1 | அவர் என்னை நோக்கி, “மானிடா! நீ காண்பதைத் தின்றுவிடு. இச்சுருளேட்டைத் தின்றபின் இஸ்ரயேல் வீட்டாரிடம் போய்ப் பேசு” என்றார். |
2 | நானும் என் வாயைத் திறக்க, அவர் அச்சுருளேட்டை எனக்குத் தின்னக் கொடுத்தார். |
3 | மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு” என்றார். நானும் தின்றேன். அது என் வாயில் தேன்போல் இனித்தது. |
4 | மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! புறப்படு. இஸ்ரயேல் வீட்டாரிடம் போய் என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு. |
5 | ஏனெனில், புரியாத பேச்சும் கடின மொழியும் உடைய மக்களிடம் அல்ல, இஸ்ரயேல் வீட்டாரிடமே நீ அனுப்பப்படுகிறாய். |
6 | புரியாத பேச்சும் கடின மொழியும் உனக்கு விளங்காத சொற்களும் கொண்ட பல்வேறு மக்களினங்களிடம் நான் உன்னை அனுப்பவில்லை. அத்தகைய மக்களினங்களிடம் நான் உன்னை அனுப்பியிருந்தாலாவது அவர்கள் உனக்குச் செவி சாய்திருப்பார்கள். |
7 | ஆனால் இஸ்ரயேல் வீட்டார் நான் சொல்வதைக் கேட்க விரும்பாததால் அவர்கள் நீ சொல்வதைக் கேட்கவும் விரும்பமாட்டார்கள். அவர்கள் தலைக்கனமும் கல்நெஞ்சமும் கொண்டவர்கள். |
8 | எனவே, நான் உன் முகத்தை அவர்கள் முகங்களுக்கு எதிராகவும் உன் நெற்றியை அவர்கள் நெற்றிகளுக்கு எதிராகவும் கடுமையாக்கியுள்ளேன். |
9 | உன் நெற்றியைத் தீக்கல்லை விட உறுதிபெற்ற வைரக்கல் போல் ஆக்கியுள்ளேன். அவர்களுக்கு அஞ்சாதே. அவர்களின் பார்வையைக் கண்டு கலங்காதே. ஏனெனில், அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்” என்றார். |
10 | மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! நான் உனக்குக் கூறும் சொற்களையெல்லாம் செவிகொடுத்துக் கேட்டு உன் இதயத்தில் பதித்துக் கொள். |
11 | நீ புறப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கும் உன் மக்களின் பிள்ளைகளிடம் போ: அவர்கள் செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும் அவர்களுடன் பேசி, 'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்று அவர்களுக்குச் சொல்” என்றார். |
12 | அப்போது ஆவி என்னை உயரே தூக்கியது. ஆண்டவரின் மாட்சி தம் உறைவிடத்திலிருந்து எழுந்தபோது, நான் என்பின்னே மாபெரும் அதிரொலியின் ஓசையைக் கேட்டேன். |
13 | உயிரினங்களின் இறக்கைகள் ஒன்றோடொன்று உராயும் ஒலியும் சக்கரங்களின் ஒலியும் இணைந்து மாபெரும் அதிரொலியும் ஓசைபோல் ஒலித்தது. |
14 | அப்போது ஆவி என்னைத் தூக்கிக் கொண்டு சென்றது. நானோ மனம் கசந்து, சினமுற்றுச் சென்றேன். ஆனால், ஆண்டவரது ஆற்றல்மிகு கைவன்மை என்மேல் இருந்தது. |
15 | பின்னர், நான் கெபார் ஆற்றோரம் தெல் ஆபீபில் இருந்த நாடு கடத்தப்பட்டோரிடம் வந்தேன். அவர்கள் குடியிருந்த இடத்தில் அதிர்ச்சியுற்றவனாய் அவர்களிடையே ஏழு நாள்கள் தங்கியிருந்தேன். |
16 | ஏழு நாள்களுக்குப்பின் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. |
17 | மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலனாக நியமித்துள்ளேன். என் வாயின் சொற்களைக் கேட்டு அவர்களை என் பெயரால் எச்சரிக்கை செய். |
18 | தீயோரிடம் “நீங்கள் சாவது உறுதி” என்று நான் சொல்ல, நீ அவர்களை எச்சரிக்காவிடில்-அத்தீயோர் தம் தீயவழியினின்று விலகாவிட்டால், தம் உயிரை அவர்களால் காத்துக்கொள்ள இயலாது என்று அவர்களை எச்சரிக்காவிட்டால்-அவர்கள் தம் குற்றப்பழியோடு சாவர். ஆனால் அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன். |
19 | மாறாக, நீ தீயோரை எச்சரித்திருத்தும், அவர்கள் தம் தீச்செயலினின்றும் தம் தீய வழியினின்றும் விலகாமல் இருந்தால், அவர்கள் தம் குற்றப் பழியோடு சாவர். நீயோ உன் உயிரைக் காத்துக் கொள்வாய். |
20 | நேர்மையாளர் தம் நேர்மையினின்று விலகி, அநீதி செய்கையில் நான் அவர்கள்முன் இடறலை வைக்க, அவர்கள் சாவர். நீ அவர்களை எச்சரிக்காதிருந்தால் அவர்கள் தம் பாவத்திலேயே சாவர்: அவர்களுடைய நற்செயல்கள் நினைக்கப்படமாட்டா. ஆனால் அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன். |
21 | மாறாக, நேர்மையாளர் பாவம் செய்யாதபடி நீ அவர்களை எச்சரித்ததால் அவர்கள் பாவம் செய்யாவிடில், அவர்கள் வாழ்வது உறுதி. நீயும் உன் உயிரைக் காத்துக்கொள்வாய். |
22 | அங்கே ஆண்டவரின் கைவன்மை என்மீது இருந்தது. அவர் என்னை நோக்கி, “எழுந்து சமவெளிக்குச் செல். அங்கே நான் உன்னோடு பேசுவேன்” என்றார். |
23 | நானும் எழுந்து சமவெளிக்குச் சென்றேன். இதோ ஆண்டவரின் மாட்சி, கெபார் ஆற்றோரம் நான் கண்டதைப் போன்றே விளங்கிற்று. நான் முகம்குப்புற விழுந்தேன். |
24 | பின்னர், ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது. அப்போது அவர் என்னிடம் உரைத்தது: “நீ சென்று உன் வீட்டினுள் உன்னை அடைத்துக் கொள்! |
25 | மானிடா! நீ வெளியே சென்று அவர்களிடையே நடமாட முடியாதபடி உன்மேல் கயிறுகள் போட்டு அவற்றால் உன்னைக் கட்டுவார்கள். |
26 | நான் உன் நாவை உன் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளச் செய்வேன். நீயும் ஊமையாகி, அவர்களைக் கடிந்துகொள்ள முடியாதவன் ஆகிவிடுவாய். ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்கள். |
27 | ஆனால் நான் உன்னோடு பேசும்போது உன் வாயைத் திறப்பேன். நீ அவர்களிடம் “தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே” என்று சொல். கேட்பவன் கேட்கட்டும்: மறுப்பவன் மறுக்கட்டும்: ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்கள். |