில் அதன் நோக்கம் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக, பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் அதைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துவிட்டு முன்செல்லலாம் என்று நினைக்கிறேன்.
பெந்தேகோஸ்தே போதனையாளர்களின் விளக்கம் பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் அந்நியபாஷையின் பிரதான நோக்கமாகக் குறிப்பிடுவது என்னவென்றால், ஒரு விசுவாசிக்கும் தேவனுக்கும் இடையில் இரகசியமாகப் பேசப்படும் தனிப்பட்ட மொழி என்பதாகும். திருச்சபையில் பேசுவதைவிட, தனி ஜெபத்தில் அவர்கள் தேவனோடு அந்நியபாஷையில் பேசி, ஆவியில் நிரம்ப வேண்டும் என்று சொல்கிறார்கள். சற்று முன்னர்தான் இந்தப் பரவச உளறல் பாஷையானது புறஜாதியாரின் வழக்கம் என்றும், அதற்கும் வேதாகமத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் பார்த்தோம். மேலும், முதல் 19 வசனங்களில், அப்போஸ்தலனாகிய பவுல், அந்நியபாஷையைத் தேவனுக்கும் தனக்கும் இடையில் இரகசியப் பாஷையாகப் பயன்படுத்துவது தவறு என்பதைச் சுட்டிக்காட்டியதையும் நாம் பார்த்தோம். ஆகவே, அந்நியபாஷையைத் தனி ஜெபத்தில் பயன்படுத்த வேண்டும் என்று பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.
இன்னும் சிலர் சொல்லும்போது, அந்நியபாஷையானது தேவனைத் துதிப்பதற்கான மொழி என்று சொல்கிறார்கள். இது ஒரு புதிய விடுதலையுடன், உன்னதமாகத் தேவனைத் துதிப்பதற்கான வழி என்று அவர்கள் சொல்கிறார்கள். அவர்களிடம் நான் பின்வரும் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்: துதிப்பதற்கான மிகச்சிறந்த இடம் மற்றும் நேரம் பரலோகமே ஆகும்; அங்கேதான் உன்னதமான துதி ஏறெடுக்கப்படும். அப்படியானால், ஏன் (1 கொரிந்தியர் 13:8), “அந்நியபாஷைகளானாலும் ஓய்ந்துபோகும்”, என்று சொல்கிறது? அந்நியபாஷையானது தேவனைத் துதிப்பதற்கான உன்னதமான வழி என்றால், தேவனைத் துதித்தல் என்பது பரலோகத்தின் மிக முக்கியமான அம்சமாய் இருக்கையில், அது ஏன் ஓய்ந்துபோக வேண்டும்? ஆகவே, வசனத்தின் அடிப்படையில் பார்க்கும்போது பரவச உளறல் அந்நியபாஷையானது தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சிக்கானது என்றோ அல்லது தேவனுடனான இரகசியப் பாஷை என்றோ ஏற்றுக்கொள்ள முடியாது.
இரண்டாவதாக, வேறு சிலர் பரிந்துரைக்கும் காரணம் என்னவென்றால், இது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அல்ல, நற்செய்தி அறிவிப்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். அதாவது, புதிய ஏற்பாட்டில் அந்நியபாஷை என்பது ஒருவர் தான் முன்னரே அறிந்திராத மொழியில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட வரம் என்று சொல்கிறார்கள். இது ஒரு சிறந்த யோசனையாகத் தோன்றலாம். மிஷனரி பணித்தளத்தில் எங்கோ ஓரிடத்தில் தேவன் ஒருவருக்கு இந்த வரத்தைக் கொடுத்து, தான் அறியாத பாஷை பேசும் மக்களிடம் நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆவியானவர் உதவி செய்திருக்கலாம்; நான் அதை நிச்சயமாக மறுக்கவில்லை. ஆனாலும், இதற்காகத்தான் இந்த வரம் கொடுக்கப்பட்டது என்று நாம் உறுதிபடக் கூற முடியாது. ஏனென்றால், புதிய ஏற்பாட்டில் எந்த இடத்திலும் அப்படி ஒரு சம்பவத்தை நாம் காணவில்லை.
நீங்கள் சொல்லலாம், அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில் அவர்கள் எல்லாம் அந்நியபாஷையில் பேசியபோது, அங்கிருந்தவர்கள் தங்கள் சொந்த மொழியில் அவர்கள் பேசுவதைக் கேட்டார்கள் என்று. ஆம், அவர்கள் எல்லாம் என்ன பேசக் கேட்டார்கள் என்பதைக் கவனியுங்கள்: “தேவனுடைய மகத்துவங்களை” பேசக் கேட்டார்கள். யூத சமயத்திலிருந்து வரும் அந்த எளிய சொற்றொடரானது, ‘பழைய ஏற்பாட்டில் வரலாற்றுப்பூர்வமாகத் தேவன் நடப்பித்த உன்னதமான செயல்பாடுகளைப் பேசுவதைக் குறிக்கிறது’. ஏன்? யூத மக்கள் கூட்டத்தின் கவனத்தை ஈர்த்து, பிறகு பேதுரு எழுந்து நின்று அவர்களின் சொந்த யூத மொழியில் நற்செய்தியைப் பிரசங்கித்தார். இங்கும் அந்நியபாஷையானது நற்செய்தியைப் பிரசங்கிக்கப் பயன்படுத்தப்படவில்லை; மாறாக, யூத மக்களின் கவனத்தை ஈர்த்துக் கூட்டத்தைச் சேர்க்கப் பயன்படுத்தப்பட்டது. பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் பலவிதமான விளக்கங்களை அளிக்கிறார்கள்; சிலர் இது தேவனுடனான இரகசியப் பாஷை என்றும், சிலர் இது தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவுகிறது என்றும், சிலர் இது நற்செய்தி அறிவிக்கப் பயன்படுகிறது என்றும், சிலர் இது தேவனைத் துதிக்கப் பயன்படுகிறது என்றும் சொல்கிறார்கள். ஆனாலும், இவர்களுடைய எந்தவொரு விளக்கமும் வேதாகம நோக்கங்களுடன் பொருந்தவில்லை.
மூன்றாவதாக, அந்நியபாஷையானது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கான அடையாளம் என்று வாதிடப்படுகிறது. அதை ஏற்றுக்கொண்டால் அதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. (1 கொரிந்தியர் 12:13)-ல், “எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு” என்று வாசிக்கிறோம். எத்தனை பேர் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்? “எல்லாரும்”. இப்போது 12:30-ஐக் கவனியுங்கள், “எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம்பண்ணுகிறார்களா?” பதில், ‘இல்லை’ என்பதே. இப்போது கவனியுங்கள், ‘எல்லாரும் ஞானஸ்நானம் பெற்றார்கள், ஆனால் எல்லாரும் அந்நியபாஷை பேசுவதில்லை’. இந்த இரண்டையும் உங்களால் ஒன்றுசேர்க்க முடியாது.
மேலும், (அப்போஸ்தலர் 2:38)-ல், பேதுரு தம்முடைய பிரசங்கத்தில் சொன்னார், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்”. அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் மனந்திரும்பினார்கள்; அவர்களில் எத்தனை பேர் அந்நியபாஷை பேசினார்கள் என்று தெரியுமா? வேதம் அதைச் சொல்லவில்லை. (அப்போஸ்தலர் 4:31)-ல், “அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு”, - இங்கே எல்லாரும் அந்நியபாஷையில் பேசினார்களா? இல்லை – அவர்கள் “தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்”. அப்போஸ்தலர் 2 மற்றும் 4-ஆம் அதிகாரங்களில் அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள், ஆனால் 4-ஆம் அதிகாரத்தில் அவர்கள் யாரும் அந்நியபாஷையில் பேசவில்லை. ஆகவே, பொருந்தாத இந்த இரண்டு நிகழ்வுகளையும் நீங்கள் ஒப்பிடவே முடியாது.
அப்படியானால், இது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கு அடையாளம் அல்ல என்றால், நற்செய்தி அறிவிப்பதற்கும் அல்ல என்றால், என்னுடைய சுய பக்திவிருத்திக்கும் பயன்படவில்லை என்றால், இது தேவனுடனான தனிப்பட்ட பாஷையும் அல்ல என்றால், அந்நியபாஷை கொடுக்கப்பட்டதன் நோக்கம்தான் என்ன? அதைத்தான் நாம் இப்பொழுது சிந்திக்கப்போகிறோம்.
சிறுபிள்ளைத்தனமாகிய பரவச உளறல் பாஷை இருபதாம் வசனத்தைக் கவனியுங்கள்: “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்” (கிரேக்க வார்த்தை: சிறு பிள்ளைகள், 5-10 வயது) – அதாவது, உண்மையில், உங்கள் சிறுபிள்ளைத்தனத்தை நிறுத்துங்கள் – “துர்க்குணத்திலே குழந்தைகளாயும்” (கிரேக்க வார்த்தை: குழந்தைகள், ஒரு வயதுக்கும் குறைவு) இருங்கள். ‘துர்க்குணம்’ என்பதற்கு ‘காகியா’ (kakia) என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது - அது பொதுவாக ‘தீமை’ என்பதைக் குறிக்கும். “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்”.
ஏசாயாவின் எச்சரிப்பு அவர்களின் கவனத்தை ஈர்த்த பிறகு, அந்நியபாஷையின் நோக்கத்தைக் குறிப்பிடுகிறார். வசனம் 21, 22: “மறுபாஷைக்காரராலும், மறுவுதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே. அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது”.
அன்பானவர்களே, இதுவரை நாம் பார்த்த எதையுமே நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றாலும், இந்த ஒரு காரியத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். அந்நியபாஷை யாருக்கு அடையாளமாய் இருக்கவில்லை? ‘விசுவாசிகளுக்கு’. அந்நியபாஷையானது விசுவாசிகளுக்கு அடையாளமாய் இருக்கவில்லை என்பதை வேத வசனத்திலிருந்து தெளிவாக உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். இந்தக் கருத்தே 14-ஆம் அதிகாரத்தின் மையக்கருத்து என்றுகூடச் சொல்லலாம். இந்த ஒரு கருத்து மட்டுமே, இன்று பரவச உளறல் அந்நியபாஷை பேசும் எந்தவொரு விசுவாசியையும், தான் பேசும் அந்நியபாஷையையும் அதன் உண்மைத்தன்மையையும் கேள்வி கேட்க வைக்க வேண்டும். ‘அந்நியப்பாஷையானது அவிசுவாசிகளுக்கு அடையாளமாய் இருக்கிறது’ என்பதையும் உறுதியாக உங்கள் உள்ளத்தில் பதிவுசெய்துகொள்ளுங்கள்.
அந்நியபாஷை எதற்கு அடையாளமாக இருக்கிறது என்பதற்கு மூன்று காரியங்களைக் குறித்துக்கொள்ளுங்கள்: 1. அது சாபத்தின் அடையாளம், 2. அது ஆசீர்வாதத்தின் அடையாளம், 3. அது அதிகாரத்தின் அடையாளம். இவைகள்தான் உண்மையான அந்நியபாஷை வரத்தின் முக்கிய நோக்கங்கள். முதலில் அது ஏன் சாபத்தின் அடையாளம் என்று பார்ப்போம். நான் இப்படிச் சொல்வது உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம்; ஆனால் அப்படித்தான் அது இங்கு எழுதப்பட்டுள்ளது.
வசனம் 21-ஐக் கவனியுங்கள். இது ஏசாயா 28: 11, 12-ஆம் வசனங்களிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. “பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்” - இந்த வேதப்பகுதியில் ‘ஜனத்தார்’ என்பது இஸ்ரவேல் ஜனத்தைக் குறிக்கிறது – “இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்”. பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏசாயா சொன்ன வார்த்தைகளைச் சுட்டிக்காட்டிவிட்டு அவர் சொல்கிறார், (வச 22) “அப்படியிருக்க” - ஏசாயாவின் வார்த்தைகள் உண்மையெனில், ஏசாயாவின் நாட
இப்போது கிமு 705-ல், தெற்கு ராஜ்யமும் மிகமோசமாகத் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தது. அவிசுவாசம் மற்றும் விசுவாசத்துரோகத்தினால் வடக்கு ராஜ்யத்திற்கு என்ன நடந்ததோ, அதே கதிதான் உங்களுக்கும் என்று தெற்கு ராஜ்யத்தைத் தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம் தேவன் எச்சரிக்கிறார். ஏசாயா 28-ஆம் அதிகாரத்தின் முதல் 15 வசனங்களில் சொல்லப்பட்டுள்ள செய்தி இதுதான். வடக்கு ராஜ்யம் பெற்றுக்கொண்ட அதே தண்டனை உங்களுக்கும் வரும் என்று தெற்கு ராஜ்யமாகிய யூதாவுக்குத் தீர்க்கதரிசி மூலம் வந்த எச்சரிப்பு இது.
இப்போது ஏசாயா இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுகிறார் என்று பார்க்கலாம். அவர், இஸ்ரவேலின் தலைவர்களும், தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும் குடிவெறியில் இருக்கக் காண்கிறார். வசனம் 7-ல்: “இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்”.
8-ஆம் வசனத்தில் காணப்படும் அருவருப்பைப் பாருங்கள்: “போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை”. உண்மையில், அவர் அவர்களைக் குடிவெறியில் மயங்கி வாந்தி எடுத்தவர்களாகக் காண்கிறார். அவர்கள் களியாட்டத்தில் இருக்கையில், அவர்களை மிகக்கடுமையாகக் கடிந்துகொண்டு, வரப்போகிற நியாயத்தீர்ப்பைக்குறித்து எச்சரிக்கை கொடுக்கிறார். அவர்கள் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்
ஏசாயாவின் இந்த செய்தியை அவர்கள் காதுகொடுத்துக் கேட்கவில்லை. அதனால்தான் வசனம் 11-ல் அவர் தேவனுக்காகப் பேசுகிறார்: “பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்”.
இப்போது தேவன் சொல்கிறார்: ‘ஏசாயாவின் குழந்தையைப்போன்ற, திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட எளிமையான செய்தியை நீங்கள் இனி கேட்கமாட்டீர்கள், நீங்கள் இனி புரிந்துகொள்ள முடியாத பாஷையில் உங்களுடன் பேசப்போகிறேன்’. தேவன் என்ன சொன்னார் என்றால், உளறும் பாபிலோனியர்கள் வந்து உங்கள் பட்டணத்தைச் சூழ்ந்து, உங்கள் தேசத்திலிருந்து உங்களை வெளியேற்றி, உங்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அழித்து, தீக்கிரையாக்குவார்கள். தங்களுக்குத் தெரியாத, புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான பாபிலோனியர்களின் உளறல் பாஷையை அவர்கள் கேட்கும்போது, தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள்மீது வந்திருக்கிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். அவர்களது அவிசுவாசத்தினாலும், விசுவாசத்துரோகத்தினாலும், தேவனுடைய இந்தப் பயங்கரமான நியாயத்தீர்ப்பு கிமு 588-ல் நிறைவேறியது.
அந்நியபாஷை அவிசுவாசிகளுக்கு அடையாளம் இப்போது மீண்டும் 1 கொரிந்தியர் நிருபத்திற்கு வருகிறோம். இங்கே அப்போஸ்தலனாகிய பவுல் பழைய ஏற்பாட்டு வசனத்தை மேற்கோள் காட்டும்போது அவர் சொல்கிறார், ‘ஏசாயா சொன்னதுபோல, மோசே சொன்னதுபோல, எரேமியா சொன்னதுபோல, அந்நியபாஷையை நீங்கள் பேசக் கேட்கும்போது, அவிசுவாசிகள்மீது தேவன் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவரப்போவதற்கான அடையாளம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்’ என்று சொல்கிறார்.
‘அப்போஸ்தலனாகிய பவுல் வாழ்ந்த காலத்தில் இந்த அடையாளம் எதை அர்த்தப்படுத்தியது?’ என்று நீங்கள் கேட்கலாம். கேளுங்கள், பெந்தேகோஸ்தே நாளில் அவர்கள் பற்பல பாஷைகளில் பேசத் தொடங்கியபோது, தேவனுடைய நியாயத்தீர்ப்பு சமீபித்திருக்கிறது என்பதை அங்கே கூடியிருந்த ஒவ்வொரு யூதரும் அறிந்திருப்பார்கள். உங்களுக்குத் தெரியுமா? அதற்குப்பிறகு வெறும் 30 ஆண்டுகளுக்குள் ரோமப் பேரரசு உள்ளே வந்து எருசலேமைத் தரைமட்டமாக்கி, யூத சமயத்தையும் அழித்தது என்று. அன்று ஒழிந்துபோன பலி செலுத்தும் சம்பிரதாயம் மீண்டும் தொடங்கப்படவே இல்லை. தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள்மீது வந்திருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள்.
நியாயத்தீர்ப்பு வருகிறது என்பதை இயேசு மீண்டும் மீண்டும் தம்முடைய போதனைகளில் சொன்னார். அப்போஸ்தலர்களின் ஊழியத்தின்போது நியாயத்தீர்ப்பு எருசலேமின்மேல் வந்துகொண்டிருந்தது. இயேசு நியாயத்தீர்ப்பைப் பிரசங்கித்தார், அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில் அது அடையாளமாகக் காட்டப்பட்டது; அதனால்தான் அப்போஸ்தலனாகிய பவுல் ஏசாயா 28-ஆம் அதிகாரத்தை மேற்கோள்காட்டி, ‘நீங்கள் செவிகொடுக்கமாட்டீர்கள்’ என்று சொல்கிறார்.
அந்நியபாஷையின் இந்த நோக்கமானது அப்போஸ்தலர் நடபடிகள் முழுவதும் செயல்படுவதை நாம் பார்க்கலாம். அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில் அவிசுவாசியான யூதர்கள் பலர் அங்கே இருந்தார்கள். பின்னர், அந்நியபாஷை பேசப்பட்ட மற்ற தருணங்களில் (அதிகாரங்கள் 8, 10, 19-ல்), அவிசுவாசிகளான யூதர்கள் விசுவாசிகளாக மாறினாலும், மீண்டும் மீண்டும் இதே நிகழ்வு நடைபெறுவதைப் பார்த்த யூதர்கள், அவர்கள் பார்த்ததையும், என்ன நடந்தது என்பதையும் தங்கள் சக யூதர்களிடம் நிச்சயம் சொல்லியிருப்பார்கள். அப்போஸ்தலர் 8, 10, 19 அதிகாரங்களில் எங்கெல்லாம் அந்நியபாஷை பேசப்பட்
உதாரணமாக, நான் சாலையில் திருச்சிக்குச் சென்றுகொண்டிருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு இடத்தில் திருச்சி 300 கி.மீ என்ற அறிவிப்பை (அடையாளத்தை) காண்கிறேன். பிறகு 200 கி.மீ என்கிற அறிவிப்பைக் காண்கிறேன். பிறகு 100 கி.மீ என்ற அறிவிப்பைக் காண்கிறேன். திருச்சிக்கு வந்தபிறகு நான் எந்த ஒரு அறிவிப்பையும் (அடையாளத்தையும்) காணவில்லை, ஏனென்றால் நான் திருச்சிக்கு வந்துவிட்டேன், இனி அந்த அடையாளம் தேவையில்லை.
தீர்க்கதரிசனம் விசுவாசிகளுக்கு அடையாளம் வசனம் 22-ல், “தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது” என்று குறிப்பிடுகிறார். தீர்க்கதரிசனமானது, திருச்சபை யுகத்தில் விசுவாசிக்கிறவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்குப் பயன்படக்கூடியது.
“தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ” 3-ஆம் வசனத்தில், “மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்”. “தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்” (வச 4). “விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்” (வசனம் 1). இதன் அர்த்தம் என்ன? தேவனுடைய வார்த்தையை மட்டும் பிரசங்கியுங்கள். நீங்கள் கொரிந்து சபைக்குச் சென்றிருப்பீர்கள் என்றால், நாம் முன்னரே பார்த்தபடி, அங்கே எல்லாவகையான சுயநலமான, சுயமதிப்பைக் கூட்டும் மாயலோகப் பாஷைகளைக் கேட்டிருப்பீர்கள். அதற்குத்தான் பவுல் சொல்கிறார், அவையெல்லாவற்றையும் நிறுத்துங்கள். அது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகக் கொடுக்கப்பட்டது. நீங்கள் கூடி வரும்போது தேவனுடைய சத்தியத்தைப் பிரசங்கிக்கும்
வசனம் 24, 25-ல், “எல்லாரும் தீர்க்கதரிசனஞ்சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான். அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்”.