வேதப்புத்தகத்தில் உள்ள, புரிந்துகொள்வதற்குக் கடினமான பகுதிகளில் 1 கொரிந்தியர் 14-ஆம் அதிகாரமும் ஒன்று. அந்நியபாஷை (வேற்றுமொழி) பேசுவதைக் குறித்து விளக்கும் இந்த வேதப்பகுதியையும், அதைக் குறித்த மற்ற வேதப்பகுதிகளில் சொல்லப்பட்டவைகளையும், கொரிந்து திருச்சபையின் பின்னணியத்தையும் ஒன்றாகப் பொருத்திப் பார்க்காமல் புரிந்துகொள்ள முடியாது. பாபேலில் தங்களுக்குப் பெயர் உண்டாகக் கோபுரம் கட்ட முயன்ற மக்களின் பாஷையைத் தேவன் தாறுமாறாக்கினார் என்று வாசிக்கிறோம் (ஆதி 11). அதற்கு இணையாகப் பாஷைகள் தாறுமாறாக, குழப்பமாகப் பேசப்பட்ட இடம் கொரிந்து திருச்சபையாகும். கொரிந்து திருச்சபையில் நிலவிய அந்நியபாஷைக் குழப்பத்தைச் சரிசெய்ய, ஒரு முழு அதிகாரத்தையே அப்போஸ்தலனாகிய பவுல் எழுதவேண்டியிருந்தது!
ஆதித் திருச்சபையில் இருந்த விசுவாசிகளுக்குத் தேவன் வரங்களைக் கொடுத்தபோது, புது யுகத்துக்கான தனது செய்தியின் உண்மையை உறுதிப்படுத்தப் பல அற்புதமான வரங்களையும் தேவன் கொடுத்தார். அவற்றில் ஒன்றுதான் இந்த அந்நியபாஷையில் (வேற்றுமொழி) பேசும் வரமாகும். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்.” (எபிரேயர் 1:1,2). இது ஒரு புதிய செய்தி, புதிய காலம் மற்றும் புதிய வெளிப்பாடு என்பதையும், தேவன் மீண்டும் அவர்களுடன் பேசுகிறார் என்பதையும், குறிப்பாக யூதர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே தேவனுடைய நோக்கம். தேவனுடைய இந்த நோக்கம் நிறைவேற, சில சிறப்பு அற்புத அடையாளங்களைச் செய்யும் வரங்களை அப்போஸ்தலர்களுக்கும், உடன் ஊழியர்களுக்கும் தேவன் கொடுத்தார். அவைகளில் ஒன்றுதான் 'அந்நியபாஷையின் வரம்' என்று அழைக்கப்படும், பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் தாங்கள் முன்னர் அறிந்திராத வேறொரு உலகப் பாஷையைப் பேசும் வரமாகும்.
கொரிந்திய கலாச்சாரமும், பரவச பாஷைகளும்...
வேதத்தில் காணப்படும் அந்நியபாஷையானது, எப்போதும் மனிதர்கள் பேசும் ஒரு பாஷையாகவே இருந்தது. அப்போஸ்தலர் 2:11-இல், மேல் வீட்டு அறையில் கூடியிருந்த மக்கள் அனைவரும் தங்களுடைய சொந்தப் பாஷையிலே தேவனுடைய மகத்துவங்களைப் பேசக் கேட்டார்கள் என்றுதான் நாம் வாசிக்கிறோம். அங்கே பேசிய மக்களுக்கு அந்தப் பாஷை புரியாவிட்டாலும், அதைக் கேட்ட மக்களுக்கு அவர்கள் பேசியது புரிந்தது. அந்நியபாஷை வரத்தைப் பயன்படுத்துவதில் கொரிந்து திருச்சபையில் குழப்பமும், கூச்சலும் நிலவியதால், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திற்குப் பிறகு அந்த வரத்தைக் குறித்து நேரடியாக நாம் 1 கொரிந்தியர் நிருபத்தில் மட்டுமே வாசிக்கிறோம். கொரிந்து திருச்சபையில், புறஜாதியாரின் போலியான பரவச (Ecstasy) அந்நியபாஷையை, உண்மையான அந்நியபாஷையின் வரத்திற்குப் பதிலாக மாற்றியிருந்தனர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், உண்மையான அந்நியபாஷையின் வரமானது, போலியான பரவச பாஷையுடன் கலக்கப்பட்டிருந்தது.
இந்தப் பரவசப் பேச்சுகளும் பாஷைகளும் புறஜாதியாரின் சமயத்தில் மிகவும் வழக்கமானவை. உதாரணமாக, ஆப்பிரிக்காவின் சூளு (Zulus) என்ற இன மக்களிடையே இதுபோன்ற பரவச உளறல் பேச்சுகள் இன்றும் காணப்படுகின்றன. நம்மூரிலும் மற்ற மதத்தினர் சாமியாடுதல் எனும் பெயரில் செய்யும் பரவச உளறல்களைக் கேட்டிருப்பீர்கள்.
தற்போது, கொரிந்து திருச்சபையின் பின்னணியை நாம் பார்ப்போம். பொதுவாகவே, கொரிந்தியர்கள் தங்களைச் சுற்றிக் காணப்பட்ட எல்லா உலகப் பழக்கவழக்கங்களையும் தங்களுடைய திருச்சபையில் அனுமதித்திருந்தனர். 1 கொரிந்தியரின் முதல் நான்கு அதிகாரங்களில் நாம் பார்க்கிறபடி, மனிதரின் தத்துவங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தார்கள். தங்கள் சமூகத்தில் காணப்பட்டபடியே, 3-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறபடி, திருச்சபைக்குள்ளும் மனிதத் தலைவர்களைத் தூக்கிப்பிடித்துக் கொண்டாடினார்கள். மிக மோசமான அருவருக்கத்தக்க பாலியல் பாவங்களில் ஈடுபட்டதை 5 மற்றும் 6-ஆம் அதிகாரங்களில் வாசிக்கிறோம். 6-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறபடி, ஒருவர் மேல் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துக்கொண்டார்கள். திருமண உறவை அசுத்தப்படுத்தி, ஒட்டுமொத்த குடும்ப அமைப்பையே சீரழித்து வைத்திருந்தார்கள்; 7-ஆம் அதிகாரத்தில் இதைப் பற்றி வாசிக்கிறோம்.
8, 9 மற்றும் 10-ஆம் அதிகாரங்களில் வாசிக்கிறபடி, புறஜாதியாரின் திருவிழாக் கொண்டாட்டங்களிலும், விக்கிரகங்களுக்குப் படைத்ததைச் சாப்பிடுதலிலும் மிகப்பெரிய குழப்பம் திருச்சபையில் காணப்பட்டது. திருச்சபையில் பெண்களுக்குத் தரப்பட வேண்டிய இடத்திலும் அவர்களுக்குத் தெளிவில்லை; அதைக் குறித்து 11-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். திருச்சபையில் ஆவிக்குரிய வரங்களை மிகத் தவறாகப் பயன்படுத்தியதைக் குறித்து 12-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். கிறிஸ்தவ குணாதிசயங்களில் மிக முக்கியமான அன்பை அவர்கள் இழந்துவிட்டதைக் குறித்து 13-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.
அன்று அவர்கள் சமுதாயக் கலாச்சாரத்தில் காணப்பட்ட சாத்தானிய மற்றும் அருவருக்கத்தக்கப் பழக்கவழக்கங்கள் எல்லாவற்றையும் முழுமையாகத் தங்களுடைய திருச்சபையிலே அனுமதித்திருந்தனர். எல்லாவிதமான பரவச உளறல்கள், அதனுடன் இணைந்த ஆபாசங்கள், சிற்றின்பங்கள் மற்றும் களியாட்டுகள் என எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகத் தங்கள் திருச்சபையில் இறக்குமதி செய்திருந்தனர். இது ஒரு புறஜாதி மதத்தை அங்கே தோற்றுவித்திருந்தது. உண்மையும் பொய்யும் கலந்த ஒரு குழப்பமான நிலையே அங்கு காணப்பட்டது. இன்று அதற்கு இணையாகக் கிறிஸ்தவம் என்று சொல்லப்படுகிற ரோம கத்தோலிக்கத்தைச் சொல்லலாம்; அது வேதத்திலுள்ள கிறிஸ்தவமும், பாகால் வழிபாடும், அஸ்தரோத் - தாமூஸ் வழிபாடாகிய தாய் - குழந்தை வழிபாட்டையும் உள்ளடக்கியதாகும். இதேபோன்றதொரு நிலையே கொரிந்து திருச்சபையிலும் காணப்பட்டது; கிறிஸ்தவமும் புறஜாதி மதமும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருந்தன.
கொரிந்து திருச்சபையின் காலத்திலிருந்த கிரேக்க - ரோம கலாச்சாரத்தை நீங்கள் பார்த்தீர்களானால், அவர்கள் பலதரப்பட்ட ஆண் மற்றும் பெண் பூசாரிகளைத் தங்கள் கோயில்களில் கொண்டிருந்தார்கள்; கிரேக்கக் கடவுள்களின் பக்தர்கள் இந்தக் கோயில்களுக்குச் சென்று அதில் இருந்த ஆண் மற்றும் பெண் பூசாரிகளை வழிபடுவார்கள். அப்போது அந்த பக்தர்கள் பரவச (உளறல்) பேச்சுகளில் (Ecstasy) தங்களை ஈடுபடுத்திக்கொள்வது வழக்கம். பரவசநிலை (Ecstasy) என்றால் ஒருவர் தன்னுடைய உடலை விட்டு வெளியே செல்லுதல் என்று பொருள்படும். உண்மையிலேயே அவர்கள் உருண்டு புரண்டு சுயநினைவிழந்து, ஆட்டம்போட்டு, பைத்தியம் பிடித்தவர்களைப் போல் நடந்துகொள்வார்கள். உண்மையிலேயே அவர்கள் தங்கள் உடலைவிட்டு வெளியேறி, வானத்துக்கு ஏறி, அவர்கள் எந்தத் தேவதையை வணங்கினார்களோ அந்தத் தேவதையுடன் ஐக்கியம் கொள்வதாக நம்பினார்கள்; அந்தத் தேவதையுடன் ஐக்கியம் கொண்ட பிறகு, அவர்கள் தேவ பாஷையைப் பேசுவதாக நம்பினார்கள்.
இது அவர்கள் கலாச்சாரத்தில் வழக்கமான ஒன்றாகும். அந்நியபாஷையைக் குறிக்கக் கொரிந்தியர் நிருபத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘glōssais lalein’ என்ற வார்த்தையானது, வேதாகம ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல; மாறாக, புறஜாதியாரின் பரவசப் பேச்சுகளைக் குறிக்கக் கிரேக்க - ரோம கலாச்சாரத்தில் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாகும். அது உடலிலிருந்து வெளியே சென்று, தேவதையுடன் கலந்து, மாய வழியில் அவர்களுடைய மொழியாகிய முட்டாள்தனமான, எந்தப் பொருளையும் தராத, புரிந்துகொள்ள முடியாத அர்த்தமற்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் பேசி உளறுவதாகும்.
கிரேக்கர்கள் இந்தப் பரவச சமய வழிபாட்டு முறைக்கு ஈரோஸ் (eros) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். கிரேக்க வேதாகமத்தில் காணப்படும் அந்த வார்த்தையானது, பாலியல் சார்ந்த அன்பைக் குறிக்கும் விதமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த வார்த்தையின் அர்த்தம் அதையும் தாண்டிச் செல்கிறது. ஈரோஸ் என்பதன் அர்த்தம், ஆபாசத்தின் மீதான நாட்டம், சிற்றின்ப நாட்டம், பரவச நாட்டம், உச்சகட்ட அனுபவம் அல்லது உணர்ச்சியின் மீதான நாட்டம் என்பதையும் குறிக்கும். மேலும் அவர்கள் பின்பற்றிய சமய வழக்கமானது ஆபாசத்தை உள்ளடக்கியதாகும். அவர்களின் சமயம், சிற்றின்பம், ஆபாசம் மற்றும் பரவசநிலையை உள்ளடக்கிய உணர்ச்சிபூர்வமானதாகும். அந்தச் சமயங்களைப் பற்றி நீங்கள் படிப்பீர்கள் என்றால், அந்தக் கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் அங்குள்ள ஆண் மற்றும் பெண் பூசாரிகளுடன் கூட்டுப் பாலியல் உறவில் ஈடுபட்டதையும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும். ஆபாசம், பாலியல், சிற்றின்பம் மற்றும் தேவர்களின் பரவசப் பேச்சுகளை ஒருசேர மூட்டைகட்டிய, பாபிலோனில் தோன்றிய அந்த மாய சமய வழக்கமானது, கொரிந்திய கலாச்சாரத்திலும் இறக்குமதி செய்யப்பட்டது. இதைப் பற்றிய மேலதிக வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன; உங்களுக்கு ஆர்வம் இருப்பின் இணையதளத்திலோ அல்லது அதைச் சார்ந்த புத்தகங்களிலோ படித்து அறிந்துகொள்ளுங்கள்.
கொரிந்துவில் அன்று என்ன நடந்ததோ, அதுவே இன்றைய பெந்தேகோஸ்தே திருச்சபைகளிலும் (Charismatic movements) நடந்துகொண்டிருக்கிறது. பெந்தேகோஸ்தே அமைப்புகள் மற்றும் திருச்சபைகள் தங்களது மந்த நிலையினாலும், பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகளைப் பன்னெடுங்காலமாக உதாசீனப்படுத்தியதாலும், மிகச்சிறந்த நுணுக்கமான வேத போதனை இல்லாததாலும், எந்தவிதமான குறிப்பிடத்தக்க ஆவிக்குரிய விழிப்பு மற்றும் எழுப்புதல் இல்லாததாலும், திருச்சபை மக்கள் தேவனைத் தொட்டு உணர விரும்பினார்கள்; பரவச உணர்ச்சியை விரும்பினார்கள். அதுவே சாத்தானின் போலியான உணர்ச்சியின் நுழைவாயிலாக மாறியது. இன்று பெந்தேகோஸ்தே திருச்சபையில் நடப்பது என்னவென்றால், ‘வெறுமனே கொரிந்து திரும்பிப் பார்க்கப்படுகிறது’ (ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால், ‘Simply Corinth revisited’). சபையானது புறஜாதி மதப் பழக்கவழக்கங்களுடன் கைகோர்த்திருக்கிறது. சிற்றின்ப, உணர்ச்சிபூர்வமான, அனுபவம் சார்ந்த, ஆபாச சமய வழிபாட்டு முறையை அவர்கள் உருவாக்கி, அதைப் பரிசுத்த ஆவியானவரின் செயல் என்று அழைக்கிறார்கள். ஆனால், உண்மையில் அது சாத்தானின் ஏமாற்றாகவே இருக்கிறது. பெந்தேகோஸ்தே அனுபவத்துக்குள் சென்றவர்களுடன் நீங்கள் பேசினால், அவர்களின் அனுபவம் முழுவதும் உணர்வு மற்றும் உணர்ச்சிபூர்வமான அனுபவம் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
தாங்கள் அந்நியபாஷை வரத்தைப் பெற்றுக்கொண்டதாகச் சொல்லும் பலரது அனுபவங்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் ஜெபித்துக்கொண்டிருந்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது இறங்கியதால் அவர்கள் பெலனின்றி கீழே விழுந்ததாகவும், பிறகு அவர்களுக்குப் புரியாத வார்த்தைகளைப் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் வாயிலே கொடுத்ததாகவும், அதை மீண்டும் மீண்டும் சொல்கையில் தங்களுக்கு ஒரு பரவச அனுபவம் ஏற்பட்டதாகவும், தேவன் தங்களைத் தொட்டதுபோல் உணர்ந்ததாகவும் குறிப்பிடுவார்கள். ஆவியில் நிறைந்து தாங்கள் கீழே விழுந்தபோது தங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்றும், ஒரு மணி நேரம் கழித்துத்தான் சுயநினைவுக்கு வந்ததாகவும் சிலர் குறிப்பிடுவார்கள். இன்னும் சிலர், ஒரு குறிப்பிட்ட ஊழியர் வந்து தங்கள் தலையில் கைவைத்து ஜெபித்தபோது உடனடியாக அந்நியபாஷை வரத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கூறுவார்கள்.
ஒருமுறை அந்நியபாஷை பேசும் ஊழியர் ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அவர், நானும் அந்நியபாஷை பேச வேண்டும் என்றும், அப்படிப் பேசினால்தான் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டதற்கான அடையாளம் என்றும் சொன்னார். மேலும், நான் எப்படி அந்நியபாஷை பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எனக்குச் சொன்னார். அதாவது, நான் காலை 4 மணிக்கு எழுந்து முழங்கால்படியிட்டு (ஜெபிக்கக் கூடாதாம்!) வெறும் ஸ்தோத்திரம் மட்டுமே சொல்ல வேண்டுமாம். அப்படி நான் திரும்பத் திரும்ப ஸ்தோத்திரம் சொன்ன பிறகு, அது அந்நியபாஷையாக மாறுமாம். அவரது இந்தப் புரிதலை நினைத்து நான் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. அங்கே நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? எல்லா வகையான உணர்வுபூர்வமான அனுபவங்கள், உணர்ச்சி மேலோங்கிய அனுபவங்கள் மற்றும் சிற்றின்ப அனுபவங்கள் ஆகியவை மனதினால் ஆட்கொள்ளப்படுவதைவிட, உணர்ச்சியினால் ஆட்கொள்ளப்பட்டதன் வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. இது புறஜாதி மதத்தில் காணப்படும் வழக்கம். கிறிஸ்துவுக்கு முன் (கி.மு.) 429 முதல் 347 வரை வாழ்ந்த பிளாட்டோ, தன்னுடைய குறிப்புகளில் இதுபோன்ற புறஜாதி மதத்தின் பரவச அனுபவங்களைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதியுள்ளார்.
இந்த உணர்வுகளில் எதுவும் உண்மையான கிறிஸ்தவத்திற்குச் சொந்தமானதல்ல. கிறிஸ்தவத்தில் உண்மையான அந்நியபாஷையின் வரமானது, தேவன் அங்கே இருப்பதையும் தேவனுடைய மக்கள் தேவனின் சத்தியத்தைப் பேசுகிறார்கள் என்பதைக் குறிக்கவும், அந்தப் பாஷை தெரிந்த யாராவது அங்கே இருக்கும்போது மட்டுமே ஒரு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது. புறஜாதி சமயப் பழக்கங்களுடன் குழப்பிக்கொள்ளும்படி அது ஒருபோதும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், தேவன் ஒன்றைச் செய்யும்போது சாத்தான் அதேபோன்ற போலியான ஒன்றை அறிமுகப்படுத்துகிறான், இல்லையா? அதுவே பிரச்சினையை இன்னும் அதிகரிக்கிறது.
ஆதித் திருச்சபையில் பரிசுத்த ஆவியானவரின் உண்மையான வெளிப்பாடுகளை மறைக்க, சாத்தான் போலியான வெளிப்பாடுகளையும் தரிசனங்களையும் அந்நியபாஷைகளையும் ஒரு புகைமண்டலமாகப் பயன்படுத்தினான். அதனால்தான் (1 யோவான் 4:1)-ல், “உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்” என்று யோவான் எழுதுகிறார். போலிகளுக்கு வீழ்ந்துபோவது மிகவும் எளிதானது. கொரிந்தியர்கள் அந்த யுகத்தின் மதங்களோடு கைகோர்க்க முடிவு செய்ததால் பாதிக்கப்பட்டார்கள்.
சாத்தான் இக்காலத்தின் அதிபதி என்றும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளுக்கு வலுவூட்டுகிறவன் என்றும் அழைக்கப்படுகிறான். ஒளியின் தூதனைப்போல் பிரகாசித்து, தேவனைப்போல் இருக்க விரும்புகிறான். திருச்சபை போலியை நம்பவும், உண்மையைப் பொய்யாக்கவும் அவன் விரும்புகிறான்; இதுவே அவனது வேலை! ஆகவேதான் புறஜாதி மதத்தில் நாம் காணும் எல்லாப் போலிகளிலும் கொரிந்து திருச்சபையும் மூழ்கியிருந்தது.
இதேபோன்றதொரு நிலைதான் இன்றைய பெந்தேகோஸ்தே திருச்சபைகளிலும் காணப்படுகிறது. எந்த ஒரு பரவசநிலையும், உணர்ச்சி மேலோட்டமும், ஆபாசமும், சரீரத்திலிருந்து வெளியே செல்லுதல் போன்றவையும் எந்த வகையிலும் புதிய ஏற்பாட்டுப் பரிசுத்த ஆவியானவரின் செயலுடன் சம்பந்தப்பட்டவை அல்ல. உண்மையில் (1 கொரிந்தியர் 14:32) சொல்கிறது: “தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே”. இதன் அர்த்தம், தன்னைத் தேவனுடைய வார்த்தையைப் போதிப்பவன் என்று சொல்லுகிறவன், தன்னுடைய ஆவியை அடக்க வல்லவனாய் இருக்கிறான் என்பதே! ஒருவனும் தன் ஆவியை விடுவதில்லை; ஒருவனும் கட்டுப்பாட்டை இழக்கிறதில்லை; தேவன் நியமித்தபடியே அன்றி ஒருவனும் தன் உடலை விட்டு வெளியே செல்கிறதுமில்லை! அதனால்தான் பதினான்காம் அதிகாரத்தின் இறுதியில், "சகலமும் நல்ஒழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது" என்று அப். பவுல் சொல்லுகிறார். சபை கூடி வந்திருக்கும்போது எல்லோரும் குதித்து, “உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான்" (1 கொரி 14:26) என்று இருப்பது பரிசுத்த ஆவியானவரின் வழி அல்ல! இப்படியாகப் புறஜாதி சமயத்தில் காணப்பட்ட குழப்பம் திருச்சபையையும் விழுங்கியிருந்தது!
பாபிலோனில் காணப்பட்ட இந்த மாய மத வழிபாட்டு முறைகள் கொரிந்திய கலாச்சாரத்தையும் ஆட்டுவித்தன. அவர்கள் எல்லாவிதமான சடங்காச்சாரங்களையும், பாரம்பரியங்களையும், நேர்த்திக்கடன்களையும், ஞானஸ்நானங்களையும், மிருக பலிகளையும், திருவிழாக்களையும், உபவாசங்களையும், பாவத்தைக் கழுவ உறைந்த நதியில் முங்குதல், முழங்காலில் பல மைல்கள் நடத்தல் போன்றவைகளையும் தோற்றுவித்திருந்தார்கள். போலியான சமய முறைகள், பரவசப் பேச்சுகள் மற்றும் தரிசனங்கள் எல்லாம் அவர்களின் வழிபாட்டு முறையின் அங்கமாக இருந்தன. இவையெல்லாம் கொரிந்தியரின் கலாச்சாரத்திலும் காணப்பட்டதால், இப்போது கொரிந்திய மக்கள் ஒரு சபையாகக் கூடி வரும்போது இதே கூச்சலும் குழப்பமும் சபையிலும் நிலவின. நம்முடைய கலாச்சாரத்தோடு ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இன்று எப்படிப் புறஜாதியார் வழக்கமான சாதி, பிசாசு, நல்ல நேரம் பார்த்தல், முகூர்த்த நேரம் பார்த்தல், ஜாதகம் பார்த்தல் போன்றவை திருச்சபை மற்றும் விசுவாசிகளின் வாழ்க்கையிலும் காணப்படுகின்றனவோ, அதேபோல அன்று மேற்சொன்ன காரியங்கள் கொரிந்து திருச்சபையில் ஊடுருவியிருந்தன.
12-ஆம் அதிகாரத்தில், உங்களுக்குத் தெரியுமா? அங்கே கூடியிருந்த மக்கள் எழுந்து நின்று அந்நியபாஷை என்ற பெயரில் இயேசுவைச் சபித்துக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்த மக்களில் சிலர், "இது பரிசுத்த ஆவியா?" என்று கேட்டதால்தான், “தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவன் என்று சொல்ல மாட்டான்” என்று அப். பவுல் எழுதுகிறார். கிரேக்க மத வழிபாட்டு முறைகளின் காட்டுமிராண்டித்தனம், கொரிந்து திருச்சபையின் பைத்தியக்காரப் போக்கிற்குக் காரணமாயிற்று.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இன்றைய பெந்தேகோஸ்தே திருச்சபையும் புறஜாதி மதத்தின் வழக்கங்களில் மூழ்கியிருப்பதை நம்மால் காண முடியும். தங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவராத ஒரு திருச்சபையில் நீண்ட நாட்கள் இருந்த மக்களின் உணர்ச்சியை, பரவச வழிபாட்டு முறை தூண்டிவிடுவதால் இந்தப் போலியானது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதைச் சரிசெய்யவே 14-ஆம் அதிகாரத்தைப் பவுல் எழுதுகிறார்.
கொரிந்தியர் நிருபத்தில் அந்நியபாஷை
1 கொரிந்தியர் 14-ஆம் அதிகாரத்தை இப்போது தியானிக்கலாம். இதை மூன்று பகுதிகளாகப் பிரிக்க விரும்புகிறேன்:
அந்நியபாஷைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் (முதல் 19 வசனங்கள்).
அந்நியபாஷையின் முக்கியத்துவம்: இரண்டாம் பட்சம்.
அந்நியபாஷையின் முக்கியத்துவம்
மற்ற வரங்களுடன் ஒப்பிடுகையில் அந்நியபாஷையின் இடம் இரண்டாம் பட்சமே என்பதை அப். பவுல் தெளிவுபடுத்துகிறார். இதற்கு மூன்று காரணங்களை அவர் குறிப்பிடுகிறார்.
முதலாவது காரணம்: ஏன் அந்நியபாஷை இரண்டாம் பட்சம்? ஏன் தீர்க்கதரிசன வரம் அந்நியபாஷையை விட மேலானது? பவுலினுடைய ஒப்பிடுதலின்படி, தீர்க்கதரிசனம் சபையின் பக்திவிருத்திக்கு உதவி செய்கிறது; ஆனால், அந்நியபாஷை சபையின் பக்திவிருத்திக்குப் பயனற்றது. இதுவே முதலாம் காரணம். முதல் ஐந்து வசனங்களில் இதை வாசிக்கிறோம். (‘பக்திவிருத்தி’ என்ற பழைய தமிழ் வார்த்தைக்கு இணையான சொல்லாக்கம் ‘ஆவிக்குரிய வளர்ச்சி’ என்பதாகும். ஆகவே, இனிவரும் பகுதிகளில் ‘ஆவிக்குரிய வளர்ச்சி’ என்ற பதத்தையே பயன்படுத்துவேன்.)
இப்போது ஒரு மிக முக்கியமான அடிக்குறிப்பைக் குறிப்பிட விரும்புகிறேன்: சபை கூடிவருவதற்கான மிக முக்கியமான நோக்கம் என்ன? பதில் மிக எளிமையானது, விசுவாசிகளின் ‘ஆவிக்குரிய வளர்ச்சி’. இருபத்தாறாம் வசனத்தின் இறுதி இதைத் தெளிவுபடச் சொல்கிறது: “சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் (ஆவிக்குரிய வளர்ச்சிக்கேதுவாக) செய்யப்படக்கடவது”. பன்னிரண்டாம் வசனத்தின் பின்பகுதி, “சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்” என்கிறது. மீண்டும் ஆவிக்குரிய வளர்ச்சியே இங்கு முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. மேலும், நான்கு மற்றும் ஐந்தாம் வசனங்களிலும் முறையே, “தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்” மற்றும் “சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால்” என்றெல்லாம் சபையின் ஆவிக்குரிய வளர்ச்சி மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதால், சபை கூடிவருதலின் முக்கிய நோக்கம் விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சி என்பது மிகவும் தெளிவாகிறது.
மேலும், முழு அதிகாரத்திலும் விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சி மீண்டும் மீண்டும் மையப்படுத்தப்படுகிறது. 31-ஆம் வசனத்தில், “எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம்” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, எல்லோரும் ஆவிக்குரிய வளர்ச்சி பெற வேண்டும், எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும், எல்லோரும் கட்டப்பட வேண்டும். திருச்சபை கூடிவருதலின் முக்கிய நோக்கம் ஆவிக்குரிய வளர்ச்சி அல்லது கட்டப்படுதல். அந்நியபாஷையானது, அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்குப் புரியாததால், அது சபையை ஆவிக்குரிய வளர்ச்சிக்கு நேராக நடத்தப் பயனற்றது. குறிப்பாக, கொரிந்து திருச்சபையினரின் பாஷை அந்நியபாஷையே அல்ல என்று அப். பவுல் சொல்கிறார்! முதல் ஐந்து வசனங்களின் அடிப்படைச் செய்தி இதுதான்.
வசனம் 1: “அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்”.
‘அன்பை நாடுங்கள்’ என்பது 13-ஆம் அதிகாரத்தின் தொடர்ச்சியாகும். அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், "நீங்கள் நாடித்தேட வேண்டிய உன்னதமான ‘அன்பைப்’ பற்றி இப்பொழுதுதான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன்" என்பதாகும்.
1 கொரிந்தியர் 12-ஆம் அதிகாரம் எப்படி நிறைவுபெற்றது என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? 12:31-ல் அப். பவுல் என்ன சொல்கிறார் என்றால், "நீங்கள் உங்களையே உயர்த்திக் காட்டும் வரங்களை நாடுகிறீர்கள்; ஆனால், அதைவிட மேலான ஒன்றை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். நீங்கள் உங்களையே முன்னிலைப்படுத்தும் வரங்களை, உங்கள் மதிப்பைக் கூட்டும் வரங்களை, மற்றவர்கள் வெளிப்படையாகப் பார்க்கக்கூடிய வரங்களை நாடுகிறீர்கள். நான் உங்களுக்குச் சிறந்த ஒன்றைக் காட்ட விரும்புகிறேன்; அன்பை நாடுங்கள்". அதனால்தான் 13-ஆம் அதிகாரத்தில் அன்பின் சிறப்பினைப் பற்றிக் கூறியபிறகு, 14-ஆம் அதிகாரத்தின் துவக்கத்திலும் அதே குறிப்பிற்கு மீண்டும் வருகிறார்.
அன்பைக் குறித்த 13-ஆம் அதிகாரத்தை மறைத்துவிட்டு, இப்போது 12-ஆம் அதிகாரத்தின் இறுதியை 14-ஆம் அதிகாரத்தின் தொடக்கத்துடன் இணைத்துப் பாருங்கள். 14:1-ல் பவுல் சொல்கிறார்: "இப்போது நீங்கள் உண்மையாகவே ஒன்றைத் தேட விரும்பினால், அன்பை நாடுங்கள்". இதற்கு ‘diōkō’ என்ற கிரேக்க வார்த்தையை அவர் பயன்படுத்துகிறார். அதன் அர்த்தம், 'துரத்து' அல்லது 'பின்தொடர்' அல்லது 'நாடுதல்' என்பதாகும்; உண்மையில், 'நான் அதை அடைந்தே தீர வேண்டும்' என்ற முனைப்புடன், உற்சாகத்துடன், உறுதியுடன் அதைப் பின்தொடர்வதாகும். நீங்கள் ஒன்றைத் துரத்த விரும்புவீர்கள் என்றால், அல்லது ஒன்றைப் பின்தொடர விரும்புவீர்கள் என்றால், அல்லது ஒன்றை ஓடிப்பிடிக்க விரும்புவீர்கள் என்றால், அது ‘அன்பாக’ இருக்கட்டும். ஆனால், ஆவிக்குரிய வரங்களையும் நாடுங்கள் என்று சொல்கிறார்.ச்சபையில் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகளும் முக்கியம் என்பதால், ஆவிக்குரிய வரங்களைத் தேட வேண்டாம் என்று அப். பவுல் சொல்லவில்லை; மாறாக, முதலாவது அன்பை நாடுங்கள் என்று சொல்கிறார். 14:1-இன் இறுதிப் பகுதியைக் கவனியுங்கள்: “விசேஷமாகத் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்”. இதன் அர்த்தம், அந்நியபாஷையின் முக்கியத்துவம் இரண்டாம் பட்சம் என்பதே! நீங்கள் சபையாகக் கூடிவரும்போது, கூச்சல் குழப்பமான அந்நியபாஷை என்னும் உளறலுக்குப் பதிலாகத் தீர்க்கத
தீர்க்கதரிசனம் என்பதன் விளக்கம்
இப்போது உங்களுக்கு, "தீர்க்கதரிசனம் என்றால் என்ன?" என்று ஒரு கேள்வி எழலாம். தீர்க்கதரிசனத்திற்கு ஆங்கிலத்தில் ‘prophecy’ என்று பெயர். ‘prophecy’ என்ற வார்த்தை ‘prophēteuō’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. இதை இரண்டாகப் பிரித்தால்: pro என்றால் ‘முன்னால்’ என்று பொருள்; phēteuō என்றால் ‘பேசுதல்’ என்று பொருள். அதன் அர்த்தம் ‘முன்னால் நின்று பேசுதல்’ என்பதாகும். உதாரணமாக, ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மக்கள் கூட்டத்தின் முன்னால் நின்று பேசுவதைக் குறிக்க ‘prophecy’ (தீர்க்கதரிசனம்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம். மேலும், ஒரு திருச்சபையின் போதகர் சபை விசுவாசிகளின் முன்னால் நின்று பேசுவதைக் குறிக்கவும் ‘தீர்க்கதரிசனம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உங்கள் சபைப் போதகர் உங்களுக்கு முன்னால் நின்று பேசுகிறாரே, அதையும் ‘தீர்க்கதரிசனம்’ என்று சொல்லலாம்.
தீர்க்கதரிசனம் என்றால் ‘எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னறிவித்தல்’ என்று ஒருவேளை நீங்கள் சொல்லலாம். இந்த அர்த்தத்தில் வேதப்புத்தகத்தில் தீர்க்கதரிசனம் என்ற வார்த்தை எங்குமே பயன்படுத்தப்படவில்லை! ஒருவேளை ஆங்கில வார்த்தையான ‘prophecy’-க்கு, ‘predict the future’ என்றுதானே பொருள் என்று நீங்கள் கேட்கலாம். prophecy என்ற ஆங்கில வார்த்தை ‘predict the future’ என்ற பொருளை மத்திய காலகட்டத்தில்தான் (கி.பி 500 – கி.பி 1500) எடுத்துக்கொண்டது. வேதப்புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் அப்படியொரு அர்த்தம் அந்த வார்த்தைக்கு இருந்ததில்லை!
ஆகவே, வேதப்புத்தகத்தில் தீர்க்கதரிசனம் என்பது ஒருநாளும் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னறிவிப்பதைக் குறிக்கவில்லை; மாறாக, தேவனுடைய வார்த்தையை ஒரு கூட்ட மக்களுக்கு முன்னால் நின்று பேசுவதை அது குறிக்கிறது! மிக முக்கியமாக நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், சமக்காலத்துக் கள்ளத் தீர்க்கதரிசிகள் புத்தாண்டு பிறந்தால், ஆண்டுக்கு ஒன்றாக, மாதத்துக்கு ஒன்றாகத் தீர்க்கதரிசனம் என்ற பெயரில் கட்டுக்கதைகளையும் பொய்களையும் சொல்கிறார்களே, அதற்கும் 1 கொரிந்தியர் 14-ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'தீர்க்கதரிசனம்' என்கிற வார்த்தைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!
சரி, இந்தப் பின்னணியத்தில் மீண்டும் முதல் வசனத்தைக் கவனியுங்கள். அந்நியபாஷை என்ற பெயரில் யாருக்கும் புரியாதபடி ‘லபா லபா ஷங்கர பலா’ என்று கத்திக் கூச்சல் குழப்பத்தை உண்டாக்குவதற்குப் பதிலாக, ஆவிக்குரிய வளர்ச்சிக்குப் பிரயோஜனமுள்ள ஆண்டவருடைய வார்த்தையை நீங்கள் பேசுங்கள் என்பதே இதன் கருத்தாகும். மற்றுமொரு குறிப்பையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆதித் திருச்சபையில் 'தீர்க்கதரிசனம்' என்ற வார்த்தை சில சமயங்களில் ‘புதிய வெளிப்பாடுகளையும்’ குறிக்கும். இந்த வேதப்பகுதியில் தீர்க்கதரிசனம் என்ற வார்த்தை பொதுவாக ‘தேவனுடைய வார்த்தையைக் குறிக்கிறது’. அது ‘புதிய வெளிப்பாடாகவும்’ இருக்கலாம் அல்லது ‘ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாகவும்’ (பழைய ஏற்பாடு) இருக்கலாம்.
இப்போது அப்போஸ்தலர் பவுல் சொல்கிறார், “விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்”. இந்த வசனத்தில் ‘விசேஷமாய்’ என்ற தமிழ் வார்த்தைக்கு இணையாக, ஆங்கிலத்தில் ‘Rather’, ‘most of all’ ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன் அர்த்தம், அந்நியபாஷையைவிட, யாவரும் புரிந்துகொள்ளக்கூடிய, எல்லோருக்கும் பிரயோஜனம் தரக்கூடிய ஒன்றையே (தீர்க்கதரிசனத்தை) நீங்கள் விரும்ப வேண்டும் என்பதாகும். அந்நியபாஷை வரம் தீர்க்கதரிசனத்தைவிடத் தாழ்வாகக் குறிப்பிடப்படுவதற்குக் காரணம், ஒருவரும் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்பதேயாகும். அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, ஒரு குறிப்பிட்ட பாஷையைப் புரிந்துகொள்ளும் நபர் இருந்தால் மட்டுமே அந்நியபாஷை வரம் பயன்படுத்தப்பட்டது; அல்லது அப்போஸ்தலர் நடபடிகளின் மற்ற இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல, பெந்தேகோஸ்தே நிகழ்வுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தவே பயன்படுத்தப்பட்டது. அது அடையாளமாகத் தரப்பட்ட ஒரு வரம்; ஆவிக்குரிய வளர்ச்சிக்கென்று அது ஏற்படுத்தப்படவில்லை, மேலும் ஆவிக்குரிய வளர்ச்சிக்குப் பயனற்றது.
அதை ஒருவரும் புரிந்துகொள்ளவில்லை என்றால், அது எப்படி ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவி செய்யும்? ஒருவேளை யாராவது புரிந்துகொண்டால் அல்லது யாராவது வியாக்கியானம் செய்தால் அது பிரயோஜனப்படும். ஆனால், அந்நியபாஷையின் நோக்கம் ஆவிக்குரிய வளர்ச்சிக்காக அல்ல. மாறாக, தேவன்தான் பேசுகிறார் என்பதை அதைக் கேட்கிற மக்களுக்கு உறுதிப்படுத்தவும், புதிய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் உண்மையாகவே தேவனுடைய வார்த்தையைப் பேசுகிறார்கள் என்பதைக் காட்டவும் ஒரு அடையாளமாகவே அது ஏற்படுத்தப்பட்டது.
தேவனிடத்தில் இரகசியம் பேசுதல்
இரண்டாவது காரணம்: இப்போது 2-ஆம் வசனத்திற்கு நாம் வருகிறோம். அந்நியபாஷை ஏன் இரண்டாம் பட்சம் என்பதற்கு இங்கு மற்றுமொரு காரணம் நமக்குக் கொடுக்கப்படுகிறது. “அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.” இங்கே மொழியாக்கத்தில் ஒரு சிறிய பிழை இருக்கிறது; ‘தேவனிடத்தில் பேசுகிறான்’ என்பது, ‘ஒரு தேவனிடத்தில் பேசுகிறான்’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். கிரேக்கத்தில் ‘but to a god’ என்றே இருக்கிறது. இங்கே அப்போஸ்தலர் பவுல் என்ன சொல்லுகிறார் என்றால், “மற்றவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவி செய்யவே தேவன் ஆவிக்குரிய வரங்களை உங்களுக்குக் கொடுத்தார். ஆனால் நீங்களோ அதைச் செய்யாமல், உங்கள் புறஜாதிய மத வழக்கப்படி உங்கள் தேவனிடத்தில் முட்டாள்தனமான உளறல்கள் மூலம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பேசுவதை ஒருவரும் புரிந்துகொள்வதில்லை; மாய சமயங்களின் இரகசியங்களை நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்” என்பதாகும். இங்கே அப்போஸ்தலர் பவுல் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்கிறீர்களா? இங்கே யாரும் உண்மையான தேவனிடத்தில் இரகசியம் பேசவில்லை, மாறாகப் புறஜாதியினரின் வழக்கப்படி தங்கள் தேவர்களிடத்தில் அவர்கள் இரகசியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
பிரியமானவர்களே, இந்த இடத்தில் நீங்கள் இன்னும் ஒரு முக்கியமான குறிப்பை அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எல்லா ஆவிக்குரிய வரங்களும் மற்றவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்காக அல்லது மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதற்காகக் கொடுக்கப்பட்டவை. நீங்கள் எந்த ஒரு ஆவிக்குரிய வரத்தை வேண்டுமானாலும் எடுத்துச் சிந்தித்துப் பாருங்கள். அது தேவனுக்கல்ல, மனிதனுக்கு ஊழியம் செய்யும்படிக்கே கொடுக்கப்பட்டிருக்கும். (1 கொரிந்தியர் 12:7)-ல், “ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” என்று வாசிக்கிறோம். தமிழ் வேதாகமத்தில் மிகத் தவறாகத் தமிழாக்கம் செய்யப்பட்ட வசனங்களில் இதுவும் ஒன்று. இது, “ஆவியினுடைய அநுக்கிரகம் மற்றவர்களுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” என்றே தமிழாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில், “But the manifestation of the Spirit is given to each one for the profit of all” (NKJV) என்றே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வரங்களெல்லாம் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டவையாகும். அவையெல்லாம் மற்றவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கென்று கொடுக்கப்பட்டவை. தேவன் தனக்கு உதவி செய்யும்படிக்கு எந்த ஒரு வரத்தையும் மனிதனுக்குக் கொடுக்கவில்லை; ஏனென்றால் அவர் பரிபூரணமானவர், மனிதனுடைய எந்த ஒரு உதவியும் அவருக்குத் தேவையில்லை. இங்கே அப்போஸ்தலர் பவுல் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், “நீங்கள் எல்லாரும் வரங்களைப் பயன்படுத்துவதில் ஒரு முக்கியமான இடத்தில் தவறு செய்கிறீர்கள். வரங்களெல்லாம் மனிதருக்கு ஊழியம் செய்வதற்காகக் கொடுக்கப்பட்டிருக்க, நீங்களோ அதைச் செய்யாமல், அந்நியபாஷை என்ற பெயரில் ஒரு தேவனுக்கு ஊழியம் செய்துகொண்டிருக்கிறீர்கள்”. வேறொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் சரீரத்தை விட்டு வெளியே சென்று, ஆவியில் ஏதோ ஒரு தேவனுடன் கலந்து, புறஜாதியாரின் மாய சமயத்தின் இரகசியங்களைப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இது வரங்கள் கொடுக்கப்பட்டதற்கான முக்கியமான நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது! தேவன் உங்கள் உளறல்கள் மூலமாகத் தன்னிடத்தில் நீங்கள் பேசுவதை விரும்புவதில்லை.
இன்றைய பெந்தேகோஸ்தே திருச்சபைகள் இந்த விஷயத்தில் மிக மோசமாகத் தவறிழைக்கின்றன. ‘அந்நியபாஷை’ என்னும் உளறலை, தேவனுடன் நெருங்கி ஜெபிப்பதற்கான ஒரு தனிப்பட்ட இரகசிய மொழி என்று கூறி உற்சாகப்படுத்துகிறார்கள்; கொரிந்து திருச்சபை செய்த அதே தவறை இவர்களும் செய்கிறார்கள். தன் பிள்ளைகள் இவ்வாறாகத் தன்னிடம் பேசுவதை தேவன் ஒருக்காலும் விரும்புவதில்லை. ஜெபத்தின் மூலம் தன்னிடம் பேசும் ஒரு மனிதன், தனக்கே புரியாத வார்த்தைகளால் பேச வேண்டும் என்று தேவன் விரும்புவதில்லை.
புதிய ஏற்பாட்டின் எல்லா நிருபங்களிலும் ஏறெடுக்கப்பட்ட ஜெபங்களைக் கவனித்துப் பாருங்கள். பிறகு, முழு வேதாகமத்திலும் உள்ள ஒவ்வொரு ஜெபத்தையும் கவனித்துப் பாருங்கள். அதன்பின், இயேசு ஏறெடுத்த ஒவ்வொரு ஜெபத்தையும் கவனியுங்கள். மேலும், ஜெபத்தைக் குறித்து இயேசு கூறிய ஒவ்வொரு குறிப்பையும் கவனித்துப் பாருங்கள். ஏதேனும் ஒரு இடத்திலாவது தனக்குப் புரியாத மொழியில் ஜெபித்த யாரையாவது நீங்கள் காண்கிறீர்களா? வேதத்தில் எங்கும் அப்படிப்பட்டதைக் காண முடியாது!
அதுமட்டுமல்லாமல், அதற்கு நேர் எதிரானதையே இயேசு கிறிஸ்துவும் சொன்னார். மத்தேயு 6:7-இல், “அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்”. கவனியுங்கள், ‘அஞ்ஞானிகளைப்போல (புறஜாதிகளைப் போல)’ என்று இயேசு கிறிஸ்து குறிப்பிடுகிறார். இங்கே "வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்" என்பதற்கு இணையாக “use not meaningless repetitions” என்ற ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிரேக்கத்தில் ‘battalogeō’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘Logeō’ என்றால் ‘பேசுதல்’ என்று பொருள்; இதிலிருந்துதான் ‘வார்த்தை’ என்ற சொல் வருகிறது. இதற்கு முன்னால் உள்ள ‘batta’ என்ற சொல்லுக்கு எந்த அர்த்தமும் இல்லை; அது ஒரு வார்த்தையே அல்ல.
உதாரணமாக, வானத்தில் விமானம் செல்லும்போது அது ‘உஷ்’ என்று செல்கிறது என்று சொல்லுகிறோம் அல்லவா? அல்லது ஒரு வாகனம் செல்லும்போது அது ‘சர்’ என்று சென்றது என்று சொல்கிறோம் அல்லவா? இங்கே ‘உஷ்’ மற்றும் ‘சர்’ என்பவைகள் வார்த்தைகள் அல்ல; அந்த குறிப்பிட்ட செயலை அதன் ஒலியின் மூலம் உணர்த்தப் பயன்படும் குறிப்புகளாகும். ‘batta’ என்ற சொல்லும் இதே போன்ற அர்த்தத்தை உடையதுதான்.
நீங்கள் ஜெபம்பண்ணும்போது ‘Battah, battah, battah,’ என்றோ அல்லது ‘உஷ்’, ‘சர்’, ‘ஸ்ஸ்ஸ்… ஸ்ஸ்ஸ்’ அல்லது ‘பலா, பலா, பலா…’ என்றெல்லாம் அர்த்தமற்ற வீண் வார்த்தைகளைச் சொல்லாதீர்கள் என்று மத்தேயு 6:7-இல் இயேசு சொல்கிறார். புற மதத்தினர் செய்யும் இப்படிப்பட்ட ஜெபத்தை தேவன் விரும்புவதில்லை என்றும் அவர் சொல்கிறார். இயேசுவும் தான் வாழ்ந்த காலத்தில் பிற மதத்தினர் (அஞ்ஞானிகள்) தங்கள் தேவர்களிடத்தில் இதுபோன்ற அர்த்தமற்ற உளறல்கள் மூலம் ஜெபிப்பதை அறிந்திருந்தார்; அதனால்தான், தம்மைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களிடம் இதுபோன்ற ஜெபங்களை நீங்கள் செய்யாதீர்கள் என்று சொன்னார்.
இயேசு கெத்செமெனேயில் தன்னுடைய பிதாவிடம் ஜெபித்தபோது, அவர் பரலோக பாஷையில் ஜெபிக்கவில்லை. ஒரு தேவன் (இயேசு) இன்னொரு தேவனுடன் (பிதா) பேசியபோது அது மற்றவர்களுக்குப் புரியக்கூடிய மொழியிலேயே இருந்தது. நீங்கள் ஜெபிக்கும்போது மட்டும் அது ஏன் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் புரியாத அந்நியபாஷையில் இருக்க வேண்டும்? லாசருவின் கல்லறை அருகே நின்று அவனை உயிரோடு எழுப்ப இயேசு பிதாவினிடத்தில் ஜெபித்தபோது, அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது. அந்த ஜெபத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் யோவான் தன்னுடைய நற்செய்தி நூலில் 17-ஆம் அதிகாரத்தில் பதிவு செய்துள்ளார். இயேசு தன்னுடைய பிதாவிடம் செய்த தனிப்பட்ட ஜெபத்தின் ஒவ்வொரு வார்த்தையும் மிகத் தெளிவாக மற்றவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் இருந்தது; அந்த ஜெபம் உலகில் வேத புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ள எல்லா மொழிகளிலும் மிகச் சிறப்பாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது!
உலக ரீதியான சிந்தைகொண்ட கொரிந்தியர்கள், இன்றைய பெந்தேகோஸ்தே விசுவாசிகளைப் போல, வெளிப்புறமாக மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும், சொந்த மதிப்பைக் கூட்டும் உணர்வுப்பூர்வமான அந்நியபாஷை வரத்தைப் பயன்படுத்தித் தங்கள் ஆவிக்குரிய வளர்ச்சியின் அடையாளமாகக் காட்ட விரும்பினார்கள். "பாருங்கள், இப்பொழுது நான் ஆவியில் நிறைந்திருக்கிறேன்! எனக்கும் தேவனுக்குமான தனிப்பட்ட மொழியில் இப்பொழுது தேவனுடன் பேசுகிறேன்" என்று சொன்னார்கள்.
பிரியமானவர்களே, இப்போது கொரிந்து திருச்சபையில் உள்ள எல்லோரும் அந்நியபாஷை பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இப்பொழுது எல்லாரும் எல்லா மாய இரகசியங்களையும் அறிந்திருக்கிறார்கள், தனிப்பட்ட இரகசியம் என்று அங்கே ஒன்றும் இல்லை. ‘அதனால்’ நீங்கள் ஒன்றை மறந்துவிட்டீர்கள்; நீங்கள் பேசும் அந்நியபாஷையை ஒருவரும் புரிந்துகொள்ள முடியாததால் நீங்கள் மனிதருக்கு ஊழியம் செய்யவில்லை. ஆனால் (வசனம் 3), “தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ (தேவனுடைய வார்த்தையை பேசுகிறவனோ) மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்”.
நீங்கள் மனிதனிடத்தில் தேவனுடைய வார்த்தையைப் பேசும்போது மூன்று காரியங்கள் நடக்கும்:
இப்படி நீங்கள் பயனுள்ள தேவனுடைய வார்த்தையைப் பேசும்போது, முதலாவது அவர்களுடைய வாழ்க்கை கட்டப்படும்; இரண்டாவதாக, புதியதொரு வாழ்க்கை வாழ உற்சாகப்படுத்தப்படுவார்கள்; மூன்றாவதாக, தங்களுடைய காயங்கள் ஆற்றப்பட்டுத் தேற்றப்படுவார்கள். இதைத்தான் நீங்கள் சபையாகக் கூடிவரும்போது செய்ய வேண்டும். ‘பரா.. பரா.. பரா.. கரா.. கரா.. கரா… லபா… லபா… லபா…’ என்ற அர்த்தமற்ற வார்த்தைகள் அல்ல, தேவனுடைய வார்த்தையே அங்குப் பிரதானமாகப் போதிக்கப்பட வேண்டும்!
வசனம் 4: “அந்நியப்பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்”. எது சிறந்தது? அப். பவுல் இங்கே என்ன சொல்ல வருகிறார்? சபை கூடிவருதலின் நோக்கம் என்ன? “சபையின் ஆவிக்குரிய வளர்ச்சி”; மீண்டும்
“அந்நியப்பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்” என்று அப். பவுலிய வளர்ச்சிக்குுடைய வழி என்று ஒன்று இருக்குமென
ஆனால் அது சாத்தியமல்ல என்பதை அப். பவுல் அறிந்திருந்தார். முதன்மையானது அந்நியபாஷை அல்ல, அதைவிட முக்கியமான வரம் ஒன்று இருக்கிறது என்பதை அழுத்திச் சொல்லவே பவுல் அங்கே உயர்வு நவிற்சி அணியைப் பயன்படுத்துகிறார். இதைவிட நீங்கள் தீர்க்கதரிசனம் சொன்னால் நலமாயிருக்கும் என்று சொல்லுகிறார். ஏனென்றால், அந்நியபாஷை வியாக்கியானம் செய்யப்படாவிட்டால் திருச்சபைக்குப் பயனற்றது. மேலும், 1 கொரிந்தியர் 13:8-இல் “அந்நியபாஷைகளானாலும் ஓய்ந்துபோகும்” என்று நாம் பார்க்கிறபடி, ஆதித் திருச்சபைக்கு அடையாளமாகக் கொடுக்கப்பட்ட அந்த வரம், அதன் நோக்கம் நிறைவேற்றப்பட்டுவிட்டதால், இன்றைய திருச்சபைக்குத் தேவையற்றது. ஒருவேளை மிகவும் அரிதாகச் சில இடங்களில் தேவன் இந்த வரத்தை இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பயன்படுத்தக்கூடும்; ஆனால் திருச்சபையின் பொதுவான வழக்கத்திலிருந்து இந்த வரம் மறைந்துவிட்டது என்று சொல்லலாம்.
சுருக்கமாக, இரண்டு காரியங்கள்:
நாம் மேலும் தொடர்வதற்கு முன்னர், மற்றுமொரு அடிக்குறிப்பை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். 1 கொரிந்தியர் 14:2 மற்றும் 4-ஆம் வசனங்களில், தமிழ் வேதாகமத்தில் ‘அந்நியபாஷை’ என்ற வார்த்தையானது, ஜேம்ஸ் அரசர் மொழிபெயர்ப்பில் (King James Version – KJV) ‘Unknown tongue’ என்று ஒருமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 5-ஆம் வசனத்தை கவனித்தீர்களா? அங்கே ‘அந்நியபாஷைகள்’ என்று பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், KJV மொழிபெயர்ப்பில் 5-ஆம் வசனத்தில் ‘Unknown’ என்ற வார்த்தை இல்லாமல், ‘tongues’ என்று பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும்போது, மிகக் கவனமாக ‘அந்நியபாஷை’ என்ற வார்த்தையை ஒருமையில் குறிப்பிட்டு, அதற்கு முன்னர் ‘Unknown’ என்ற வார்த்தையை அவர்கள் சேர்த்துள்ளனர்.
பல முன்னணி வேதாகம ஆராய்ச்சியாளர்கள் நம்புவது என்னவென்றால்: அப்போஸ்தலனாகிய பவுல் ஒருமையில் ‘அந்நியபாஷை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது, அவர் கொரிந்தியர்களின் அர்த்தமற்ற உளறல்களைக் குறிக்கிறார். ஏனென்றால், அவர்கள் எத்தனை விதங்களில் உளறினாலும் அவையெல்லாம் ஒரே பாஷைதான்; பொதுவாகச் சொன்னால் அவையெல்லாம் வெறும் ‘உளறல்கள்’, அவ்வளவுதான். ஆனால், அவர் உண்மையான அந்நியபாஷைகளைக் குறிப்பிடும்போது, அப்போஸ்தலர் நடபடிகளில் நாம் காண்பது போல அவை உலகத்தில் உள்ள பாஷைகளைக் குறிக்கின்றன; அதைக் கேட்ட மனிதர்களால் அந்தப் பாஷைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. KJV வேதாகமத்தில் உள்ள இந்த ஒருமை, பன்மை வித்தியாசத்தை நீங்கள் தமிழ் வேதாகமத்திலும் காண முடியும். ஆகவே, 1 முதல் 4 வசனங்களில் அவர் சொல்வது என்னவென்றால், அவர்கள் பேசும் இந்த உளறலான அந்நியபாஷை வரம் தவறானது என்பதாகும். ஆனால், 5-ஆம் வசனத்தில் உண்மையான அந்நியபாஷை வரம், முறையாக வியாக்கியானம் செய்யப்படும்போது, அது சரியானது என்று குறிப்பிடுகிறார்.
தற்போது, பெரும்பாலான பரவசப் போதனையாளர்களும் பெந்தேகோஸ்தே விசுவாசிகளும், அந்நியபாஷை காரியத்தில் அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்திற்கும் 1 கொரிந்தியர் 14-ஆம் அதிகாரத்திற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால், அந்த வித்தியாசத்திற்கு அவர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்: அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில் பேசப்பட்ட அந்நியபாஷையானது உலகப் பாஷைகள் என்றும், 1 கொரிந்தியர் 14-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருப்பது ஒரு விசுவாசியின் தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சிக்காக, தேவனுடன் தனிப்பட்ட விதத்தில் பேசப்படும் பரவச அந்நியபாஷை என்றும் கூறுகிறார்கள். இரண்டு வேதப் பகுதிகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை, அவை இரண்டு விதமான அந்நியபாஷைகள் என்று சொல்லித் தீர்வளிக்கிறார்கள்.
நானும் இந்த இரண்டு வேதப் பகுதிகளுக்கும் இடையில், அந்நியபாஷை விஷயத்தில் வித்தியாசத்தைக் காண்கிறேன். அந்த வித்தியாசத்திற்கு நான் எப்படித் தீர்வளிக்கிறேன் என்றால்: அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில் உண்மையான அந்நியபாஷையின் வரம் பயன்படுத்தப்பட்டது; ஆனால், 1 கொரிந்தியர் 14-ஆம் அதிகாரத்தில் அந்த வரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. அதனால், 14-ஆம் அதிகாரத்தில் இருப்பது வேறொரு அந்நியபாஷை வரம் அல்ல; மாறாக, சரியான அந்நியபாஷை வரம் புறஜாதியினரின் போலியான பரவசப் பாஷையுடன் கலந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டது. வேத வாக்கியங்களில் எங்கும் இரண்டு வகையான அந்நியபாஷைகள்—அதாவது (1) உலகப் பாஷைகள் மற்றும் (2) பரவசப் பேச்சுகள்—இருப்பதாகப் போதிக்கவில்லை. இதை ஏன் நாம் உறுதியாகக் கூறுகிறோம் என்றால், அந்த வரத்தைக் குறிக்க அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே கிரேக்க வார்த்தையே 1 கொரிந்தியர் 14-ஆம் அதிகாரத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பகுதிகளிலும் காணப்படும் அந்நியபாஷைகள் வெவ்வேறானவை என்றால், அதைக் குறிக்க இரண்டு விதமான கிரேக்க வார்த்தைகளைத் தேவன் பயன்படுத்தியிருப்பார். ஆனால், அங்கு அப்படி இல்லை. பாஷை என்பதைக் குறிக்கும் சாதாரண கிரேக்க வார்த்தையே இரண்டு இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, சுயநலமாகப் பயன்படுத்தப்படும் பரவச உளறல் பேச்சை, ஏதோ ஒரு புதிய சிறப்பு வரம் என்று நியாயப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை.
நான் இப்படியாகச் சொல்ல விரும்புகிறேன்: உலகப்பிரகாரமான, பிரிந்து கிடக்கும், தனித்தனி யோசனை கொண்ட, மாம்சீக, பொறாமை மிகுந்த, சுயத்தில் திருப்தியடையும், சண்டை போடும், வாக்குவாதம் செய்யும், பெருமை கொண்ட, தற்பெருமை பிடித்த, நன்னெறி கெட்ட, பாவத்துடன் ஒத்து வாழும், ஒருவரை ஒருவர் ஏமாற்றும், விபச்சாரம் செய்யும், திருமணத்தை அசுசி செய்யும், தீமையை இச்சிக்கும், சிலை வழிபாடு கொண்ட, பிசாசுகளுடன் ஐக்கியம் கொள்ளும், கீழ்ப்படியாத, போஜனப் பிரியராய் இருக்கும், குடித்து வெறிக்கும், ஏழைகளை அவமானப்படுத்தும், கர்த்தருடைய பந்தியை அசட்டை பண்ணும் மாய்மாலமான ஒரு கூட்ட கிறிஸ்தவர்களிடத்தில் உண்மையான பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் செயல்படும் என்றா நினைக்கிறீர்கள்? இதற்கான பதில் மிகத் தெளிவானது! இதுபோன்ற கிறிஸ்தவர்களிடம் உண்மையான ஆவிக்குரிய வரங்கள் செயல்படும் என்று யாராவது சொன்னால், அது ஆவிக்குரிய வாழ்க்கையின் அடிப்படை விதிகளையே மீறுவதாக அமையும். ஒரு விசுவாசி ஒன்று மாம்சத்தில் நடப்பார் அல்லது ஆவியில் நடப்பார். கொரிந்தியக் கிறிஸ்தவர்கள் எப்படி நடந்தார்கள் என்று விவாதம் எல்லாம் செய்ய வேண்டியதில்லை; உறுதியாக அவர்கள் மாம்சத்தில்தான் நடந்தார்கள். இப்படிச் சொல்வதில் உங்களுக்குப் பிரச்சனை இருக்குமென்றால், இந்த நிருபத்தில் எந்த ஒரு அதிகாரத்தை வேண்டுமானாலும் வாசித்துப் பாருங்கள். நீங்கள் மாம்சத்தில் நடக்கும்போது, எந்த ஒரு உண்மையான ஆவிக்குரிய வரத்தையும் பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் சரியாகச் செயல்படுத்த முடியாது. அப்படி நடந்தால் அது விசித்திரமானது; அப்படி நடக்கவே முடியாது.
இப்போது நீங்கள் 14-ஆம் அதிகாரத்திற்கு வருகிறீர்கள். இங்கே நீங்கள் காண்பது உண்மையான ஆவிக்குரிய வரம் என்று முடிவு செய்துவிடக் கூடாது; அப்படிச் செய்தால், ஆவிக்குரிய வரங்கள் செயல்படும் அடிப்படை விதிகளையே நீங்கள் மீறுவீர்கள். எல்லாமே தவறாக இருந்த கொரிந்தியத் திருச்சபையில், அந்நியபாஷையும் தவறாகவே பயன்படுத்தப்பட்டது. எப்படி முதல் 13 அதிகாரங்களில் அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி அதைச் சரிசெய்யச் சொன்னாரோ, அதைத்தான் 14-ஆம் அதிகாரத்திலும் அவர் செய்துகொண்டிருக்கிறார். அங்கே மிக மோசமான கூச்சலும் குழப்பமும் நிலவியதால், அதைச் சரிசெய்ய வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் நினைக்கிறார். சுயநலமான, போலியான புறஜாதி மக்களின் பரவசப் பேச்சுக்கள், ஏதோ பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் பேசப்படும் உண்மையான அந்நியபாஷை வரம்போல் அங்கு நியாயப்படுத்தப்பட்டது.
உண்மையான அந்நியபாஷை வரத்தைக் கொண்டவர்களும் அதைத் தவறாகப் பயன்படுத்தினார்கள்; தங்களுடைய சொந்த வழியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தக் குறிப்பிட்ட மொழியைப் பேசுபவர்கள் சபையில் இல்லாதபோதும் அந்த வரத்தைப் பயன்படுத்தினார்கள்; மிகவும் ஆவியில் நிறைந்தவர்கள் போலத் தங்களை உயர்த்திக் காட்டிக்கொள்ள அந்த வரத்தைப் பயன்படுத்தினார்கள். கொரிந்து திருச்சபையில் இருந்த விசுவாசிகளுக்கிடையில் ஏதாவது ஒன்று பொதுவாக இருக்குமென்றால், அது உலக வழக்கங்கள் அனைத்திலும் அவர்கள் மூழ்கிப் போயிருந்தார்கள் என்பதுதான்; அதில் எந்த வித்தியாசமும் இல்லை. ஒட்டுமொத்த உலக வழக்கமும் திருச்சபைக்குள் வந்துவிட்ட பிறகு, புறஜாதி சமய வழக்கங்கள் மட்டும் ஏன் திருச்சபையை விட்டு வெளியே இருக்க வேண்டும்?
அப்போஸ்தலர்களின் காலகட்டத்தில் உண்மையான அந்நியபாஷை வரம் என்ற ஒன்று இருந்தது. ஆம், அந்நியபாஷை வரம் உண்மையானதே. 1 கொரிந்தியர் 13:8-12 வசனங்களில் நாம் பார்க்கிறபடி, அந்த வரம் திருச்சபையை விட்டு மறைந்துபோயிற்று. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த வரம் நம் திருச்சபையில் செயல்பாட்டில் இல்லாததால், இதைக் குறித்த எல்லா விவரங்களையும் மீண்டும் சரியாக அறிந்துகொள்வது மிகவும் கடினமானது. அந்நியபாஷை வரத்தைக் குறித்து மிக ஆழமாக ஆராய்ச்சி செய்த ‘ஜான் மெக் ஆர்தர்’ (John MacArthur) அவர்கள் கூறுகிறார்: > "இதைக் குறித்து கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்திருக்கிறேன்; ஆனால், அவற்றில் இரண்டு புத்தகங்கள் கூட எல்லா விஷயங்களிலும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகவில்லை."
இந்த அதிகாரத்தில் மிகச் சில இடங்களில் நாம் நம் யூகத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எல்லா இடங்களிலும் நாம் அப்படிச் செய்ய வேண்டியதில்லை; ஆனால், வெகு சில பகுதிகளில் நமக்குப் போதுமான விவரங்கள் கிடைக்கவில்லை. ஒன்று நமக்கு நன்றாகத் தெரியும்: கொரிந்தியர்கள் மாம்சத்திற்குரியவர்களாக இருந்தார்கள். நாம் அறிந்திருக்கிற மற்றொரு காரியம், அவர்கள் தங்கள் கலாச்சாரத்தில் காணப்பட்ட பரவசப் பேச்சுகளைச் சபைக்குள் நுழைய அனுமதித்திருந்தார்கள். நாம் உறுதியாக அறிந்த மற்றுமொரு காரியம்: அந்நியபாஷை வரம் என்பது, அப்போஸ்தலர் 2ஆம் அதிகாரத்தில் நாம் காண்பது போல ஒரு நபர் தான் முன் அறிந்திராத மொழியைப் பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் பேசுவதாகும். அது பேசுபவருக்குப் புரியாத மொழி, ஆனால் அதைக் கேட்பவருக்குப் புரியும். ஆனால், கொரிந்தியர்கள் இந்த வரத்தை இப்படிப் பயன்படுத்தவில்லை. மேற்சொன்ன விவரங்கள் யாவும் நாம் உறுதியாக அறிந்த உண்மைகளாகும்.
இப்போது நாம் திருச்சபையில் அந்நியபாஷை வரத்தின் முக்கியத்துவத்தைக் குறித்துப் பார்த்து வருகிறோம். மேலும், தீர்க்கதரிசன வரத்துடன் ஒப்பிடுகையில் அந்நியபாஷை வரம் இரண்டாம்பட்சமே என்பதையும் பார்த்தோம். இப்போது இன்னும் ஒரு சிறிய குறிப்பை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். 11 முதல் 14 வரையிலான அதிகாரங்கள் முழுமையும், கொரிந்து மக்கள் ஒரு சபையாகக் கூடி வரும்போது செய்ய வேண்டியவைகளைப் பற்றிக் கூறுகின்றன. இந்த அதிகாரங்களில் எந்த ஒரு பகுதியும் தேவனுடனான ஒரு தனிப்பட்ட உறவு குறித்தோ அல்லது தனிப்பட்ட நேரம் செலவிடுவது குறித்தோ பேசவில்லை; இவையெல்லாம் ஒரு சபையாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் குறித்தே பேசுகின்றன.
இவை அனைத்தும் ஒரு திருச்சபையாக அவர்கள் செய்ய வேண்டியவைகளைக் குறித்துப் பேசுகின்றன. ஆனால், பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் இந்தப் பகுதிக்கு விளக்கம் கொடுக்கும்போது, "இதில் உள்ள அந்நியபாஷையானது தேவனுடன் தனிப்பட்ட விதத்தில் பேசுவதற்கும், ஜெபம் செய்யும்போது பயன்படுத்தப்படும் பாஷை" என்றும் விளக்கம் கொடுக்கிறார்கள். இது முற்றிலும் இந்த வேதப்பகுதியின் பின்னணிக்குப் பொருந்தாத விளக்கமாகும்.
அந்நியபாஷை வரம் இரண்டாம்பட்சம் என்பதற்கு மற்றுமொரு காரணம், அது எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாதது. 6ஆம் வசனத்தில்: > “மேலும், சகோதரரே”
இப்போது ‘அந்நியபாஷை’ என்ற சொல் ஒருமையா, பன்மையா என்பதை வைத்துப் பார்க்கும்போது, இங்கே அவர் சந்தேகத்திற்கிடமின்றி உண்மையான அந்நியபாஷை வரத்தைக் குறித்தே பேசுகிறார். "மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து... அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன?" வேறுவகையில் சொல்ல வேண்டுமென்றால், ‘அப்போஸ்தலனாகிய பவுலாகிய நானும், என்னுடைய எல்லா தெய்வ பக்தியுடனும், அறிவுடனும், உங்களிடத்தில் வந்து உண்மையான அந்நியபாஷைகளில் பேசினால், அதனால் உங்களுக்கு என்ன பயன்? நீங்கள் கிரேக்கத்தில் பேசுகிறீர்கள், நான் உங்கள் மொழியில் பேசாவிட்டால் என்னாலே உங்களுக்கு என்ன பிரயோஜனம்?’
மேலும் அவர் சொல்கிறார்: "நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லவில்லையென்றால், அதனால் உங்களுக்கு எந்த அர்த்தமும், எந்தப் பயனும் இல்லை". அதனால்தான் அவர் சொல்கிறார், யார் பேசினாலும் அதைக் கேட்பவர்களுக்குப் புரிய வேண்டும். அவர்கள் எல்லோரும் கிரேக்க மொழியைப் பேசுகிறார்கள், அங்கே வந்து அவர்களுக்குப் புரியாத வேறு ஒரு உலக மொழியில் பேசினால், அதனால் அவர்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை.
ஏழாம் வசனத்தில் இந்தக் கருத்தை ஒரு உதாரணத்துடன் விளக்குகிறார்: > “அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்?”
புல்லாங்குழலும், சுரமண்டலமும் அக்காலகட்டத்தில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகளாகும். அவை வீட்டு விசேஷங்களிலும், மரித்தவர்களுடைய வீடுகளிலும், சமய வழிபாடுகளிலும் பயன்படுத்தப்பட்டன. ஆகவே, பவுல் இங்கே என்ன சொல்ல வருகிறார் என்று கொரிந்தியர்கள் புரிந்துகொண்டார்கள்.
ஏழாம் வசனத்தில் கவனித்தீர்களானால் “உயிரில்லாத வாத்தியங்கள்” – ஆவியற்ற, அசைவற்ற, உயிரற்ற வாத்தியங்கள் என்று அவர் சொல்கிறார். இனிமையான இசைக்காக அறியப்பட்ட இந்த வாத்தியங்கள், மகிழ்ச்சியான மற்றும் துக்க உணர்வுகளுக்கிடையில் தொனியில் வித்தியாசம் காட்டுகின்றன. இந்த வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால் அவற்றின் இசையால் எந்தப் பயனும் இல்லை.
சரி, இந்த உதாரணத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார்? அதன் அர்த்தம், ஒருவர் பேசும்போது அந்தப் பேச்சு ஒரு புரியும்படியான அர்த்தத்தைக் கொண்டிருக்கவில்லை என்றால் அது பயனற்றது; அதனால் நீங்கள் ஆவிக்குரிய வளர்ச்சி பெற முடியாது. அதை எந்த வகையில் நீங்கள் செய்தாலும் அது பயனற்றது. ஒருவேளை நீங்கள் உண்மையான அந்நியபாஷை வரத்தைப் பயன்படுத்தினாலும், அதைக் கேட்பவர் புரிந்துகொள்ளவில்லை என்றால் அது பயனற்றது. மேலும், பரவச உளறல் பேச்சுகள் எப்போதுமே பயனற்றவை.
எட்டாம் வசனத்தில், > “அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?”
இப்போது எல்லோரும் யுத்தத்திற்கு ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். எக்காளம் ஊத வேண்டிய மனிதன் தான் விரும்பிய ஏதோ அர்த்தமற்ற தொனியை ஊதுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது போர் வீரர்கள் மத்தியில் ஒரு குழப்பம் ஏற்படும்: அவர்கள் படுக்கையிலிருந்து எழ வேண்டுமா, அல்லது படுக்கைக்குச் செல்ல வேண்டுமா, அல்லது தங்கள் சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ள வேண்டுமா, அல்லது என்ன செய்ய வேண்டும்? எக்காளத் தொனி அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்றால், அது அதன் சத்தத்தில் வித்தியாசத்தைக் காட்ட வேண்டும் என்பது வெளிப்படை. எல்லா இசைக்கருவிகளிலும், ராணுவ எக்காளமானது தெளிவான மற்றும் உரத்த சத்தம் எழுப்பக்கூடியது; ஆனால், அர்த்தமுள்ள சத்தத்தை அது ஏற்படுத்தவில்லை என்றால் எந்த ராணுவ வீரனும் போருக்கு ஆயத்தமாக முடியாது.
ஒன்பதாம் வசனத்தில் மற்றொரு உதாரணத்திற்கு அவர் செல்கிறார்: > “அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே”.
இங்கே கவனிக்கிறீர்களா? பரவச உளறல் பேச்சுகளுக்கு எப்போதுமே எந்த முக்கியத்துவமும் இருந்ததில்லை, ஏனென்றால் எந்தக் காலத்திலும் அது யாருக்கும் புரிந்ததில்லை! அப்போஸ்தலர்களின் காலத்தில் அந்தக் குறிப்பிட்ட மொழியைப் பேசும் அல்லது புரிந்துகொள்ளும் யாராவது ஒருவர் அந்த இடத்தில் இருந்தபோது மட்டுமே உண்மையான அந்நியபாஷை வரம் பயன்படுத்தப்பட்டது. அது விசுவாசிகளின் சபையாக இருந்தால் மற்றவர்களும் ஆவிக்குரிய வளர்ச்சி அடையும்படி பேசப்பட்ட அந்நியபாஷையானது, அனைவருக்கும் புரியும் வகையில் மொழியாக்கம் செய்யப்பட்டது. அது எல்லோருக்கும் புரியும்படியாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் நீங்கள் ஆகாயத்தில் பேசுபவர்கள் போல் இருப்பீர்கள்.
அப்போஸ்தலனாகிய பவுல் இங்கே உண்மையில் ஏளனத்துடன் கிண்டலடிக்கும் விதமாகக் கொரிந்தியர்களுடன் பேசுகிறார்: அர்த்தமில்லாத ஒலி எழுப்பும் இசை வாத்தியங்கள் பயனற்றவை; புரிந்துகொள்ள முடியாத ஒலி எழுப்பும் ராணுவ எக்காளத்தின் மூலம் ராணுவ வீரர்கள் எந்த உத்தரவையும் பெற்றுக்கொள்ள முடியாது. மேலும் அவர் சொல்கிறார், ‘இதுதான் கொரிந்து சபையில் நடந்தேறிக்கொண்டிருக்கிறது: ஒட்டுமொத்த கூச்சல் குழப்பம் அங்கு நிலவுகிறது’.
ஆவியின் வரங்கள் எல்லாம் இரட்சிக்கப்படாதவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், தேவனுடைய சத்தியத்தை அவருடைய பிள்ளைகளுக்குப் போதிக்கவும் அல்லது இவ்விரண்டையும் செய்பவர்களுக்கு அங்கீகாரத்தை அளிக்கவும் பயன்படுத்தப்பட்டன என்பதைக் கொரிந்திய விசுவாசிகளைப் புரிந்துகொள்ள வைக்கப் பவுல் முயற்சி செய்கிறார். மேலும், இவை அனைத்தும் மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வார்த்தைகளைப் பேசினால் மட்டுமே செய்ய முடியும்.
உலகப் பாஷைகள்
இப்போது பவுல் பொறுமையுடனும், சிறந்த உதாரணங்களைக் கொண்டும், சற்றுக் குத்திக்காட்டியும் அவர்களுடைய அறியாமையையும் உணர்ச்சிப்பூர்வமான மூடநம்பிக்கையையும் உடைக்க முற்படுகிறார். ஆகவே, அவர் தன்னுடைய உதாரணத்தைத் தொடர்கிறார் (வசனம் 10): “உலகத்திலே எத்தனையோ விதமான பாஷைகள் உண்டாயிருக்கின்றன; அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாதவையல்ல”. இந்த வசனத்தில் உள்ள ‘பாஷைகள்’ என்ற வார்த்தையானது, ஆங்கில (KJV) வேதாகமத்தில் ‘Voices’ (சத்தங்கள்) என்றே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அதே கருத்தை அவர் ஆணித்தரமாகக் கூறுகிறார். இது ஒரு விவசாயி மிகக் கடினமான நிலத்தை மீண்டும் மீண்டும் உழுவதைப் போன்றதாகும். என்றோ ஒருநாள் இந்த நிலத்தை வெற்றிகரமாக உழுதுமுடிப்பான் என்ற நம்பிக்கையுடன், அவர் ஒரே காரியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
‘உலகில் மூவாயிரத்திற்கும் அதிகமான மொழிகள் இருக்கின்றன’. இந்தப் பலதரப்பட்ட மொழிகள் தங்களுக்கே உரிய ஒலிப்பு முறைகளைக் கொண்டுள்ளன. இந்த உதாரணத்தில் ‘சத்தங்கள்’ என்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையும், முந்தைய உதாரணத்தில் (வசனம் 7) இசைக்கருவிகள் ஏற்படுத்தும் சத்தங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தையும் ஒன்றே. அது ‘சத்தங்கள்’ என்பதைக் குறிக்கப் பயன்படும் மிகப் பொதுவான வார்த்தையாகும். அவர் சொல்ல வருவது இதுதான்: உலகில் உள்ள பலதரப்பட்ட மொழிகள் பல்வேறு வகையான சத்தங்களைக் கொண்டிருக்கின்றன, ஆனால் ‘அவைகள் ஒன்றும் அர்த்தமில்லாதவையல்ல’. அந்தச் சத்தங்களை அவர் மொழிகளுக்கு ஒப்பிடுகிறார்.
பதினொன்றாம் வசனத்தில் அவர் சொல்கிறார்: “ஆயினும், பாஷையின் (சத்தத்தின்) கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்”. நான் புரிந்துகொள்ளாத பாஷையில் நீங்கள் என்னிடம் பேசினால், அது மொழியறியாத இரு அந்நியர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதைப் போன்றதாகும். இங்கே அவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வரும் செய்தி என்னவென்றால், அது ஒருவருக்கும் புரியாத பரவச உளறல் பேச்சாக இருந்தாலும் சரி, வியாக்கியானம் செய்யப்படாத (புரியாத) உலக மொழியாக இருந்தாலும் சரி, யாருக்கும் புரியாததால் அதைப் பேசுவதால் திருச்சபையில் உள்ள எவருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதேயாகும். நேர்த்தியாக வாசிக்கப்படும் இசைக் கருவிகளானாலும் சரி, முறையாகப் பேசப்படும் உலக மொழியாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. ஆனால், சபையில் நீங்கள் பேசும் அந்நியபாஷைக்கு (பரவச உளறல் மற்றும் வியாக்கியானம் செய்யப்படாத உலகப் பாஷை) எந்த அர்த்தமும் இல்லை என்கிறார்.
இதுபோன்ற கூச்சல் குழப்பத்தினால் எந்த ஒரு ஆவிக்குரிய ஊழியத்தையும் செய்ய முடியாது. அப்போது அவிசுவாசிகள் உள்ளே வந்து நீங்கள் செய்யும் கூத்தைப் பார்த்து, “இதென்ன, இவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போல் நடந்துகொள்கிறார்கள்!” என்று சொல்வார்கள் (வசனம் 23). வேறொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால், இவர்களுக்கும் கிரேக்கத் தெய்வமாகிய தியானாளை (Diana) வழிபடுபவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அவர்கள் சொல்வார்கள். புறஜாதி சமயத்தாரின் கோயில்களில் அவர்கள் எப்படி உளறுகிறார்களோ, அதே போன்றுதான் இவர்களும் உளறுகிறார்கள்; ஆகவே, கொரிந்திய கிறிஸ்தவர்களுக்கும் தியானாளின் ஆலயத்தில் வழிபடும் பக்தர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
அந்நியபாஷையை வியாக்கியானம் செய்தல்
பன்னிரண்டாம் வசனத்தில், “நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்” என்று கூறுகிறார். நீங்கள் ஆவிக்குரிய வரங்களுக்காக வைராக்கியம் கொண்டிருக்கிறீர்கள், ஆவிக்குரிய வரங்களை நாடுகிறீர்கள், பரிசுத்த ஆவியானவரின் செயல்களை விரும்புகிறீர்கள். இவை உண்மையானால், திருச்சபையின் உண்மையான ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவிசெய்யும் செயல்பாடுகளை நாடுங்கள் என்று பவுல் வலியுறுத்துகிறார்.
அந்நியபாஷை இரண்டாம் பட்சமே என்பதற்கு மற்றுமொரு காரணம், அது மனதையும் அறிவையும் உள்ளடக்காமல் உணர்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பதாகும். பதின்மூன்றாம் வசனத்தில் இதைத்தான் அவர் சுட்டிக்காட்டுகிறார்: “அந்தப்படி, அந்நியபாஷையில் பேசுகிறவன்” - இங்கே ஒருமையில் குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே உளறல் பேச்சையே அவர் குறிக்கிறார் – “அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்”. இது புரிந்துகொள்வதற்குச் சற்றுக் கடினமான வசனமும்கூட.
இங்கே அப். பவுல் என்ன சொல்லுகிறார்? ஏற்கனவே நாம் பார்த்தபடி, ஏதோ பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் உண்மையான தேவனுடன் பேசுவதாக நினைத்துக்கொண்டு, அவர்கள் தங்கள் புறஜாதி தேவர்களுடன் தனிப்பட்ட விதத்தில் உளறல் பேச்சுகள் மூலம் தொடர்புகொண்டிருந்தார்கள். பரவச உளறல் பேச்சுகள் மூலம் ஜெபம் செய்வது என்பது இந்த வரத்தின் நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை; அப்படிச் செய்வது எப்போதுமே தவறு. அப். பவுல் சொல்லுகிறார்: ‘உளறல் பேச்சு மூலமாக ஜெபம் செய்யும் நீங்கள், அதன் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக ஜெபம் பண்ணுங்கள்; அதை வியாக்கியானம் பண்ணும் வரத்துக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்’. இங்கே அவர் அவர்களைக் கிண்டல் செய்யும் விதமாகவே பேசுகிறார். "உளறல் பேச்சு மூலமாக ஜெபிக்கிறவர்களே, மற்றவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் அதன் அர்த்தத்தையும் கேட்டு ஏன் நீங்கள் ஜெபிக்கக் கூடாது?" என்கிறார்.
ஒருவேளை இந்த வசனத்தை நான் வியாக்கியானம் செய்யும் விதம் சற்று அதிகப்படியாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நீங்கள் கொரிந்திய நிருபத்தைக் கவனமாக வாசித்தால், இதுபோன்ற கேலிக் கிண்டல்களைப் பல இடங்களில் அப். பவுல் பயன்படுத்துவதை நீங்கள் காணமுடியும். சரி, இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்வதில் உங்களுக்குப் பிரச்சனை இருக்கும் என்றால், இதை வேறொரு வகையிலும் விளக்கலாம். மற்றொரு விளக்கம் இதுதான்: ‘அந்நியபாஷையில் ஜெபிக்கிறவன், அதை வியாக்கியானம் செய்யும் வரத்தையும் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஜெபிக்கக்கடவன்’. இந்த வகையில் நாம் அர்த்தம் கொள்ள வேண்டுமென்றால், ‘நாம் நமக்கு வேண்டிய வரங்களை ஜெபித்துப் பெற்றுக்கொள்ள முடியும்’, அப்படித்தானே? வியாக்கியானம் செய்யும் வரமோ அல்லது வேறு எந்த வரமும் வேண்டுமென்றால் நாம் அதற்காக ஜெபிக்க வேண்டும். சரியா? வேதத்தின்படி அது உண்மையா?
1 கொரிந்தியர் 12:11 சொல்கிறது: “இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் (வரங்களைப்) பகிர்ந்துகொடுக்கிறார்”. மேலும் 1 கொரிந்தியர் 12:30 கேட்கிறது: “எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?” அதற்கான பதில், 'இல்லவே இல்லை' என்பதாகும். நீங்கள் எந்த ஒரு வரத்தையும் ஜெபித்துப் பெற்றுக்கொள்ளலாம் என்று தேவன் ஒருபோதும் சொன்னதில்லை; அல்லது நீங்கள் விரும்பும் எந்த வரத்தையும் நாடிப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் சொன்னதில்லை. ஆகவே, 13-ஆம் வசனத்தில் உள்ளபடி, நாம் ஜெபித்து வியாக்கியானம் செய்யும் வரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று விளக்கம் கொடுப்பது தவறானது. அங்கே அப். பவுல் அவர்களைக் கிண்டல் செய்யும் வண்ணமாகவே அப்படிச் சொல்லுகிறார்.
இங்கே மற்றுமொரு காரணத்தை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். 1 கொரிந்தியர் 14:28-ஐ கவனியுங்கள்: “அர்த்தஞ் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், சபையிலே பேசாமல் அமைதியாயிருக்கக்கடவன்”. ஒருவன் உண்மையான அந்நியபாஷையின் வரத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றாலும்கூட, அவர்கள் நடுவில் உள்ள புறஜாதியானும் புரிந்துகொள்ளும் விதமாக வியாக்கியானம் செய்கிறவன் இல்லாவிட்டால், ஒருவரும் அந்நியபாஷையில் பேசக்கூடாது. வியாக்கியானம் செய்தல் அவ்வளவு முக்கியம் என்றால், தங்களில் யாருக்கு அந்த வரம் இருக்கிறது என்பதை அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்க வேண்டும்.
ஆகவே, 13-ஆம் வசனம் நிச்சயமாக ஜெபித்து அந்த வரத்தைப் பெற்றுக்கொள்ளும்படி சொல்லவில்லை. மாறாக, அவர்களைக் கிண்டல் செய்யும் விதமாக, 'நீங்கள் அந்நியபாஷை என்ற பெயரில் உளறும்போது, மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும்படி யாவரும் புரிந்துகொள்ளக்கூடிய சில வார்த்தைகளைப் பேசும்படி ஏன் நீங்கள் ஜெபிக்கக் கூடாது?' என்ற பொருளைத் தருகிறது. இப்போது நீங்கள் அப். பவுல் சொல்ல வரும் கருத்தைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
பரவச உளறல் பாஷை பயனற்றது
பதினான்காம் வசனத்தில் அவர் கூறுகிறார்: “நான் அந்நியபாஷையிலே (உளறல் பாஷையிலே) விண்ணப்பம் பண்ணினால் என் ஆவி விண்ணப்பம் பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்”. இங்கு ‘ஆவி’ என்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை ‘pneuma’; இந்த வார்த்தை ‘ஆவி’, ‘சுவாசம்’, ‘காற்று’ என்றும் மொழியாக்கம் செய்யப்படலாம். ஆகவே, இந்த வசனம் இப்படியாக மொழியாக்கம் செய்யப்படலாம்: "என்னுடைய ‘சுவாசம்’ அல்லது ‘காற்று’ ஜெபிக்கிறது, என் மனதோ கருத்தில்லாமல் வேறு எங்கோ சிதறியிருக்கிறது."
இங்கே பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் ‘ஆவி’ என்பதற்குப் ‘பரிசுத்த ஆவி’ என்று விளக்கமளிப்பார்கள். அது சரியான விளக்கம் அல்ல; ஏனென்றால், இங்கே “என் ஆவி விண்ணப்பம் பண்ணும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உடனே அவர்கள், “பரிசுத்த ஆவியானவர், என் ஆவி” என்று சொல்வார்கள். ஆனால் இந்த வசனத்தில், "என் ஆவி"யானது "என் கருத்து"டன் ஒப்பிடப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் ஒப்பீடு ‘மனித கருத்தாக’ இருக்கும் பட்சத்தில், அடுத்த பக்கத்தில் அது ‘மனித ஆவியுடன்’தான் இருக்க வேண்டும்; பரிசுத்த ஆவியாக இருக்க முடியாது. ஒப்பீடு என்பது சமமான நிலையில் இருக்க வேண்டும்.
ஆகவே அவர் சொல்கிறார்: “நான் (உளறல்) அந்நியபாஷையில் பேசினால் என் ஆவி விண்ணப்பம் பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்”. அங்கே பயனுள்ள எதுவும் நடக்கவில்லை; பரவச உளறல் பாஷையில் ஜெபிக்கும்போது அங்கே எந்தக் கருத்தும் இல்லை. நான் என்ன ஜெபிக்கிறேன் என்பது எனக்கும் புரிவதில்லை, மற்றவர்களுக்கும் புரிவதில்லை. போலியான வரமானது உணர்ச்சிபூர்வமான அனுபவத்தைத் தருகிறதே தவிர, அதில் மனப்பூர்வமான எந்தக் கருத்தும் இல்லை.
அன்பானவர்களே, நீங்களும் நானும் அறிந்திருக்கிறபடி, வேதாகமத்தின் எந்த ஒரு பகுதியிலும் தேவன் நாம் ஒரு கருத்தற்ற அல்லது மனதற்ற ஒன்றைச் செய்யும்படி கூறவில்லை. இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்கள் மூளையின் செயல்பாட்டை நிறுத்த வேண்டிய நேரம் என்று ஒன்று இல்லை. எந்தக் கருத்தும் இல்லாமல் உணர்ச்சியின் அடிப்படையில் தேவன் உங்களைச் செயல்பட வைக்கும் நேரம் எப்போதுமே இல்லை. அப்படிப் பார்க்கும்போது, இன்று பெந்தேகோஸ்தே சபைகளில் பேசப்படும் அந்நியபாஷை மிகத் தவறானது. இங்கே இருப்பதெல்லாம் கருத்தற்ற, மனதற்ற ஒரு உணர்ச்சிபூர்வமான அனுபவம் மட்டுமே.
உண்மையில், மத்தேயு 22:37 இப்படியாகச் சொல்கிறது: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக”. கவனித்தீர்களா? ‘உன் முழு மனதோடும்’. மனிதன் கவனமில்லாத, உளறலான பரவச அந்நியபாஷையில் பேசுவதோ, ஜெபிப்பதோ, பாடுவதோ பயனற்றது; உங்களுக்கும் பயனில்லை, அதைக் கேட்பவருக்கும் எந்தப் பயனும் இல்லை.
வசனம் 15: “இப்படியிருக்க, செய்ய வேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன்; கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்”. நான் தேவனிடத்தில் ஜெபிக்கும்போது என் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் என்னுடைய உள்ளத்திலிருந்து, என்னுடைய இருதயத்திலிருந்து வரும்; நான் என்ன பேசுகிறேன் என்பதை என் முழு மனதோடும் அறிந்திருக்கிறேன். நான் என்னுடைய சுவாசத்தையும், என்னுடைய காற்றையும், என்னுடைய மூளையையும் ஜெபிக்கும்போது பயன்படுத்துவேன். முழு மனதோடும் இருதயத்தோடும் நான் கர்த்தரைப் பாடுவேன்.
நாம் காண்கிறபடி, இந்தப் பரவச உளறல் பாஷையில் அவர்கள் பாடலும் பாடியிருக்கிறார்கள். இன்றைய பெந்தேகோஸ்தே விசுவாசிகளும் அந்நியபாஷையில் பாடுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார், "நான் அதைச் செய்வதில்லை". எனக்கும் தேவனுக்கும் இடையிலான இந்தத் தனிப்பட்ட ஜெப பாஷையில் என்னால் பாடவும் முடியும் என்று பலர் மற்றவர்களுக்கு முன்னால் பெருமைப்பட்டுக் கொள்வதைத் தவிர, அந்நியபாஷையில் பாடுவதால் என்ன பிரயோஜனம்? இது மிகவும் சுயநலமான போக்கு! கேளுங்கள், நீங்கள் தமிழில் பாடுகிறீர்கள், தேவன் புரிந்துகொள்கிறார்; நீங்கள் தமிழில் ஜெபிக்கிறீர்கள், தேவன் புரிந்துகொள்கிறார். நீங்களும் தேவனும் புரிந்துகொள்ளும் மொழியில் பேசுவதைவிடச் சிறப்பான ஒன்று இருக்க முடியுமா? யார் என்ன சொன்னாலும் சரி, நீங்கள் புரிந்துகொள்ளாத, தேவன் விரும்பாத உளறலான பரவசப் பேச்சு இதைவிடச் சிறந்ததா என்ன? தேவனுக்கு அது தேவையில்லை!
பதினாறாம் வசனத்தில்: “இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம் பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்வான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே”. இப்போது உனக்கு அருகில் இருக்கும் நபரைக் காட்டி, "நீ பேசுவதை அவன் புரிந்துகொள்ளாததால் உன் ஜெபத்திற்கு அவன் எப்படி ஆமென் சொல்வான்?" என்று கேட்கிறார். இங்கே ‘கல்லாதவன்’ என்ற வார்த்தையைச் சற்று கவனியுங்கள். அதைக் குறிக்கும் கிரேக்க வார்த்தை ‘idiōtēs’, அதன் அர்த்தம் ‘அறியாதவன்’ என்பதாகும். அதாவது, நீ பேசும் மொழியை அறியாதவன். நீ ஸ்தோத்திரம் (நன்றி) சொல்லும்போது, நீ பேசுவதை உனக்கு அருகில் இருப்பவன் புரிந்துகொள்ளாததால், உன் ஜெபத்திற்கு அவன் எப்படி ஆமென் சொல்வான்?
‘ஆமென்’ என்பது ஓர் எபிரேயப் பெயர்ச்சொல். அதன் அர்த்தம், ‘உண்மை, சொல்லும் சகோதரா’, ‘அப்படியே ஆகக்கடவது’ மற்றும் ‘நான் உங்களுடன் இருக்கிறேன்’ என்பவைகளில் சூழ்நிலைக்குத் தக்கவாறு எது பொருந்துமோ, அந்த அர்த்தத்தைக் குறிக்கும். யூத ஜெப ஆலயங்களில் ‘ஆமென்’ சொல்வது எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்குத் தெரியுமா? யூத ரபிகள் சொல்லும் பொன்மொழிகள் சிலவற்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: ‘ஆமென் என்று சொல்பவன், ஆசீர்வதிப்பவனைவிட மேலானவன்’. மற்றுமொன்று, ‘ஆமென் என்று சொல்பவனுக்குப் பரலோகத்தின் வாசல்கள் திறந்திருக்கின்றன’. இன்னொன்று, ‘மிகச் சுருக்கமாக ஆமென் சொல்பவனின் வாழ்நாட்கள் சுருக்கப்படும், மிக நீளமாக ஆமென் சொல்பவனது வாழ்நாட்கள் நீட்டிக்கப்படும்’. அவர்களின் ஜெப ஆலயங்களில் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கும்படி, யார் அதிக ஆமென் சொல்கிறார்கள் என்பதில் கடும் போட்டி நிலவியது.
ஆதித் திருச்சபையிலும் உண்மையான அர்த்தத்துடன் ஆமென் சொல்வது மிகவும் வழக்கமான ஒன்று. பவுல் சொல்கிறார், ‘ஆமென்’ என்று சொல்லி ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வது எத்தனை சிறந்தது! நீங்கள் உங்கள் பரவச உளறல் பாஷையில் ஜெபிக்கும்போது உங்கள் அருகில் இருப்பவரால்கூட ஆமென் என்று சொல்லி நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே. எல்லோரும் தேறும்படிக்கே, எல்லோரும் பயன்பெறும்படிக்கே நீங்கள் சபையாகக் கூடி வருகிறீர்கள். ஆனால் நீங்கள் செய்யும் செயல் எப்போதும் யாராவது ஒருவரை உதாசீனப்படுத்துவதாகவே இருக்கிறது.
வசனம் 17: “நீ நன்றாய் ஸ்தோத்திரம் பண்ணுகிறாய்”. நீ செய்வது சிறப்பான ஒன்றாக இருக்கலாம். நீ உண்மையான அந்நியபாஷை வரத்தை உடையவனாக இருந்தாலும், அல்லது நீங்கள் உங்கள் இருதயத்தில் எதையாவது நினைத்துத் தேவனுக்கு நன்றி செலுத்துவதாக இருந்தாலும், உன்னைச் சுற்றி இருக்கிற யாருடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் அது உதவி செய்யவில்லையே. நீங்கள் சபையாகக் கூடி வருவதே எல்லோருடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கும்தானே!
இப்போது உங்களில் சிலர் சொல்லலாம்: "அதனால்தான் இது தனிமையில் நீங்கள் தேவனோடு நேரம் செலவிடும்போது பயன்படுத்த வேண்டிய வரம் என்று நாங்கள் சொல்கிறோம்" என்று. சற்று முன்னர்தான் பார்த்தோம், இது தனி ஜெபத்தில் பயன்படுத்த வேண்டிய வரமும் அல்ல. அந்நியபாஷையின் வரமானது அந்த குறிப்பிட்ட பாஷையைப் பேசிய யாராவது ஒருவர் அருகில் இருக்கும்போது மட்டுமே பயன்படுத்தப்பட்ட வரமாகும். தனி ஜெபத்திற்குப் பயன்படுத்தும்போது, என்ன பயன்? நீங்கள் பொதுவில் பேசும்போதே யாருக்கும் பயன்படவில்லை என்றால், தனியாகப் பேசும்போது எப்படிப் பயன்படும்?
பதினெட்டாம் வசனத்தில், “உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” என்று அப். பவுல் சொல்லுகிறார். இந்தக் காரியத்தைக் குறித்து நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன்; பாஷைகளைக் குறித்து நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்றும் விரும்புகிறேன். இங்கே உண்மையான அந்நியபாஷையின் வரத்தைக் குறித்து அப். பவுல் பேசிக்கொண்டிருக்கிறார் (கவனிக்கவும்: பாஷைகள் - பன்மை). ‘ஒருவேளை உங்களுடைய பாஷைகளைக் குறித்து நான் எதுவுமே அறியவில்லை என்று நீங்கள் நினைப்பீர்களென்றால், உங்கள் எல்லாரையும்விட அதிகமான உலகப் பாஷைகளை நான் பேசுகிறேன் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன்’ என்று அப். பவுல் சொல்லுகிறார்.
அவர் அப்போஸ்தலனாக இருந்தபடியால், 2 கொரிந்தியர் 12:12-ன்படி, அப்போஸ்தலர்களுக்கே உரிய உண்மையான அந்நியபாஷை வரத்தை உடையவராக இருந்தார். அவர் அநேக நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டபடியால், தனக்கிருந்த அந்நியபாஷையின் வரத்தைச் சந்தேகத்திற்கிடமின்றிப் பயன்படுத்தினார் என்று சொல்லலாம்.
அவர் எப்படிப் பயன்படுத்தினார்? முதலாவதாக, அவர் தனிப்பட்ட ஜெப மொழியாக அதைப் பயன்படுத்தவில்லை. இரண்டாவதாக, கிறிஸ்தவக் கூடுகைகளில் தான் மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ளப் பயன்படுத்தவில்லை. மூன்றாவதாக, சுயநலமாகத் தன்னுடைய சொந்தப் பிரயோஜனத்திற்காகப் பயன்படுத்தவில்லை. அவர் எப்படி இந்த வரத்தைப் பயன்படுத்தினார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். பவுல் தன்னுடைய பயணங்களில், தான் அறிந்திராத மொழி பேசிய மக்களைச் சந்தித்தபோது, தனக்குத் தெரியாத அந்த மொழியை (அந்நியபாஷையை) பேசும் வரத்தைத் தேவன் அவருக்குக் கொடுத்தார். அதனால் தேவனுடைய மகத்துவங்களையும், நற்செய்தியையும் அவர்கள் மொழியிலேயே, அவர்கள் புரிந்துகொள்ளும்படி பேசினார். இந்த அதிசயத்தைப் பார்த்த மக்கள், தேவனே தங்களோடு பேசுகிறார் என்பதைப் புரிந்துகொண்டார்கள்; அற்புத அடையாளங்களைப் பெற்றுக்கொண்டார்கள்; தங்கள் மொழியில் தேவனுடைய உண்மையைச் பேசக் கேட்ட மக்கள், இயேசுவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.
அவர் புறஜாதியார் மத்தியில் ஊழியம் செய்தார்; தன்னுடைய ஊழியப் பாதையில் இந்த வரத்தை அவர் பலமுறை பயன்படுத்தினார் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், இந்த வரத்தை அவர் மிகக் குறைவாகவே மதிப்பிட்டு, தன்னுடைய ஊழியங்களிலும் நிருபங்களிலும் இந்த வரத்தைப்பற்றி வேறு எங்குமே குறிப்பிடவில்லை என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமளிக்கிறது.
பத்தொன்பதாம் வசனம், “அப்படியிருந்தும்...” (எனக்கு அந்த வரம் இருந்தாலும்) “சபையிலே...” நற்செய்தி அறிவிப்பது சரிதான். அங்கேயிருந்த புறஜாதி மக்கள் தங்கள் மொழியில் தேவனுடைய உண்மையைக் கேட்பதிலும், தேவனே அவர்களிடத்தில் பேசுகிறார் என்பதை அவர்களுக்குக் காண்பிப்பதிலும் தவறொன்றுமில்லை என்றாலும், இப்போது “சபையிலே” என்பதைக் கவனியுங்கள் – “அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.” அதுதான் அவரின் நோக்கம்.
இப்போது சுவாரசியமான ஒன்றை நாம் பார்க்கப்போகிறோம். இந்த வசனத்தில் உள்ள ‘ஐந்து’ மற்றும் ‘பதினாயிரம்’ என்ற எண்கள் ஒரு ஒப்பீட்டுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. பதினாயிரம் என்பதற்கான கிரேக்க வார்த்தை ‘murios’ என்பதாகும். கிரேக்க கணிதவியலில் பதினாயிரம் என்ற எண்ணே அதிகபட்ச மதிப்புக் கொண்டதாகும்; அதைக் குறிக்க ‘murios’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இந்த வார்த்தை இங்கு ஏன் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்கிறீர்களா? உதாரணமாக, வெளிப்படுத்தின விசேஷம் 5:11-ல், தேவதூதர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகையில், “அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு murios, murios என்றும், chilioi, chilioi என்றும் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால், அவர்களுடைய எண் கணிதத்தில் பதினாயிரம் என்ற எண்ணே மிகப்பெரிய மதிப்புக் கொண்ட எண்ணாகும். ஆகவே, தமிழில் நாம் இப்படிச் சொல்லலாம்: “நான் சபையிலே (உளறல் பாஷையில்) அந்நியபாஷையில் ‘கோடான கோடி’ வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.” இங்கே அவர் எதையும் எதனோடும் ஒப்பிடவில்லை. இப்படி அர்த்தமில்லாததைப் பேசுவதற்குப் பதிலாக, என்னுடைய சத்தத்தைப் பயன்படுத்தி மற்றவர்களுக்குப் பயனுள்ளதைப் போதிக்கவே நான் விரும்புகிறேன் என்று சொல்லுகிறார்.
இருபதாம் வசனத்தில், “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்” என்று சொல்லுகிறார். அதாவது, ஆவிக்குரிய காரியங்களில் வளருங்கள் என்று சொல்லுகிறார். 1 கொரிந்தியர் 13:11-ல், “நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்... நான் புருஷனானபோதோ, குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்” என்று சொன்னார். இந்தப் பகுதியில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம் என்ன? சபையில் அந்நியபாஷையை எப்படிப் பேசவேண்டும் என்று கற்றுக்கொள்கிறோமா? நிச்சயமாக இல்லை. ஏனென்றால், ஆதித்திருச்சபையில் காணப்பட்ட அந்நியபாஷை வரமானது, அதன் நோக்கம் நிறைவேறிவிட்டதால் இன்றைய திருச்சபையில் செயல்பாட்டில் இல்லை.
சரி, இதுவரை நாம் பார்த்தவைகளிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? தேவனுடைய வார்த்தையை மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் அறிவிக்க வேண்டும்; தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் வரங்களை வைத்து மற்றவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும். ஒருபோதும் சுயநலமான ஆவிக்குரிய அனுபவங்களை நாடாதீர்கள்; உணர்ச்சிபூர்வமான அனுபவத்திற்குப் பதிலாக, அறிவுபூர்வமான அனுபவத்தில் மகிழுங்கள். சாத்தானுடைய போலியான அனுபவங்களுக்கு எச்சரிக்கையாக இருந்து, தேவனுடைய சத்தியத்துடனும், திறந்த மனதுடனும் எல்லாவற்றையும் அணுகுங்கள். இன்றைய அந்நியபாஷை இயக்கங்களின் மிகப் பரிதாபமான நிலைமை என்னவென்றால், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் உண்மையான செயல்களைவிட்டு வெகுதூரம் சென்றிருக்கிறார்கள்.
இங்கு வேடிக்கையான கதை ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நாய் ஒன்று தன்னுடைய வாயில் ஒரு எலும்புத்துண்டைக் கவ்விக்கொண்டு பாலத்தின்மீது நடந்து சென்றது. மேலிருந்து கீழே தண்ணீரில் தன்னுடைய நிழலைப் பார்த்த அந்த நாய்க்கு, தன்னிடத்திலிருந்த எலும்புத்துண்டைவிடத் தன்னுடைய நிழலில் தெரிந்த எலும்புத்துண்டு சிறப்பாக இருப்பதுபோல் தோன்றியது. உடனே அந்த நிழல் எலும்புத்துண்டைப் பிடிக்க எண்ணி, தன் வாயிலிருந்த எலும்பைக் கீழே தண்ணீரில் போட்டுவிட்டு, பசியுடன் நடந்து சென்றது. இப்படித்தான் இருக்கிறது, இன்று போலியான பரவச அனுபவங்களை நாடும் கிறிஸ்தவர்களின் நிலைமையும்.
இப்போது இரண்டாம் பகுதிக்கு வருகிறோம். அந்நியபாஷை வரத்தின் நோக்கம், அது ஓர் அடையாளமாகக் கொடுக்கப்பட்டது என்பதாகும். இது இந்த ஆராய்ச்சியின் மிக முக்கியமான பகுதியாகும். இந்த வரம் கொடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதில் தெளிவு பெற்றுவிட்டால், இந்த வரத்தைப் பொறுத்தவரையில் ஆதித்திருச்சபையில் என்ன நடந்தது என்பதையும், வரலாற்றில் என்ன நிகழ்ந்தது என்பதையும், இன்று திருச்சபையில் என்ன நடந்தேறிக்கொண்டிருக்கிறது என்பதையும் எளிதில் அறிந்துகொள்ளலாம். அது வேதாகம நோக்கத்துடன் பொருந்துகிறதா இல்லையா என்பதைத் தீர்மானித்துவிடலாம். அதைத் தொடர்ந்து, இன்றைய திருச்சபைகளில் செயல்படுத்தப்படும் இந்த வரமானது உண்மையா, பொய்யா என்பதையும் தீர்மானித்துவிடலாம். வேதாகமத்தில் அதன் நோக்கம் என்னவென்பதைப் பார்ப்பதற்கு முன்பாக, பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் அதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துவிட்டுத் தொடரலாம் என நினைக்கிறேன்.
பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் அந்நியபாஷையின் பிரதான நோக்கமாகக் குறிப்பிடுவது என்னவென்றால், அது ஒரு விசுவாசிக்கும் தேவனுக்கும் இடையில் பேசப்படும் இரகசியமான, தனிப்பட்ட மொழி என்பதாகும். திருச்சபையில் பேசுவதைவிட, தனி ஜெபத்தில் அவர்கள் தேவனோடு அந்நியபாஷையில் பேசி ஆவியில் நிறைய வேண்டும் என்று சொல்கிறார்கள். சற்று முன்னர்தான், இந்தப்பரவச உளறல் பாஷையானது புறஜாதியாரின் வழக்கம் என்றும், இதற்கும் வேதாகமத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் பார்த்தோம். மேலும், முதல் 19 வசனங்களில், அப்போஸ்தலனாகிய பவுல் அந்நியபாஷையை தேவனுக்கும் தனக்கும் இடையில் ஓர் இரகசியப் பாஷையாகப் பயன்படுத்துவது தவறு என்பதைச் சுட்டிக்காட்டியதையும் நாம் பார்த்தோம். ஆகவே, அந்நியபாஷையைத் தனி ஜெபத்தில் பயன்படுத்த வேண்டும் என்று பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.
இன்னும் சிலர் சொல்லும்போது, அந்நியபாஷையானது தேவனைத் துதிப்பதற்கான மொழி என்று சொல்கிறார்கள். இது ஒரு புதிய விடுதலையோடு, உன்னதமாக தேவனைத் துதிப்பதற்கான வழி என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களிடம் நான் பின்வரும் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்: தேவனைத் துதிப்பதற்கான மிகச் சிறந்த இடமும் நேரமும், உன்னதமான துதி ஏறெடுக்கப்படும் இடமும் பரலோகமே ஆகும். அப்படியானால், 1 கொரிந்தியர் 13:8-ல், “அந்நியபாஷைகளானாலும் ஓய்ந்துபோகும்” என்று ஏன் சொல்லப்பட்டிருக்கிறது? அந்நியபாஷையானது தேவனைத் துதிப்பதற்கான உன்னதமான வழி என்றால், தேவனைத் துதித்தல் என்பது பரலோகத்தின் மிக முக்கியமான அம்சமாய் இருக்கையில், அது ஏன் ஓய்ந்துபோக வேண்டும்? ஆகவே, திருவசனத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, பரவச உளறலாகிய இந்த அந்நியபாஷையானது தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சிக்கானது என்றோ, தேவனுடனான இரகசிய பாஷை என்றோ ஏற்றுக்கொள்ள முடியாது.
இரண்டாவதாக, வேறு சிலர் பரிந்துரைக்கும் காரணம் என்னவென்றால், இது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அல்ல, நற்செய்தி அறிவிப்பதற்காகவே கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். அதாவது, புதிய ஏற்பாட்டில் அந்நியபாஷை என்பது ஒருவர் தான் முன்னரே அறிந்திராத மொழியில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட வரம் என்று கூறுகிறார்கள். இது ஒரு சிறந்த கருத்தாகத் தோன்றலாம். மிஷனரி பணித்தளத்தில் எங்கோ ஓரிடத்தில் தேவன் ஒருவருக்கு இந்த வரத்தைக் கொடுத்து, தான் அறியாத மொழியைப் பேசும் மக்களிடம் நற்செய்தியைப் பிரசங்கிக்கப் பரிசுத்த ஆவியானவர் உதவி செய்திருக்கலாம்; நான் அதை நிச்சயமாக மறுக்கவில்லை. ஆனாலும், இதற்காகத்தான் இந்த வரம் கொடுக்கப்பட்டது என்று நாம் உறுதிபடக் கூற முடியாது. ஏனென்றால், புதிய ஏற்பாட்டில் எந்தவொரு இடத்திலும் அப்படி ஒரு சம்பவத்தை நாம் காண்பதில்லை.
அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில் அவர்கள் எல்லாரும் அந்நியபாஷையில் பேசியபோது, அங்கிருந்தவர்கள் தத்தமது சொந்த மொழியில் அவர்கள் பேசுவதைக் கேட்டார்கள் என்று நீங்கள் கூறலாம். ஆம், அவர்கள் எல்லாரும் என்ன பேசக் கேட்டார்கள் என்பதைக் கவனியுங்கள்: “தேவனுடைய மகத்துவங்களை” பேசக் கேட்டார்கள். யூதப் பின்னணியில் இருந்து வரும் அந்த எளிய சொற்றொடர், 'பழைய ஏற்பாட்டில் நடந்த வரலாற்றுப்பூர்வமான தேவனுடைய உன்னத செயல்பாடுகளைப் பேசுவதைக்' குறிக்கிறது. இது ஏன் நடந்தது? யூத மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே! அதன் பிறகே, பேதுரு எழுந்து நின்று அவர்களின் சொந்த மொழியில் நற்செய்தியைப் பிரசங்கித்தார். இங்கும் அந்நியபாஷையானது நற்செய்தியைப் பிரசங்கிக்கப் பயன்படுத்தப்படவில்லை; மாறாக, யூத மக்களின் கவனத்தை ஈர்த்து, கூட்டத்தைக் கூட்டுவதற்காகவே பயன்படுத்தப்பட்டது. பெந்தேகோஸ்தே போதனையாளர்களில் பலர் பலவிதமான விளக்கங்களை அளிக்கிறார்கள். சிலர் இது தேவனுடனான இரகசிய பாஷை என்றும், சிலர் இது தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவுகிறது என்றும், வேறு சிலர் இது நற்செய்தி அறிவிக்கப் பயன்படுகிறது என்றும், மற்றும் சிலர் இது தேவனைத் துதிக்கப் பயன்படுகிறது என்றும் சொல்கிறார்கள். ஆனாலும், இவர்களுடைய எந்தவொரு விளக்கமும் வேதாகம நோக்கங்களுடன் பொருந்தவில்லை.
மூன்றாவதாக, அந்நியபாஷையானது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கான அடையாளம் என்று வாதிடப்படுகிறது; அதை ஏற்றுக்கொண்டால் அதில் பல சிக்கல்கள் எழுகின்றன. 1 கொரிந்தியர் 12:13-ல், “எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு” என்று வாசிக்கிறோம். எத்தனை பேர் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்? 'எல்லோரும்'. இப்போது வசனம் 30-ஐக் கவனியுங்கள்: “எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம்பண்ணுகிறார்களா?” இதற்கான பதில், ‘இல்லை’ என்பதே ஆகும். இப்போது சிந்தித்துப் பாருங்கள்: ‘எல்லோரும் ஞானஸ்நானம் பெற்றார்கள், ஆனால் எல்லோரும் அந்நியபாஷை பேசவில்லை’. இந்த இரண்டு கருத்துகளையும் உங்களால் ஒருபோதும் இணைத்துப் பார்க்க முடியாது.
மேலும், அப்போஸ்தலர் 2:38-ல் பேதுரு தன் பிரசங்கத்தில், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்று கூறினார். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் மனந்திரும்பினார்கள்; அவர்களில் எத்தனை பேர் அந்நியபாஷை பேசினார்கள் என்று தெரியுமா? வேதாகமம் அதைச் சொல்லவில்லை. அப்போஸ்தலர் 4:31-ல், “அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு...” என்று பார்க்கிறோம். இங்கே எல்லாரும் அந்நியபாஷையில் பேசினார்களா? இல்லை, அவர்கள் “தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்”. அப்போஸ்தலர் 2 மற்றும் 4 ஆகிய அதிகாரங்களில் உள்ளவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்; ஆனால், 4-ஆம் அதிகாரத்தில் அவர்கள் யாரும் அந்நியபாஷையில் பேசவில்லை. ஆகவே, ஒன்றோடொன்று பொருந்தாத இந்த இரு சூழல்களையும் நீங்கள் ஒப்பிடவே முடியாது.
அப்படியானால், இது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கான அடையாளம் அல்ல, நற்செய்தி அறிவிப்பதற்கும் அல்ல, சுய பக்திவிருத்திக்கும் பயன்படவில்லை, தேவனுடனான தனிப்பட்ட இரகசிய பாஷை என்றும் அல்ல என்றால், அந்நியபாஷை கொடுக்கப்பட்டதன் நோக்கம் தான் என்ன? அதைத்தான் நாம் இப்போது சிந்திக்கப்போகிறோம்.
இருபதாம் வசனத்தைக் கவனியுங்கள்: “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள் (இங்குள்ள கிரேக்க வார்த்தை 5-10 வயதுள்ள 'சிறு பிள்ளைகளைக்' குறிக்கிறது)” – அதாவது, 'உங்கள் சிறுபிள்ளைத்தனத்தை நிறுத்துங்கள்' என்கிறார். மேலும், “துர்க்குணத்திலே குழந்தைகளாயும் (இங்குள்ள கிரேக்க வார்த்தை ஒரு வயதுக்கும் குறைவான 'குழந்தைகளைக்' குறிக்கிறது)” என்று கூறுகிறார். துர்க்குணம் என்பதற்கு ‘kakia’ என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; அது பொதுவாக ‘தீமை’ என்பதைக் குறிக்கும். “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்”.
இங்கே பவுல் அவர்களை மிகவும் கடிந்துகொள்கிறார்; அதற்கு முன்னதாக, அவர்களைச் சற்று சாந்தப்படுத்தும் விதமாக “சகோதரரே” என்று அழைக்கிறார். அவருடைய இந்த எச்சரிப்பு, கொரிந்தியர்கள் உண்மையில் அந்நியபாஷையைத் தவறான முறையில், தீமைக்கென்று பயன்படுத்தியதைச் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, அவர்கள் புத்தியிலே குழந்தைகளைப் போன்று (புத்தியில்லாமல்) நடந்துகொண்டார்கள். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், சத்தியத்தைச் சீரிய முறையில் அறிந்துகொள்ளும் அளவிற்கு அவர்கள் இன்னும் வளரவில்லை. அவர்கள் எபேசியர் 4:14-ல் சொல்லப்பட்டுள்ளது போல, “தந்திரமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிருந்தார்கள்”.
அவர்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்தவில்லை. 1 கொரிந்தியர் 14:14 சொல்கிறபடி, அவர்களது சிந்தனை பயனற்றதாகவே இருந்தது. அவர்கள் சரியானதைச் சிந்திக்கவில்லை, வேதத்திற்கு அடுத்தவைகளைச் சிந்திக்கவில்லை, தேவனிடமிருந்து பெற்ற வெளிப்பாடுகளைக் குறித்துக்கூட அவர்கள் சிந்திக்கவில்லை. ஆகவே, புத்தியில் தேறினவர்களைப் போல இருப்பதற்குப் பதிலாகக் குழந்தைகளைப் போல் இருந்தார்கள். அவர்கள் முதிர்ச்சியடைந்தவர்களாக, தேவனுடைய சத்தியத்தைத் தங்கள் மனதில் பதித்தவர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் தீமையிலும் துர்க்குணத்திலும் குழந்தைகளாய் இராமல், புத்தியில் தேறினவர்களாய் இருக்க வேண்டும் என்பதே பவுலின் நோக்கம்.
“இதன்மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?” என்று நீங்கள் கேட்கலாம். பிறந்த குழந்தையானது யாருக்கும் எதிராக எந்தவொரு துர்க்குணத்தையும் தீமையையும் கொண்டிருப்பதில்லை. பிறந்த குழந்தை அன்பானது, அழகானது, மிருதுவானது, மென்மையானது. “நீங்களும் ஏன் ஒருவரையொருவர் அப்படி நடத்தக் கூடாது? நீங்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து செயல்படும்போது, தீமையில் குழந்தைகளைப் போலவும், புத்தியிலோ குழந்தைகளைப் போல் இராமல் தேறினவர்களைப் போலவும் ஏன் செயல்படக் கூடாது?” என்று அப்போஸ்தலன் கேட்கிறார்.
அவர்களின் கவனத்தை ஈர்த்த பிறகு, பவுல் அந்நியபாஷையின் நோக்கத்தைக் குறிப்பிடுகிறார். வசனங்கள் 21, 22: “மறுபாஷைக்காரராலும், மறுவுதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே. அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல்் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். அந்நியபாஷை யாருக்கு அடையாளமாக இருக்கவில்லை? 'விசுவாசிகளுக்கு'. அந்நியபாஷையானது விசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கவில்லை என்பதை வேத வசனத்தில் இருந்து தெளிவாகவும் உறுதியாகவும் அறிந்து கொள்ளுங்கள். இந்தக் கருத்தே 14-ஆம் அதிகாரத்தின் மையக்கருத்து என்று கூடச் சொல்லலாம். இந்த ஒரு கருத்து மட்டுமே, இன்று பரவச உளறலாக அந்நியபாஷை பேசும் எந்தவொரு விசுவாசியையும், தான் பேசும் அந்நியபாஷையின் உண்மைத் தன்மையைக் கேள்வி கேட்க வைக்க வேண்டும். ‘அந்நியபாஷையானது அவிசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கிறது’ என்பதையும் உறுதியாக உங்கள் உள்ளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
அந்நியபாஷை எதற்கு அடையாளமாக இருக்கிறது என்பதற்கு மூன்று காரியங்களைக் குறித்துக் கொள்ளுங்கள்:
இவைதான் உண்மையான அந்நியபாஷை வரத்தின் முக்கிய நோக்கங்கள். முதலில், அது ஏன் சாபத்தின் அடையாளம் என்று பார்ப்போம். நான் இப்படிச் சொல்வது உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம்; ஆனால், அப்படித்தான் அது இங்கு எழுதப்பட்டுள்ளது.
வசனம் 21-ஐக் கவனியுங்கள். இது ஏசாயா 28: 11, 12-ஆம் வசனங்களில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. “பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்” —இந்த வேத பகுதியில் ‘ஜனத்தார்’ என்பது இஸ்ரவேல் ஜனத்தைக் குறிக்கிறது— “இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்”. பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏசாயா சொன்ன வார்த்தைகளைச் சுட்டிக்காட்டிவிட்டு அவர் சொல்லுகிறார் (வச 22): “அப்படியிருக்க” —அதாவது, ஏசாயாவின் வார்த்தைகள் உண்மையெனில், ஏசாயாவின் நாட்களில் அந்நியபாஷை அதற்குப் பயன்படுத்தப்பட்டது எனில், அந்நியபாஷையானது— அப்போது மட்டுமல்ல, இப்போதும் —“விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது” என்று பழைய ஏற்பாட்டின் வார்த்தைகளில் இருந்து தனது முடிவைத் தெரிவிக்கிறார்.
இப்போது மற்றுமொரு சுவாரசியமான காரியத்தை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். 22-ஆம் வசனத்தில் அந்நியபாஷை ‘அடையாளமாக’ (அடையாளம் + ஆக) இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு கிரேக்கத்தில் ‘eis’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; அதற்கு ‘நோக்கம்’ என்று பொருள். ஆகவே, ‘அடையாளமாக’ என்பதை குறிக்கும் கிரேக்க வார்த்த்தோடு பொருத்திப் பார்க்கும்போது, இங்கே அந்த வார்த்தை தற்செயலாகப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, அதன் ‘நோக்கமே அடையாளம்’ என்று பொருள்படும் விதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தைப் பயன்பாடு தற்செயலானது அல்ல.
உண்மையில், ‘அடையாளமாக’ என்ற பதம் கிரேக்க பழைய ஏற்பாட்டில் (Septuagint) பத்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அது ‘நோக்கம்’ என்பதையே அர்த்தப்படுத்துகிறது. அதாவது, அந்நியபாஷையின் நோக்கம், அது அவிசுவாசிகளுக்கு அடையாளமாகக் கொடுக்கப்பட்டது என்பதாகும். எந்த அவிசுவாசிகள்? 21-ஆம் வசனத்தில் ‘இந்த ஜனம்’ என்னும் பதம் ‘இஸ்ரவேல் ஜனங்களை’ மட்டுமே குறிக்கிறது. ஆகவே, இது இஸ்ரவேலிலுள்ள அவிசுவாசிகளுக்கு ஒரு அடையாளமாகக் கொடுக்கப்பட்டது. இதை அப்படியே கொரிந்து சபையிலுள்ள விசுவாசிகளுக்குப் பவுல் பிரயோகிக்கிறார்.
சரி, இப்போது ஏசாயாவில் என்ன அர்த்தத்தில் இந்த வசனம் சொல்லப்பட்டுள்ளது என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஏசாயா 28-ஆம் அதிகாரத்திற்கு நீங்கள் சென்றால், அங்கே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா தெற்கு ராஜ்யத்தை அரசாண்டு கொண்டிருக்கிறார். இது தோராயமாகஆம் ஆண்டு. இதற்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் (கி.மு. 722-ல்), இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யம் தங்களுடைய அவிசுவாசம் மற்றும் விசுவாசத் துரோகத்தால் அசீரியர்களால் அழிக்கப்பட்டது. கி.மு. 722-ல், தேவன் மிகப் பயங்கரமான நியாயத்தீர்ப்பை வடக்கு ராஜ்யத்தின் மேல் அனுப்பினார்.
இப்போது கி.மு. 705-ல், தெற்கு ராஜ்யமும் மிக மோசமாகத் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தது. "அவிசுவாசம் மற்றும் விசுவாசத் துரோகத்தினால் வடக்கு ராஜ்யத்திற்கு என்ன நடந்ததோ, அதே கதிதான் உங்களுக்கும்" என்று தெற்கு ராஜ்யத்தைத் தன்னுடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம் தேவன் எச்சரிக்கிறார். ஏசாயா 28-ஆம் அதிகாரத்தின் முதல் 15 வசனங்களில் சொல்லப்பட்டுள்ள செய்தி இதுதான். வடக்கு ராஜ்யம் பெற்றுக்கொண்ட அதே தண்டனை உங்களுக்கும் வரும் என்று தெற்கு ராஜ்யமாகிய யூதாவுக்குத் தீர்க்கதரிசி மூலம் வந்த எச்சரிப்பு இது.
இப்போது ஏசாயா இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுகிறார் என்று பார்க்கலாம். அவர் இஸ்ரவேலின் தலைவர்களும், தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும் குடியில் வெறித்திருக்கக் காண்கிறார். வசனம் 7-ல்: “இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட
8-ஆம் வசனத்தில் காணப்படும் அருவருப்பைப் பாருங்கள்: “போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை”. உண்மையில், அவர் அவர்களைக் குடிவெறியில் மயங்கி வாந்தி எடுத்தவர்களாகக் காண்கிறார். அவர்கள் களியாட்டத்தில் இருக்கையில், அவர்களை மிகக் கடுமையாகக் கடிந்துகொண்டு, வரப்போகிற நியாயத்தீர்ப்பைக் குறித்து எச்சரிக்கை கொடுக்கிறார். அவர்கள் அதற்கு எப்படி எதிர்வினையாற்றினார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்களோ ஏசாயாவைப் பரியாசம் செய்து, திட்டி, வசைபாடி, கேவலப்படுத்தினார்கள்.
ஒன்பதாம் வசனத்தில் அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கவனியுங்கள்: “அவர் (ஏசாயா) யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே” —ஏஅப்படிச் சொல்கிறார்கள்? அவர் எப்போதும்— “கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்”. அதாவது, "அவர் சொன்னதையே மீண்டும் மீண்டும் பலமுறை நம்மிடம் சொல்கிறார்; ஒருவேளை அவர் நம்மைப் பிள்ளைகள் என்று நினைத்திருக்க வேண்டும்" என்று கூறி அவரைப் பரியாசம் செய்கிறார்கள். அவர்கள் ஏசாயாவின் மென்மையான மனப்போக்கை மதிக்காமல், அவரது போதனைகள் குழந்தைத்தனமானது என்று சொல்லி அவரை ஏளனம் செய்தார்கள். "ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் சொல்வதற்கு நாங்கள் என்ன குழந்தைகளா?" என்று கேட்டார்கள்.
ஏசாயாவின் இந்தச் செய்தியை அவர்கள் காது கொடுத்துக் கேட்கவில்லை. அதனால்தான் வசனம் 11-ல் அவர் தேவனுக்காகப் பேசுகிறார்: “பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்”.
இப்போது தேவன் சொல்கிறார்: ‘ஏசாயாவின் குழந்தையைப் போன்ற, திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட எளிமையான செய்தியை நீங்கள் இனி கேட்க மாட்டீர்கள். நீங்கள் இனி புரிந்துகொள்ள முடியாத அந்நிய மொழியில் உங்களுடன் பேசப் போகிறேன்’. தேவன் என்ன சொன்னார் என்றால், உளறும் பாஷை பேசும் பாபிலோனியர்கள் வந்து உங்கள் பட்டணத்தைச் சூழ்ந்து, உங்கள் தேசத்திலிருந்து உங்களை வெளியேற்றி, உங்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, அழித்து, தீக்கிரையாக்குவார்கள். அவர்களுக்குத் தெரியாத, புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான பாபிலோனியர்களின் அந்த அந்நிய மொழியை அவர்கள் கேட்கும்போது, தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள் மீது வந்திருக்கிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். அவர்களது அவிசுவாசத்தினாலும் விசுவாசத் துரோகத்தினாலும் தேவனுடைய இந்த பயங்கரமான நியாயத்தீர்ப்பு கி.மு. 588-ல் நிறைவேறியது.
இது தேவனிடத்திலிருந்து வந்த முதல் எச்சரிக்கை அல்ல. இதற்கு முன்னரே கி.மு. 15-ஆம் நூற்றாண்டில், உபாகமம் 28:49, 50-ல், “உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்தரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார்” என்று எழுதப்பட்டுள்ளது. இஸ்ரவேலர் தாங்கள் அறிந்திராத மொழியைக் கேட்கும்போது, தேவனுடைய நியாயத்தீர்ப்பு வந்திருக்கிறதை அறிந்துகொள்ளுங்கள் என்று கி.மு. 15-ஆம் நூற்றாண்டிலேயே தேவன் அவர்களை எச்சரித்திருந்தார்.
கி.மு. 8-ஆம் நூற்றாண்டிலும், நீங்கள் அறிந்திராத மொழியைக் கேட்கும்போது அது தேவனுடைய நியாயத்தீர்ப்பு என்று ஏசாயாவின் மூலம் தேவன் எச்சரித்தார். எரேமியா தீர்க்கதரிசியின் மூலமும், “இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது எரே 5:15) என்று எச்சரித்திருந்தார். இஸ்ரவேலர் நியாயந்தீர்க்கப்படும்போது அங்கே அவர்களுக்கு ஒரு அடையாளம் இருக்கும்; அவர்கள் அறிந்திராத, புரிந்துகொள்ள முடியாத ஒரு மொழியைக் கேட்பார்கள் என்பதே அந்த அடையாளம் என்று அவர்களுக்குத் தேவன் மிகத் தெளிவாகவே உணர்த்தியிருந்தார்.
இப்போது மீண்டும் நாம் 1 கொரிந்தியர் நிருபத்திற்கு வருகிறோம். இங்கே அப்போஸ்தலனாகிய பவுல் பழைய ஏற்பாட்டு வசனத்தை மேற்கோள் காட்டிப் பேசும்போது, ‘ஏசாயா சொன்னது போல, மோசே சொன்னது போல, எரேமியா சொன்னது போல, அந்நியபாஷையை நீங்கள் பேசக் கேட்கும்போது, அவிசுவாசிகள் மீது தேவன் நியாயத்தீர்ப்பைக் கொண்டு வரப்போகிறார் என்பதற்கான அடையாளமாக அதை அறிந்துகொள்ளுங்கள்’ என்று கூறுகிறார்.
‘அப்போஸ்தலனாகிய பவுல் வாழ்ந்த காலத்தில் இந்த அடையாளம் எதை அர்த்தப்படுத்தியது?’ என்று நீங்கள் கேட்கலாம். பெந்தெகோஸ்தே நாளில் அவர்கள் பற்பல பாஷைகளில் பேசத் தொடங்கியபோது, தேவனுடைய நியாயத்தீர்ப்பு சமீபத்திருக்கிறது என்பதை அங்கே கூடியிருந்த ஒவ்வொரு யூதரும் அறிந்திருப்பார்கள். உங்களுக்குத் தெரியுமா? அதற்குப் பிறகு வெறும் 30 ஆண்டுகளுக்குள் ரோமப் பேரரசு உள்ளே புகுந்து எருசலேமைத் தரைமட்டமாக்கி, யூத மத அமைப்பையும் அழித்தது. அன்று ஒழிந்துபோன பலி செலுத்தும் முறைமை, அதன் பிறகு மீண்டும் தொடங்கப்படவே இல்லை. தேவனுடைய நியாயத்தீர்ப்பு தங்கள் மீது வந்திருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
கி.மு. 722-ல், வடக்கு ராஜ்யத்தின் அவிசுவாசத்தினாலும் விசுவாசத் துரோகத்தினாலும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள் மீது வந்தது உண்மையானால்; கி.மு. 588-ல், தெற்கு ராஜ்யத்தின் அவிசுவாசத்தினாலும் விசுவாசத் துரோகத்தினாலும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள் மீது வந்தது உண்மையானால்; தேவனுக்கு முதுகைக் காட்டி, தங்கள் மேசியாவைச் சிலுவையில் அறைந்த அந்தத் தேசத்தின் மீதும் முதல் நூற்றாண்டில் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும் என்பதை நம்புங்கள்; அது அப்படியே வந்தது. கி.பி. 70-ல் எருசலேம் அழிக்கப்பட்டபோது, அந்நியபாஷை கொடுக்கப்பட்டதன் ஒட்டுமொத்த நோக்கமும் நிறைவேறி, அது திருச்சபையின் பயன்பாட்டிலிருந்து மறைந்து போனது. விசுவாசிக்கும் கிறிஸ்தவனுக்காக அந்நியபாஷையை தேவன் ஒருநாளும் கொடுக்கவில்லை. அது யாருக்குக் கொடுக்கப்பட்டது? தேவனுடைய நியாயத்தீர்ப்பை நம்பாத ‘அவிசுவாசிகளான யூதர்களுக்கு’, தேவன் பேசுகிறார் என்பதன் அடையாளமாகவே அது கொடுக்கப்பட்டது.
(லூக்கா 13:35)-ல் இயேசு, “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” என்றார். இன்னும் ஒருபடி மேலே சென்று, (லூக்கா 21:20)-ல், “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்” என்றும், வசனம் 24-ல், “பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்” என்றும் கூறினார்.
நியாயத்தீர்ப்பு வருகிறது என்பதை இயேசு மீண்டும் மீண்டும் தம்மடைய போதனைகளில் எச்சரித்தார். அப்போஸ்தலர்களின் ஊழியக் காலத்திலேயே அந்த நியாயத்தீர்ப்பு எருசலேமின் மேல் வந்துகொண்டிருந்தது. இயேசு நியாயத்தீர்ப்பைப் பிரசங்கித்தார், அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில் அது ஓர் அடையாளமாக வெளிப்படுத்தப்பட்டது. அதனால்தான், அப்போஸ்தலனாகிய பவுல் ஏசாயா 28-ஆம் அதிகாரத்தை மேற்கோள்காட்டி, ‘நீங்கள் செவிகொடுக்க மாட்டீர்கள்’ என்று கூறுகிறார்.
அந்நியபாஷையின் இந்த நோக்கமானது அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகம் முழுவதும் செயல்படுவதை நாம் காணலாம். அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில் அவிசுவாசிகளான யூதர்கள் பலர் அங்கே இருந்தார்கள். பின்னர், அந்நியபாஷை பேசப்பட்ட மற்ற தருணங்களான 8, 10, 19 ஆகிய அதிகாரங்களில், அவிசுவாசிகளான யூதர்கள் விசுவாசிகளாக மாறினாலும், மீண்டும் மீண்டும் இதே நிகழ்வு நடைபெறுவதைக் கண்ட மற்ற யூதர்கள், தாங்கள் கண்டவற்றையும் நடந்தவற்றையும் தங்களின் சக யூதர்களிடம் நிச்சயம் சொல்லியிருப்பார்கள். அப்போஸ்தலர் 8, 10, 19 ஆகிய அதிகாரங்களில் எங்கெல்லாம் அந்நியபாஷை பேசப்பட்டதோ, அங்கெல்லாம் விசுவாசிக்கும் யூதர்களும் இருந்தார்கள். அவர்கள் திரும்பிச் சென்று, தாங்கள் கண்டதை நிச்சயமாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டிருப்பார்கள். ஆகவே, இது சபையின் புதிய அனுபவங்களைப் பெந்தெகோஸ்தே நிகழ்வோடும் யூதர்களோடும் சம்பந்தப்படுத்துவது மட்டுமல்லாமல், தேவன் உண்மையாகவே நியாயந்தீர்க்கப் போகிறார் என்பதை உறுதிப்படுத்தவும் நடைபெற்றது.
ஆகவே, முதலாவதாக இது சாபத்தின் அடையாளம்; அதே நேரத்தில், இது ஓர் ஆசீர்வாதத்தின் அடையாளமும்கூட. பெந்தெகோஸ்தே நாளில் காணப்பட்ட அந்நியபாஷை நமக்கு உணர்த்துவது என்னவென்றால்: தேவன் இனி ஒரே ஒரு தேசத்தின் மூலமாக மட்டும் செயல்படப் போவதில்லை; தேவன் இனி ஒரே ஒரு மொழியின் மூலமாக மட்டும் பேசப்போவதில்லை. தேவனுடைய நாமம் உலகமெங்கும் செல்லப்போகிறது; அதன் மூலமாக உலகெங்கிலும் அவர் தம்முடைய சபையை ஏற்படுத்தப்போகிறார்.
அவர்கள் அன்று பற்பல பாஷைகளில் பேசியது, இஸ்ரவேலின் தனித்துவம் முடிந்துவிட்டது என்பதையும், உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் நான் பேசப் போகிறேன் என்பதையும், பழைய ஏற்பாட்டில் மறைபொருளாக இருந்த திருச்சபையை இப்போது ஏற்படுத்தப் போகிறேன் என்பதையும் அறிவிக்கவே தேவன் அதை ஏற்படுத்தினார். எனவே, அந்நியபாஷையானது பிரதானமாக இஸ்ரவேலின் மீதான தேவனுடைய சாபத்தின் அடையாளமாகும்.
அந்நியபாஷையின் மூலமாக அகில உலகத்திற்கும் வரும் ஆசீர்வாதத்தையும் நாம் கவனிக்க வேண்டும். முரட்டாட்டமுள்ள மக்கள் கூட்டத்தினரால் கிறிஸ்து நிராகரிக்கப்பட்டதால், கிறிஸ்து தம்முடைய கரங்களை முழு உலகத்திற்கும் நீட்டினார். இஸ்ரவேல் மக்கள் மீதான சாபத்தின் மறுபக்கமாக, உலக மக்களுக்கான ஆசீர்வாதத்தின் அடையாளமாக இது மாறியது. ரோமர் 11-ல் சொல்லப்பட்டுள்ளதைப் போல, ‘இஸ்ரவேல் மக்களின் தள்ளிவிடப்படுதல், உலகத்தின் ஐஸ்வரியமாக மாறியது’. எருசலேம் அழிக்கப்பட்டது, இஸ்ரவேல் தள்ளிவிடப்பட்டது; தேவன் நம்மைத் தெரிந்துகொண்டதால் நாம் அதன் பயனாளிகளாக மாறினோம்.
மூன்றாவதாக, இதோடு பின்னிப்பிணைந்திருக்கிறபடி, இது தேவன் கொடுத்த ஓர் அதிகாரம். வரலாற்றின் இந்த மாபெரும் மாற்றத்தைப் பிரசங்கித்த தூதுவர்கள் யார்? சாபத்தையும் ஆசீர்வாதத்தையும் பிரசங்கித்த தேவனுடைய மனிதர்கள் யார்? இந்த ஆசீர்வாதம் உலகம் முழுவதற்கும் வந்ததை அறிவித்தவர்கள் யார்? அவர்கள் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளுமே அன்றி வேறு யாரும் அல்ல. அவர்கள் தேவனுடைய சத்தியத்தைத் தான் பேசுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தி அங்கீகரிக்கும் விதமாக, இந்த அந்நியபாஷைகளைப் பேசும் வரத்தைத் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார். தேவன் கொண்டுவந்த இந்த மாற்றங்களைப் பார்த்த யூதர்களுக்கு, இது பேரதிர்ச்சியாகவும், இடியாகவும், புரிந்துகொள்ள முடியாததாகவும், அதே நேரத்தில் ஆச்சரியமளிக்கக் கூடியதாகவும் இருந்திருக்கும். எனவே, தேவனே இதைச் செய்தார் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த ஓர் அடையாளம் தேவைப்பட்டது; அதனால்தான் இப்படிப்பட்ட பாஷைகளில் பேசும் வரத்தைத் தேவன் அவர்களுக்கு அருளினார்.
(1 கொரிந்தியர் 14:18)-ல் அப்போஸ்தலனாகிய பவுல், “உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன்” என்கிறார். பவுலுக்கு இருந்த மற்ற வரங்களைப் போல, இதுவும் அவர் ஓர் அப்போஸ்தலர் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருந்தது. மேலும் அவர், (2 கொரிந்தியர் 12:12)-ல் “அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள், எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே” என்றும் கூறுகிறார். அந்த குறிப்பிட்ட காலத்தில், தேவன் கொண்டுவந்த மாற்றத்தைப் பிரசங்கித்தவர்களுக்குத் தேவன் கொடுத்த அதிகாரத்தின் அடையாளமாகவும் அது விளங்கியது.
சுருங்கக்கூறின், அந்நியபாஷையின் நோக்கம்: ‘சாபம், ஆசீர்வாதம், அதிகாரம்’ ஆகியவற்றுடன் நிறைவடைகிறது. இங்கே தனிப்பட்ட ஜெப மொழியாகவோ அல்லது நற்செய்தி அறிவிக்கும் ஒரு பொதுவான வழியாகவோ இதை நாம் பார்ப்பதில்லை. எருசலேம் அழிக்கப்பட்ட ஒரு நாள் வந்தது; புதுயுகத்திற்கான மாற்றம் வந்தது; திருச்சபை பிறந்தது; அதன் பிறகு இந்த வரம் தேவைப்படவில்லை.
உதாரணமாக, நான் சாலையில் திருச்சிக்குச் சென்றுகொண்டிருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். ஒரு இடத்தில் 'திருச்சி 300 கி.மீ' என்ற அறிவிப்புப் பலகையை (அடையாளத்தை) காண்கிறேன். பிறகு '200 கி.மீ', அதன் பின் '100 கி.மீ' என்ற அறிவிப்பைக் காண்கிறேன். ஆனால், திருச்சிக்கு வந்து சேர்ந்த பிறகு நான் எந்தவொரு அறிவிப்புப் பலகையையும் காண்பதில்லை. ஏனென்றால், நான் திருச்சிக்கு வந்துவிட்டேன்; இனி அந்த அடையாளம் எனக்குத் தேவையில்லை.
வசனம் 22-ல், “தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது” என்று பவுல் குறிப்பிடுகிறார். தீர்க்கதரிசனமானது, திருச்சபை யுகத்தில் விசுவாசிகளுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்குப் பயன்படக்கூடியது.
மூன்றாம் வசனத்தில், “தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ, மனுஷருக்குப் பக்திவிருத்தியும் புத்தியும் ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்” என்றும், நான்காம் வசனத்தில், “தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்” என்றும் காண்கிறோம். மேலும், முதல் வசனத்தில் “விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்ன? தேவனுடைய வார்த்தையை மட்டும் பிரசங்கியுங்கள் என்பதுதான்.
நீங்கள் கொரிந்து சபைக்குச் சென்றிருந்தீர்கள் என்றால், நாம் முன்னரே பார்த்தபடி, அங்கே எல்லா வகையான சுயநலமான, சுய மதிப்பை உயர்த்திக் காட்டும் மாயலோக பாஷைகளைக் கேட்டிருப்பீர்கள். அதைத்தான் பவுல், "அவை எல்லாவற்றையும் நிறுத்துங்கள்" என்று கூறுகிறார். அது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, குறிப்பிட்ட காலகட்டத்தில், குறிப்பிட்ட இலக்கை நிறைவேற்றுவதற்காகக் கொடுக்கப்பட்டது. எனவே, நீங்கள் கூடிவரும்போது தேவனுடைய சத்தியத்தைப் பிரசங்கிக்கும் தீர்க்கதரிசனத்தை நாடுங்கள்; முக்கியமாக, தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கியுங்கள் என்று பவுல் கூறுகிறார்.
சரி, "இன்று அந்நியபாஷையின் வரத்தால் எந்தப் பயனும் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்களா?" என்று கேட்டால், ஆம், அந்நியபாஷை வரம் இன்று நமக்குத் தேவையில்லை. ஒருவேளை இந்த வரம் இன்று நம்முடைய திருச்சபைகளில் காணப்படும் என்றால், அது அன்று கொண்டிருந்த அதே நோக்கத்தையே இன்றும் கொண்டிருக்க வேண்டும். அதாவது, தேவன் இஸ்ரவேல் தேசத்திற்கு மாத்திரமல்ல, உலகம் முழுவதற்கும் நற்செய்தியை அனுப்பி, எந்தப் பேதமும் இன்றி எல்லோரையும் இரட்சிக்கிறார் என்ற செய்தியைச் சொல்ல வேண்டும். ஆனால், இந்தச் செய்தியைத் தேவன் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி முடித்துவிட்டார். அதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இதைத் தவிர, நமக்கு வேறெந்த விளக்கமும் தகவலும் தேவையில்லை; அது முடிந்துவிட்டது.
இப்போது சபையாகக் கூடிவரும்போது அதன் நோக்கம் என்ன என்பதைப் பவுல் விளக்குகிறார். வசனம் 23: “ஆகையால்” – கவனித்துப் பாருங்கள், அந்நியபாஷையின் நோக்கம் இப்படி இருக்க – “சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது” (இங்கே உண்மையான அந்நியபாஷையின் வரத்தைக் குறிப்பிடுகிறார்) - என்ன நடக்கும் என்று தெரியுமா? - “கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?”
ஏன் அப்படிச் சொல்வார்கள்? அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:
ஆகவே, ஓர் அவிசுவாசியான புறஜாதியான் கொரிந்து சபைக்குள் நுழையும்போது, "இந்த மக்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்" என்றே சொல்லுவான். இதற்கு ‘mainomai’ என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் ‘வெறிகொண்டவன்’ என்பதாகும். பிளாட்டோ இதைக் குறிப்பிடும்போது, "புறஜாதியார் தங்கள் தேவர்களுடன் ஐக்கியம்கொண்டு பரவச நிலை அடைந்து, உளறிப் பேசுவதைக் குறிக்கப் பயன்படும் வார்த்தை இது" என்கிறார். எனவே, அவிசுவாசியான புறஜாதியானோ அல்லது யூதனோ உங்கள் சபைக்குள் நுழையும்போது, இதற்கும் தியானாள் கோயிலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றுதான் சொல்வார்கள்.
"இது அவர்களுக்கு ஓர் அடையாளமாகச் செயல்பட வேண்டுமே?" என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாகச் செயல்பட வேண்டும்; ஆனால், உண்மையான அந்நியபாஷை வரம்கூடத் தவறாகப் பயன்படுத்தப்படும்போது, அது எந்த அர்த்தத்தையும் கொடுப்பதில்லை. கவனித்தீர்களா? இந்த குறிப்பிட்ட வரமானது ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட முறையில், சம்பந்தப்பட்ட நபர் அருகில் இருக்கும்போது, அந்தத் தனித்துவமான நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.
வசனங்கள் 24, 25-ல், “எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான். அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்கு
இங்கே உள்ள வரிசையைக் கவனியுங்கள்:
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்தால், அதன் விளைவாக உண்டாகும் உண்மையான மனந்திரும்புதலைக் காண்பீர்கள் என்று பவுல் கூறுகிறார்.
26-ஆம் வசனத்தில் கொரிந்து திருச்சபையில் காணப்பட்ட கூச்சல் குழப்பத்தின் சுவாரசியமான காட்சியை நாம் காணலாம். ஒரு ஞாயிற்றுக்கிழமை கொரிந்து சபையின் ஆராதனையில் கலந்துகொண்டால், பின்வரும் காட்சியை நீங்கள் காண முடியும்: “நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கட தமிழ் வேத புத்தகத்தில் ‘ஒருவன்’ என்று சொல்லப்படுகிற வார்த்தை, ஆங்கில வேதப் புத்தகத்தில் ‘ஒவ்வொருவனும்’ (Everyone) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உங்கள் சபையின் கூச்சல் குழப்பத்தை அறிந்திருக்கிற நீங்கள், இவைகள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் செய்கிறீர்கள்; இது உங்களுக்கு முட்டாள்தனமாகத் தெரியவில்லையா?
இது அவர்களின் அந்நியபாஷைக் குழப்பத்தைச் சரி செய்வதற்காக விடுக்கப்படும் அழைப்பு அல்ல; மாறாக, அவர்கள் சபையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைப் பவுல் பட்டியலிடுகிறார். இத்தனை கூச்சல் குழப்பங்களா அங்கு நிலவியது என்பதை நம்மால் நம்பவே முடியவில்லை. ஒவ்வொருவரும் தங்களை முன்னிலைப்படுத்த முயற்சி செய்தார்கள்; ஒவ்வொருவரும் தங்கள் வரத்தை (தன்னிச்சையாகப்) பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்; போலியான அந்நியபாஷை பேசியவர்களும் அங்கே கத்திக்கொண்டிருந்தார்கள். இதனால், அங்கே யாரும் பக்திவிருத்தி அடைவதற்கு வழியில்லாமல் இருந்தது. உண்மையில், அவிசுவாசிகள் யாராவது அங்கே வரும்போது, "இவர்களுக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது" என்று முடிவே கட்டிவிடுவார்கள்.
இந்த 26-ஆம் வசனத்தை நாம் சற்று விவரமாகப் பார்க்கலாம்: “நீங்கள் கூடிவந்திருக்கிறபோது” - இது சபை கூடிவருதலைக் குறிக்கிறது. அப்போது, ஒவ்வொருவனும் ‘சங்கீதம்’ பாடுகிறான். நீங்கள் பழைய ஏற்பாட்டில் உள்ள சங்கீத புத்தகத்தை நினைக்கலாம், அது தவறு என்று சொல்ல முடியாது; யாராவது ஒருவர் ஒரு சங்கீதத்தை வாசிக்க விரும்பியிருக்கலாம். ஆனால், அதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, ஒரு ‘பாடல்’ என்பதையே குறிக்கிறது; அதாவது, இசைக்கருவிகளுடன் பாடப்படும் ஒரு பாடலைக் குறிக்கிறது. அங்கே என்ன நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றால், ஒவ்வொருவரும் ஒரு தனிப் பாடலை, ஒரே நேரத்தில் பாடிக் கொண்டிருந்தார்கள்.
இப்போது அங்கே நிலவிய இரைச்சலைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். சிலர் அங்கே ஒரே நேரத்தில் வெவ்வேறு தனிப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அங்கே இசைக்கருவியை வைத்திருந்தவர்கள், யாராவது ஒருவருக்குத் தனித்தனியாக வாசித்துக் கொண்டிருந்தார்கள். இன்னொருவர் ஒரு மூலையில் யாருக்காவது போதனை செய்து கொண்டிருந்தார். இதையெல்லாம் ஒழுங்குபடுத்த அங்கே யாரும் இருக்கவில்லை!
பாடல் பாடுதல் என்பது கிறிஸ்தவ ஆராதனையின் ஓர் அங்கமாக எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. அது பிற்காலத்தில் திருச்சபையில் சேர்க்கப்பட்டது அல்ல; ஆதி திருச்சபையின் நாட்களிலிருந்தே பாடல் பாடுவது வழக்கமான ஒன்றுதான். அது ஒரு சிறந்த ஆவிக்குரிய அனுபவமும் கூட. ஆனால், கொரிந்து சபையிலோ அது பெருமை பாராட்டுவதற்கான ஒரு காரியமாக மாறியது. ஒவ்வொருவரும் எழுந்து பாட்டுப் பாடி, தங்களைத் தாங்களே மேன்மையானவர்களாகக் காட்டிக்கொள்ள விரும்பினார்கள்.
இது போதாக்குறைக்கு இப்போது, “ஒவ்வொருவனும் போதகம் பண்ணுகிறான்”. இது ஏதோ ஒன்றைப் பிரசங்கிப்பதைக் குறிக்கிறது. போதிக்கும் வரத்தைப் பயன்படுத்த விரும்பியவர்களும், தான் அடுத்த போதகராக வேண்டும் என்று நினைத்தவர்களும் எழுந்து நின்று, தங்களுக்கு அருகில் உள்ளவர்களுக்குப் போதிக்க ஆரம்பித்தார்கள். அங்கே ஒரு 150 பேர் ஆளுக்கு ஒரு தனிப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்; வேறொரு 150 பேர் அங்கே போதகம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். சுருக்கமாகச் சொன்னால், அவர்களால் என்னென்ன செய்ய முடியுமோ, அதையெல்லாம் (ஒரே நேரத்தில்) செய்துகொண்டிருந்தார்கள்.
கிரேக்க வேதாகமத்தில் அடுத்ததாக, “ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பாடல் மற்றும் தனிப்பிரசங்கம் ஆகிய கூச்சல்களுக்கிடையில், இப்போது ஒரு கூட்டம் எழுந்து நின்று, ‘கர்த்தர் சொல்லுகிறார்’ என்று தேவன் தங்களுக்குக் கொடுத்ததாக நினைத்த வெளிப்பாட்டைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவை எல்லாவற்றுடனும், அங்கே ஒரு சிலர் அந்நியபாஷையிலும் பேசிக் கொண்டிருந்தார்கள். இவைகளையெல்லாம் ஒரே சமயத்தில் அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள்; சிலர் அங்கே வியாக்கியானமும் செய்து கொண்டிருந்தார்கள். இதனால், யார் செய்த வியாக்கியானம் சரி என்பதில் சண்டைகளும் நடந்திருக்கும். கொரிந்து திருச்சபையில் இருந்த ஆராதனை முறைமை இப்படித்தான் இருந்தது.
இருபத்தி ஆறாம் வசனத்திற்கு ஒரு குறிப்பைச் சேர்க்க விரும்புகிறேன். “ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான்” - எங்கெல்லாம் ‘ஒருமையில்’ அந்நியபாஷை என்ற வார்த்தையைக் காண்கிறோமோ, அது பொய்யான அந்நியபாஷையின் வரத்தைக் குறிக்கிறது என்று ஏற்கனவே நாம் பார்த்தோம். ஆனால், இந்த வசனத்தில் அது பொய்யான அந்நியபாஷையின் வரத்தையும் குறிக்கலாம் அல்லது உண்மையான அந்நியபாஷையின் வரத்தையும் குறிக்கலாம். ஏனென்றால், இங்கே உங்களில் ஒருவன் என்று ‘ஒரு நபர்’ பேசும் அந்நியபாஷையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நபர் உண்மையான அந்நியபாஷையின் வரத்தைப் பயன்படுத்தினாலும், ஒரே நேரத்தில் பல அந்நியபாஷைகளைப் பேச முடியாது. அதாவது, இதை இப்படியாக மொழியாக்கம் செய்யலாம்: ‘உங்களில் ஒருவன் போலியான பரவச பாஷை பேசிக் கொண்டிருக்கிறான், மற்றொருவன் உண்மையான அந்நியபாஷையைப் பேசிக் கொண்டிருக்கிறான்’. இங்கே பெயர்ச்சொல் ஒருமையில் இருப்பதால், அதற்குப் பின்வரும் வார்த்தையும் ஒருமையில் இருக்கிறது. இதே விதிமுறை 27-ஆம் வசனத்திற்கும் பொருந்தும். இது, எந்த வகையிலும் நாம் இந்த வேத பகுதியை விளக்குவதற்கு எடுத்துக்கொண்ட ‘ஒருமை, பன்மை’ விதிமுறையை மீறுவதாக இல்லை.
இப்போது இந்த கூச்சல் குழப்பத்தைத் தடுத்து நிறுத்தும்படியாக 26-ஆம் வசனத்தில் பவுல், “சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது” என்று சொல்லுகிறார். இந்த முழுப் பிரச்சினைக்கும் தீர்வுகாண, ஒரு திருச்சபையாக நீங்கள் மற்றவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு எது பயனுள்ளதோ அதைச் செய்யுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.
கொரிந்து திருச்சபையின் ஆராதனையை ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவர, பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலனாகிய பவுல் மூலமாக நான்கு முக்கிய காரியங்களைச் சொல்லுகிறார். அந்நியபாஷை மற்றவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டுமானால், அதன் நடைமுறை விதிகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.
வசனம் 27: “யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால்”, இங்கே ‘யாராவது’ என்ற பதம் ஒரு நபரைக் குறிப்பதால், அதைத் தொடர்ந்து வரும் ‘அந்நியபாஷை’ என்ற வார்த்தையும் ஒருமையில் வருகிறது. மேலும், ஒரு குறிப்பையும் நான் இங்கே சேர்க்க விரும்புகிறேன்; KJV மொழிபெயர்ப்பில் இந்த வசனத்தில் ‘Unknown’ (அறியப்படாத) என்ற வார்த்தையையும் சேர்த்துள்ளனர். ஆனால், இங்கே அவர்கள் இந்த வார்த்தையைச் சேர்த்திருக்கக் கூடாது என்பது என் கருத்து. ஏனென்றால், இங்கே அப். பவுல் உண்மையான அந்நியபாஷையைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். இங்கே ஒரு குறிப்பிட்ட நபர், ஒரு குறிப்பிட்ட பாஷையில் பேசுவதையே இது குறிக்கிறது.
அப். பவுல் இங்கே உண்மையான அந்நியபாஷையின் வரத்தைத்தான் குறிப்பிடுகிறார் என்று நான் கூறுவதற்கு இரண்டாவது காரணம்: பவுல் ஒருநாளும் பரவச உளறல் பாஷையைத் திருச்சபையில் ஒழுங்குபடுத்த மாட்டார். அவர் உண்மையான அந்நியபாஷை வரத்தை மட்டுமே ஒழுங்குபடுத்துவார். இப்போது, “யாராவது” - உண்மையான - “அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டு பேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்று பேர்மட்டில் அடங்க வேண்டும்”. முதல் விதி: இந்த வரம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
உண்மையான அந்நியபாஷையின் வரத்தைக் கொண்ட ஒரு விசுவாசி சபையில் இருக்கும்போது, அந்தச் சபையில் ஒரு குறிப்பிட்ட அந்நியபாஷையை (வெளிநாட்டு மொழி) பேசும் அவிசுவாசியான யூதன் யாராவது அங்கே வந்திருந்தால், அதை அறிந்த சபையில் உள்ள ஒருவர், அதை அந்நியபாஷை வரம் கொண்ட விசுவாசிக்குத் தெரியப்படுத்துவார். இப்போது அந்த நபர் சுற்றிப்பார்த்து, ‘இங்கே அந்தப் பாஷையை வியாக்கியானம் செய்யும் நபரும் இருக்கிறார்’ என்று உறுதி செய்வார். இப்போது சரியான இடத்தில், சரியான தருணத்தில், உண்மையான அந்நியபாஷை வரத்தைக் கொண்டிருந்த நபர், தான் அறியாத, ஆனால் அங்கு இருக்கும் யூத அவிசுவாசிக்குப் புரியும் அந்த அந்நியபாஷையைப் பேசுவார். இதனால், தேவனுடைய செய்தி அந்த யூத அவிசுவாசிக்குச் சென்றடையும். மேலும், திருச்சபையும் பயன்பெறும் விதமாக, அதை வியாக்கியானம் செய்யும் வரத்தை உடைய நபர் திருச்சபைக்கு அதை விளக்குவார்; ஆகவே, மொத்த திருச்சபையும் பயன்பெறும். இப்படியாக இந்த வரம் ஓர் ஒழுங்குடன் பயன்படுத்தப்பட வேண்டும்.
பிரியமானவர்களே, இப்பொழுது பெந்தேகோஸ்தே சபைகளில் காணப்படும் அந்நியபாஷைக் குழப்பத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். அவர்களுக்கு இந்த ஒழுங்கு எதுவுமே தேவையில்லை. அங்கே அவிசுவாசியான யூதர் இருக்கிறாரா இல்லையா என்பதெல்லாம் அவர்களுக்குக் கேள்வியே இல்லை; அது உண்மையான அந்நியபாஷையா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை; அங்கே இரண்டு அல்லது மூன்று பேர்தான் பேசுகிறார்களா என்பதையும் அவர்கள் சட்டை செய்வதே இல்லை. இப்போது பெந்தேகோஸ்தே சபைகளில் நாம் பார்க்கும் அந்நியபாஷைக் குழப்பம், அன்று கொரிந்து சபையில் காணப்பட்ட அதே கூச்சல் குழப்பத்திற்கே நம்மை இட்டுச் செல்கிறது.
இரண்டாவது விதி: “அது இரண்டு அல்லது மூன்று பேர் மட்டில் பேசப்பட வேண்டும்”. கிரேக்கத்தில் ‘மட்டில்’ என்ற வார்த்தையானது, ‘முறை’, ‘ஒழுங்கு’ அல்லது ‘வரிசை’ (ஒன்றன்பின் ஒன்றாக) என்ற பொருளில் வருகிறது. நாம் ஏற்கனவே பார்த்தபடி, கொரிந்தியர்கள் இந்த ஒழுங்கெல்லாம் இல்லாமல், எல்லோரும் ஒரே நேரத்தில் பேசினார்கள். இதற்கு வேதாகமத்தில் அனுமதி இல்லை. மேலும், இதே போன்ற நிலையைத்தான் இன்றைய பெந்தேகோஸ்தே சபைகளிலும் காண்கிறோம்.
இருபத்தி ஏழாம் வசனத்தின் இறுதியில் மூன்றாவது விதி குறிப்பிடப்பட்டுள்ளது: “ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்”. இங்கே ‘ஒருவன்’ என்பதைக் குறிக்கப் பயன்படும் கிரேக்க பதம், ‘ஒரே ஒருவர் மட்டுமே’ அதைச் செய்ய வேண்டும் எனும் அர்த்தத்தில் வந்துள்ளது. அதாவது இரண்டு பேரோ, ஐந்து பேரோ அல்ல; ஒரே ஒருவர் மட்டுமே செய்ய வேண்டும். ஏனென்றால், கொரிந்து திருச்சபையில் காணப்பட்ட குழப்பத்தின்படி, அங்கிருந்த ஒவ்வொருவரும் வியாக்கியானம் செய்து, தங்களை மற்றவர்களைவிட ஒருபடி மேலானவர்களாகக் காட்டிக்கொள்ள விரும்பினார்கள். யாருடைய வியாக்கியானம் சரி என்பதில் அங்கே பெரிய சண்டையே நடந்தது. ஆகவே, ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே வியாக்கியானம் செய்ய வேண்டும் என்று கூறி, அப்போஸ்தலனாகிய பவுல் அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
இப்போது, அங்கே வியாக்கியானம் செய்கிறவர் இல்லாவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வசனம் 28-ல் நான்காவது விதி கொடுக்கப்பட்டுள்ளது: “அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்”. அந்நியபாஷை வரத்தைப் பெற்ற ஒருவர் சபையில் இருக்கிறார்; அவிசுவாசியான யூதரும் அங்கே இருக்கிறார்; எனவே, அந்நியபாஷையில் பேச அது ஒரு சரியான இடமும் நேரமும்தான். ஆனால், அதை வியாக்கியானம் செய்ய அங்கே ஒருவரும் இல்லை என்றால், அந்தச் சூழ்நிலையில் அமைதியாக அமர்ந்து, தனக்கும் தேவனுக்கும் மட்டுமே தெரியும்படி தியானம் (அல்லது ஜெபம்) செய்ய வேண்டும்.
தமிழ் வேதாகமத்தில், “தனக்கும் தேவனுக்கும் தெரிய பேசக்கடவன்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது, ஏதோ அந்நியபாஷையைத் தனக்கும் தேவனுக்கும் இடையில் பேச வேண்டும் என்கிற அர்த்தத்தைத் தருவது போல் தோன்றலாம். ஆனால், KJV (King James Version) வேதாகமத்தில், ‘let him speak to himself, and to God’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் உண்மையான அர்த்தம், 'அமைதியாகத் தியானம் செய்' என்பதாகும்.
"ஏன்? அது இப்போது அவருக்கு நற்செய்தி அறிவிக்கும் கருவியாகப் பயன்படுமே!" என்று நீங்கள் கேட்கலாம். ஆம், அது உண்மைதான். ஆனால், எல்லாரும் ஆவிக்குரிய வளர்ச்சி (Edification) பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே திருச்சபை கூடிவருகிறது. எனவே, வியாக்கியானம் செய்பவர் இல்லாவிட்டால், அந்த நோக்கம் அங்கே நிறைவேறாது. அதனால்தான், சபையில் சத்தமாகப் பேச வேண்டாம் என்று பவுல் கூறுகிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் இதுவரை பார்த்த விளக்கங்களின் அடிப்படையில், இன்று பெந்தெகொஸ்தே சபைகளில் பேசப்படும் அந்நியபாஷையை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய அவசியம்கூட இல்லை; மேலோட்டமாகப் பார்த்தாலே போதும், அதற்கும் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்நியபாஷைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை நீங்கள் எளிதாகக் கண்டுகொள்ளலாம்.
முழு வேதாகமத்தின் அடிப்படையிலும், கொரிந்து திருச்சபை மற்றும் கிரேக்க-ரோம கலாச்சார பின்னணியிலும் வைத்து, 1 கொரிந்தியர் 14-ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள அந்நியபாஷை வரத்தைக் குறித்து நாம் தியானித்திருக்கிறோம். இதன் மூலம், வேதாகமத்தில் உண்மையாகவே என்ன நோக்கத்தில் அந்நியபாஷை வரம் கொடுக்கப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளப் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வாராக!
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.