ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானது என்ன?
ஆசிரியர்: H. ரெபேக்கா
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 4 நிமிடங்கள்

இன்றைக்கு பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மனநிறைவையும் தங்களின் சுய நோக்கங்களுக்குகாக வாழ்வதையும் முன்பு எப்போதுமில்லாத அளவுக்குத் தேடுகிறார்கள். பழைய பாரம்பரியங்களும் செயல்களும் கேள்விகேட்கப்பட்டு அவை விவாதிக்கப்படுகின்றது. இப்படி காலம் இருக்கும் போது மெய்யாகவே ஒரு பெண் தனது உண்மையான மதிப்பையும், நிறைவையும், மகிழ்ச்சியையும் எங்கே கண்டுபிடிக்கலாம் என்பதை பார்ப்போம்.

நான் ஒரு ஆளுநரின் மகளாக, செல்வமும் புகழும் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்தேன். பள்ளியிலும், கல்லூரி நாட்களிலும் பல கௌரவங்களும் உலகியலான சொத்துகளும் எனக்கிருந்தன. பின்னர் நான் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தேன். ஒரு கால்பந்து வீரரை திருமணம் செய்தேன், எனக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். இருந்தபோதும் இன்னுமும் எனது ஆழமான & அவசியமான தேவைகள் பூர்தி செய்யப்படவில்லை.

மெய்யாகவே ஒரு பெண்ணின் ஆழமான தேவைகள் என்ன? அவை எவ்வாறு பூர்த்தி செய்யப்பட முடியும்?

தேவனே பெண்ணை உருவாக்கியவராக இருப்பதால், அவரே அவளின் ஆழமான தேவைகளை அறிந்திருக்கிறார். மேலும் அவரால் மட்டுமே அவற்றைப் பூர்த்தி செய்ய முடியும்.

பெண்ணுக்கு தேவையானது அன்பு

 தேவன் மட்டுமே நிபந்தனையற்ற, தன்னலமற்ற தியாகம் செய்யும்படியான அன்பை வழங்க முடியும். அவரே அவளின் உயர்ந்த நன்மையைக் கருத்தில் கொண்டு அன்பு காட்டியவர். வேதம் நமக்கு இவ்வாறு கூறுகிறது: "நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் (கோபநிவாரணம்) தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது." (1 யோவான் 4:10).

பெண்ணுக்கு தேவையானது பாதுகாப்பு

பெரும்பாலும் ஒரு பெண்ணின் பாதுகாப்பானது பணத்திலும், அவளது கணவனிடத்திலும், உலகில் அவளின் சொந்த வெற்றியின் அடிப்படையிலும் இருக்கின்றது. ஆனால் இவை அனைத்தும் மாறக்கூடியவை. தேவன் ஒருபோதும் மாறமாட்டார். "இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" (எபிரெயர் 13:8). உண்மையான பாதுகாப்பை அவர் மட்டுமே நமக்கு தரக்கூடியவர்.

பெண்ணுக்கு தேவையானது அமைதி

உலகம் பதற்றங்களாலும், மாற்றங்களாலும் நிரம்பியிருக்க, ஒரு பெண் எப்படி உள்ளத்திலான அமைதியைப் பெற முடியும்? வெளிப்புற சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் உள்ளான சமாதானத்தை இயேசு கிறிஸ்து மட்டுமே வழங்க முடியும். அவர் மூலம் நாம் தேவனோடு சமாதானம் பெற முடியும். “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.” (யோவான் 14:27).

பெண்ணுக்கு தேவையானது அவளின் நோக்கம்

தேவன் எல்லா பெண்களையம் ஒரே மாதிரி படைக்கவில்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவன் அர்த்தமும் நோக்கமும் நிறைந்த ஒரு தனித்துவமான திட்டத்தைக் கொண்டிருக்கிறார். அவருடைய சித்தத்திற்கு உட்பட்டு, அவருடைய வார்த்தையின்படியும், நமது சொந்த தாலந்துகள் மற்றும் திறமைகளுக்கு ஏற்ற நமது வாழ்க்கையின் நோக்கத்தை திட்டமிட்டுருக்கிறார். "உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்." (நீதிமொழிகள் 3:6).

பெண்ணுக்கு தேவையானது சுயமதிப்பு

உலகம் ஒருவரின் அழகு, புத்திசாலித்தனம் மற்றும் பதவியை பார்த்து அவர்களை மதிக்கிறது. வேத வார்த்தைகள் சொல்கிறது, "... மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்." (1 சாமுவேல் 16:7). கர்த்தருடைய கண்களில் நாம் மதிக்கப்பட நாம் நமது வாழ்க்கையை அவரிடம் ஒப்படைப்பதும், அவர் நம்மில் வளர்த்தெடுக்கும் குணங்கள் மற்றும் நமது வாழ்க்கையின் குணாதிசயங்களை அடிப்படையாகக் கொண்டது.

தேவனுடனான உறவு

வேதம் கூறுகிறது, ஆதாம் கீழ்ப்படியாமல் செய்த பாவத்தின் காரணமாக, தேவனுடனான நல்ல உறவு முறிந்துவிட்டது. எனவே, நாம் அனைவரும் பாவிகளாகப் பிறந்திருக்கிறோம். "இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்." (சங்கீதம் 51:5). "எல்லாரும் பாவஞ்செய்து, தேவனுடைய மகிமைக்குக் குறைவாயிருக்கிறார்கள்." "பாவத்தின் சம்பளம் மரணம்." (ரோமர் 3:23; 6:23).

தேவன் பரிசுத்தமானவராக இருப்பதால், அவர் பாவிகளான மனிதர்களுடன் உறவு வைத்திருக்க முடியாது. "இந்தப் பரிசுத்த தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கக்கூடியவன் யார்?" (1 சாமுவேல் 6:20). ஏனெனில் அவர் பார்வையில் உயிரோடிருக்கிற மனுஷனில் ஒருவனும் நீதிமானில்லை. (ரோமர் 3:20).

அநேகர் இன்று தேவனை திருப்திப்படுத்த முயற்சிப்பதன் மூலமும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதன் மூலமும், தேவாலயத்திற்குச் செல்வதன் மூலமும், இயேசு மனிதனாக வந்தார் என்று நம்புவதன் மூலமும் தேவனோடு சரியான உறவு ஏற்படுகிறது என்று நினைக்கிறார்கள். வேதம் கூறுகிறது, "எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்" (யாக்கோபு 2:10). வேதம் மேலும் கூறுகிறது, நமது எல்லா நல்ல கிரியைகளும் அவருக்கு அசுத்தமான துணிகளாகும் (ஏசாயா 64:6). தேவனை திருப்திப்படுத்த எவரும் போதுமான அளவு நன்மை செய்ய முடியாது. அவருடைய தரநிலை முழுமையானது. தேவனை திருப்திப்படுத்த போதுமான ஒரே நபர் இயேசு கிறிஸ்து மட்டுமே. அவர் பூமிக்கு வந்து, தேவனின் நீதிச்சட்டத்தை முழுமையாய்  கைக்கொண்டார்; பின்னர், ஒரு சரியான பிரதிநிதியாக, பாவிகள் தங்கள் பாவத்திற்காக தேவனுக்கு செலுத்த வேண்டிய விலையை செலுத்த சிலுவையில் மரித்தார்."ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்;" (1 பேதுரு 3:18).

ஒருவேளை இந்த விஷயங்களை நீங்கள் வாழ்நாள் முழுவதும் கேட்டிருக்கலாம், மேலும் அவை உண்மை என்றும் நம்பலாம். அதேநேரம் இந்த விஷயங்களைக் கேட்டு அவை உண்மை என்று நம்புவது மட்டும் உங்களுக்கு தேவனுடன் சரியான உறவைக் கொண்டுவராது.

முதலில், உங்கள் பாவத்தை ஒப்புக்கொண்டு, நீங்கள் ஒரு பாவி என்றும், அவரிடமிருந்து பிரிந்து நரகத்திற்கு நியமிக்கப்பட்டவர் என்றும் தேவனிடம் ஒப்புக்கொள்ள வேண்டும் (லூக்கா 18:13).

இரண்டாவதாக, உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டும் (அப்போஸ்தலர் 17:30), அதாவது "அவை தேவனுக்கு விரும்பத்தகாதவை என்பதால் அவற்றை வெறுத்து விட்டுவிட வேண்டும்."

மூன்றாவதாக, கிறிஸ்துவால் மட்டுமே தம்முடைய மரணத்தின் மூலம் தேவனின் நீதியைத் திருப்திப்படுத்தவும், தேவனுடைய கோபத்தைத் தணிக்கவும் முடிந்தது என்பதை உணர வேண்டும். அவர் மூலம் மட்டுமே உங்கள் பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட்டு இரட்சிக்கப்பட முடியும் (1 தீமோத்தேயு 2:5-6).

நான்காவதாக, கிறிஸ்துவை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும், அதாவது உங்கள் பாவங்களிலிருந்து உங்களை இரட்சிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் மனதார விசுவாசித்து, அவரிடம் உங்களை ஒப்படைத்து, வாழ்நாள் முழுவதும் அவரைப் பின்பற்ற வேண்டும் (ரோமர் 10:13).

தனிப்பட்ட முறையில் எனக்கு உலகப் பொருளாதாரம் பாதுகாப்பாக இருந்தாலும், நான் இயேசு கிறிஸ்துவிடம் என் வாழ்க்கையை ஒப்படைக்கும் வரை, என் இதயத்தின் ஆழமான தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. அவரில் மட்டுமே, அவரின் சித்தத்தில் உட்பட்டே என் வாழ்க்கைக்கான உண்மையான மகிழ்ச்சி உள்ளது என்பதை கண்டு கொண்டேன். நீங்கள் உங்கள் பாவத்திலிருந்து மனந்திரும்பி, உங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தால், உண்மையான மன்னிப்பையும், தேவனோடு சமாதானத்தையும் மற்றும் நித்தியஜீவனையும்  பெற்றுக்கொள்வீர்கள். (யோவான் 3:16).

நீங்கள் ஒரு உண்மையான கிறிஸ்தவர்தான என்பதை எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்?

பொறுமையாக அதேநேரம் உறுதியாக உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். ஏனென்றால் வேதம் கூறுகிறது, ஒருவர் கிறிஸ்துவில் இருக்கும்போது "அவன் ஒரு புதிய சிருஷ்டி" (2 கொரிந்தியர் 5:17). நீங்கள் தேவனையும் அவருடைய வார்த்தையையும் நேசிக்கத் தொடங்குவீர்கள். நீங்கள் அவருடைய மக்களையும் திருச்சபையையும் நேசிப்பீர்கள். ஜெபத்தில் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற ஒரு இருதய வாஞ்சை உங்களுக்கு இருக்கும். நீங்கள் பாவத்தை வெறுத்து, அவரைத் திருப்திப்படுத்த விரும்புவீர்கள். (1 யோவான் 2:3,4).

நீங்கள் உண்மையாக இதயத்தோடு கிறிஸ்துவை விசுவாசித்தால், உங்கள் மிகப்பெரிய தேவை பூர்த்தி செய்யப்பட்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். நீங்கள் அவருடைய கிருபையிலும் அறிவிலும் வளரும் போது, அவர் உங்கள் வாழ்க்கையின் மற்ற தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வார் (மத்தேயு 6:33). "நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே" (எபிரெயர் 13:5). அவரில் நீங்கள் ஜீவத்தண்ணீரைக் கண்டுபிடிப்பீர்கள், மேலும் நீங்கள் ஒருபோதும் தாகமடைய மாட்டீர்கள். (யோவான் 4:14) பரலோகம் உங்கள் நித்திய வீடாக இருக்கும். (யோவான் 14:2-3)

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.