ஆசிரியர்: வால்டர் இ. ஐசன்ஹோர் (1889-1976)
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 4:30

 

Young Women and Discretion

(வேதம் காண்பிக்கும் தேவபக்தியுள்ள பெண்ணின் அடையாளம்)

வயதான பெண்களும் பரிசுத்தத்திற்கு ஏற்ற நடத்தையில் இருக்க வேண்டும்... தேவவசனம் துக்கப்படாதபடிக்கு இளம் பெண்கள் தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும், கற்புள்ளவர்களாகவும் இருக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்...  தீத்து 2: 3-5

தீத்து 2:5-ல், முதிர்வயது பெண்கள் இளம் பெண்களுக்கு "விவேகமுள்ளவர்களாக" இருக்கச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. விவேகம் என்பது என்ன? விவேகம் என்பது மதிநுட்பத்துடன் எச்சரிக்கையோடு நல்ல தீர்மானங்களை எடுத்து, தனது நடத்தையிலும் சுய-கட்டுப்பாட்டிலும் ஞானத்தோடு செயல்படுவதாகும்.

இந்தப் பண்புகளை தனது எண்ணத்திலும், இதயத்திலும், ஆத்துமாவிலும், ஆவியிலும், வாழ்க்கையிலும் கொண்டிருக்கும் ஒரு இளம் பெண், பாவத்தின் இழிவான தன்மைகளுக்கு மேலே உயர்ந்தவளாக இருக்கிறாள். அவளுடைய வாழ்க்கை கன்னியமாய், அழகுள்ளதாய், மற்றவர்களுக்கு பயனுள்ளதாயும், உன்னதமாகாவும் இருக்கும். தன் கணவனும், குழந்தைகளும் மற்றும் அண்டைவீட்டாரும் பின்பற்றத்தக்க முன்மாதிரியாக அவள் விளங்குகிறாள். அவளுடைய வாழ்க்கை கிறிஸ்துவோடு தேவனில் மறைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் அறிவார்கள்.

அவள் தேவனின் ஆவியைப் பெற்றிருப்பதால், நன்மையும் தீமையையும் வேறுபடுத்திப் பார்க்கும் அறிவு பெற்றிருக்கிறாள். பாவமான வழிகளிலிருந்து தன்னை தூரமாக வைத்துக்கொள்கிறாள். அதேபோன்று, தன் கணவன் மற்றும் குழந்தைகளை சூழ்ந்திருக்கும் தீமைகள், தவறுகள், பாவங்கள் மற்றும் துன்மார்க்கங்களிலிருந்து பாதுகாக்கிறாள். குறைந்தபட்சம், அவர்களை எச்சரித்து, ஜாக்கிரதைப்படுத்தி, உயர்ந்த, சிறந்த, பரிசுத்தமான மற்றும் அழகான வாழ்க்கையில் மதிப்புமிக்க விஷயங்களை அவர்களுக்குக் காட்டுகிறாள்.

விவேகமுள்ள பெண் "நற்பலனுக்கான நல்ல வழிமுறைகளை" தேர்ந்தெடுக்கும் ஆவியும் திறனும் கொண்டவள். நிச்சயமாக நல்ல வழிமுறைகள் அவளையும் குடும்பத்தையும் ஒரு நல்ல முடிவுக்குக் கொண்டுவருவதைக் நன்கு அறிந்தவள். தனது வாழ்க்கைகும், குணத்திற்கும், ஆத்துமாவிற்கும், செல்வாக்குக்கும் கேடு விளைவிக்கும் எந்த வழிமுறைகளையும் தவிர்க்கிறாள். தன் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் விட்டொதுக்குகிறாள். வாழ்க்கையில் தான் எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றும் பல ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தவள். நல்ல முடிவுகள் நல்ல வழிமுறைகளால் மட்டுமே வரும் என்பதை அறிந்தவள். நற்செயல்கள் நற்பலன்களையும், தீய செயல்கள் தீய பலன்களையும் முடிவில் தரும் என்பதை உணர்ந்தவள். ஆதலால் நல்லதை தன் உள்ளத்தில் ஏற்று, தீயதை வெறுத்து ஒதுக்குகிறாள். இவ்வாறு வாழும் அவள் உண்மையான விவேகமுள்ளவள். அவளை அறிந்தவர்கள் உண்மையாகவே ஞானமுள்ள பெண்மணி என்று அவளைப் போற்றுகிறார்கள்.

அவளுடைய விவேகத்தில் முன்னெச்சரிக்கையும் அடங்கும். அவள் தன்னுடைய நடத்தை, செல்வாக்கு, இலக்குகள், திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் ஆகியவை குறித்து கவனமாக இருக்கிறாள். தன்னுடைய வார்த்தைகள், கோபம், ஆடை ஆகியவற்றில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறாள். அவள் ஆடையில் கண்ணியமானவள், நடத்தையில் நேர்மையானவள், மற்றவர்களை நல்ல வழியில் நடத்துவதில் கவனமாக இருக்கிறாள். வீட்டில் செலவில் சிக்கனம் கடைப்பிடிப்பவள். எதுவும் வீணாகாமல் பார்த்துக்கொள்கிறாள். தன்னுடைய வருமானத்திற்குள் வாழ்க்கை நடத்துபவள். ஆடம்பரம் என்பது அவளிடமிருந்து வெகு தொலைவில் இருக்கும். கஞ்சத்தனம் என்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவள். கொடுக்கும் இயல்பு கொண்டவளாயினும், பணம் முட்டாள்தனமாகச் செலவழிப்பதை தவிர்க்கிறாள். உணவு, உடை போன்றவை வீணாகாமல் பாதுகாக்கிறாள். அவள் பயன்படுத்தக்கூடிய எந்த பொருளையும் குப்பையாக எறியாமல் பார்த்துக்கொள்கிறாள்.

அவள் உண்மையுள்ள தசமபாகம் கொடுப்பவள். நிச்சயமாக ஒவ்வொரு கிறிஸ்தவப் பெண்ணும் தசமபாகம் கொடுக்க வேண்டும். தசமபாகம் கொடுப்பவரை தேவன் எப்போதும் ஆசீர்வதிப்பார். பெண்கள் தங்கள் வருமானத்தில் உண்மையாக தசமபாகம் கொடுப்பது மட்டுமல்லாமல், ஆண்களும் அவ்வாறே செய்ய வேண்டும். இது நமது வாழ்க்கையில் தேவனின் நிதித் திட்டம். இது எப்போதும் நமது வருமானத்தில் தேவனின் ஆசிர்வாதத்தை தக்கவைக்கிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

விவேகமுள்ள பெண் நியாயமானவள். அவள் நல்ல முடிவுகளால் ஆளப்படுகிறாள். அவள் ஞானமுள்ளவள். பாவமோ, பிசாசோ கண்ணி வைத்து அவளை பாவத்தின் படுகுழிகளுக்குள் தள்ள முடியாது. அவள் ஞானத்திற்காகவும், நல்ல முடிவுகளுக்காவும் ஜெபிப்பதால் தேவன் அவளுக்கு அந்த ஞானத்தை தருகிறார். அவள் தன்னுடைய கணவனுக்கு அவனது பிரச்சினைகளில் உதவுகிறாள், மேலும் அவனது தீர்மானங்கள், திட்டங்கள், இலக்குகள் மற்றும் நோக்கங்களில் உதவுகிறாள். வீட்டிலும், சபையிலும், சமூகத்திலும் தன் நல்ல முடிவுகளை எடுத்து சரியானதைச் செய்கிறாள். பாவத்தில் மட்டுமே வாழ்ந்து உலகத்திற்கும் மாம்சத்திற்கும் சேவை செய்யும் பெண்களின் கண்களை உண்மையை காண முடியாதபடி பிசாசு மறைப்பது போல அவள் கண்களை மறைக்க முடியாது. தேவனுக்கே கனமும் மகிமையும் உண்டாகட்டும். ஒரு மனைவியும் தாயும் தனது முடிவுகளில் நல்லவர்களாக இருப்பதும், அவள் எதை செய்தாலும் பகுத்தறிவோடும், தேவனின் சித்தத்திற்கு உட்பட்டு இருப்பதும் எவ்வளவு பாக்கியம்! சில சமயங்களில் அவள் தவறு செய்தாலும், அதற்கு விதிவிலக்கு உண்டு. ஏனெனில் அது அவள் இதயத்தில் இருந்து அல்ல, அவள் பாவ பெலவீனத்தால் வந்தது. தேவன் அத்தகைய தவறுகளிலும் நன்மையை உண்டாக்குகிறார். (ரோமர் 8:28)

விவேகமுள்ள பெண் தான் எப்படி வாழ்கிறாள், யாருடன் ஐக்கியம் வைத்திருக்கிறாள், எங்கு செல்கிறாள், என்ன பேசுகிறாள் என தனது வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கையாக இருக்கிறாள். அவள் தன் கணவனும் குழந்தைகளும் எச்சரிக்கையாக இருக்க உதவுகிறாள். திருமணமாகாத பெண்களும் எப்போதும் பொறுமையோடு இந்த விவேகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவள் தன் உறவுகள், நட்புகள் மற்றும் தோழமை, தன் கற்பு, பண்பு, நடத்தை மற்றும் செல்வாக்கு ஆகியவற்றில் எச்சரிக்கையாக இருக்கிறாள். உன்னதமான மற்றும் அழகான பெண்மை தொடர்பான அனைத்திலும் மிகுந்த எச்சரிக்கை கொண்டிருக்க வேண்டும். தன் குணத்தை செல்வத்தைவிட மேலாக மதிக்கிறாள். உலகின் அற்பமான தீமைகள், இன்பங்கள், பொழுதுபோக்குகள் மற்றும் அழிவைத் தரும் பாவங்களை தவிர்க்கிறாள். தூய்மையான, பரிசுத்தமான பெண்மை அவளுக்கு "மிகுந்த விலைமதிப்புள்ள முத்து" (மத்தேயு 13:46). தன் கற்பு, பண்பு மற்றும் தூய பெண்மையை உலகத்தின் எல்லா தங்கம், வெள்ளி, மாணிக்கம், வைரங்கள் மற்றும் முத்துகளுக்கும் விற்க மாட்டாள். எந்த விலைக்கும் அவள் விற்கப்பட மாட்டாள். இதுவே தேவன் மற்றும் மனிதர்களின் பார்வையில் உண்மையான பெண்மையின் சிகரம். தேவபக்தியுள்ள ஆண்கள் அவளை மதிக்கிறார்கள், போற்றுகிறார்கள், அன்பு காட்டுகிறார்கள். இது அவர்களை கிறிஸ்தவர்களாக அலங்கரிக்கிறது.

விவேகமுள்ள பெண் ஞானத்தோடு நடந்துகொள்ளுகிறாள். அவள் தன்னுடைய வாழ்க்கையை உண்மையாகவும் நேர்மையாகவும் பார்க்கிறாள். அதினால் அவள் வாழ்க்கை உன்னதமானதும், கம்பீரமானதுமாய் இருக்கிறது. அவளுடைய நடத்தை "இயேசுவோடு இருக்கிறது" (அப்போஸ்தலர் 4:13) என்று மற்றவர்களால் அறியப்படும் அளவிற்கு இருக்கிறது. மிகுந்த சுய-கட்டுப்பாடு கொண்டவள். உலகப்பிரகாரமான மற்றும் தேவபக்தியற்ற முட்டாள் பெண்களைப் போல அவள் வழிதவறிச் செல்லமாட்டாள். அவள் தன் வாழ்க்கையை சர்வவல்லமையுள்ள தேவனிடமும், "யுகங்களின் கன்மலை"யாகியா கிறிஸ்துவிடம் நங்கூரமிட்டுகிறாள்.

ஒரு விவேகமுள்ள பெண்ணாக விளங்குவது வாழ்க்கையில் அடைய வேண்டிய ஒரு அற்புதமான உயரம். படிப்பு, புகழ், மரியாதை மற்றும் பூமிக்குரிய மகிமையை விட இது மேலானது. தேவபக்தியில்லாத திரைப்பட நட்சத்திரங்கள், நடிகைகள், பிரபலமான உலகப் புகழ் பெற்ற பெண் அல்லது பிசாசுக்காக வாழும் வேறு அனைவரையும் விட நிச்சயமாக விவேகமுள்ள பெண் உயர்ந்தவள். அவள் என்றென்றும் நிலைத்திருந்து பிரகாசிக்கும் ஒளியாக இருக்கிறாள். இதுவே தேவனுடைய இராஜ்யத்தில் மதிப்புமிக்க உன்னதமான காரியம்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.