| 1 | தீர் நாட்டைக் குறித்த திருவாக்கு: தர்சீசின் மரக் கப்பல்களே கதறி அழுங்கள்: தீரின் வீடுகள் இல்லாதபடிக்கும் வருவார் போவார் இல்லாதபடிக்கும் பாழாய்ப் போய்விட்டது: சைப்பிரசு நாட்டிலிருந்து இச்செய்தி அவர்களை வந்தடைகின்றது. |
| 2 | கடற்கரை நாட்டாரே, சீதோன் வணிகரே, வாய் திறவாதீர்: உங்கள் தூதர் கடல்கடந்து வந்தனர். |
| 3 | பல இனத்தாரோடும் நீங்கள் வாணிகம் செய்கின்றீர்கள்: சீகோர் ஆற்றின் பெருவெள்ளத்தில் விளைந்த தானியமும், நைல் நதியின் அறுவடையுமே உங்கள் வருமானம். |
| 4 | சீதோனே, வெட்கப்படு: “நான் பேறுகால வேதனை அடையவில்லை: பிள்ளையைப் பெற்றெடுக்கவில்லை: இளைஞரைப் பேணவுமில்லை: கன்னிப் பெண்களைக் காக்கவுமில்லை” என்று கடல் சொல்கின்றது: கடற்கோட்டை கூறுகின்றது. |
| 5 | இச்செய்தி எகிப்தை எட்டும்போது, தீர்நாட்டின் நிலையைக் கேட்டு அவர்கள் நடுங்குவார்கள். |
| 6 | கடற்கரை நாட்டில் வாழ்வோரே, தர்சீசுக்குக் கடந்து சென்று கதறியழுங்கள். |
| 7 | பண்டைக்காலம் முதல் நிலைபெற்று, களிப்புமிகுந்த நகர் இதுதானா? தொலை தூரத்திற்குச் சென்று குடியேறுமாறு அடியெடுத்து வைத்த நகரா இது? |
| 8 | அரசர்க்கு மணிமுடி சூட்டி வந்ததும் இளவரசர்களைப் போன்ற வணிகரைக் கொண்டதும், உலகத்தில் மதிப்புமிக்க வணிகர்களைப் பெற்றிருந்ததுமான தீருக்கு எதிராக இதைத் திட்டமிட்டது யார்? |
| 9 | செருக்குற்றோர் சீர்குலையவும், நாட்டில் மதிப்புப்பெற்றோர் அனைவரும் அவமதிப்பு அடையவும் படைகளின் ஆண்டவர் இதைத் திட்டமிட்டார். |
| 10 | தர்சீசின் மகளே, உன் நிலத்தை உழுது பண்படுத்து: இனி இங்குத் துறைமுகமே இராது. |
| 11 | கடலுக்கு மேலாக ஆண்டவர் தம் கையை ஓங்கியுள்ளார்: கானானின் ஆற்றல்மிக்க புகலிடங்களை அழிக்குமாறு ஆண்டவர் ஆணை பிறப்பித்துள்ளார். |
| 12 | 12”ஒடுக்கப்பட்ட சீதோன் மகளாகிய கன்னிப்பெண்ணே, இனி நீ மகிழ்ச்சி அடையமாட்டாய், எழுந்து, சைப்பிரசுக்கு புறப்பட்டுப்போ: அங்கேயும் நீ அமைதி பெற மாட்டாய்” என்கிறார் அவர். |
| 13 | இதோ, கல்தேயர் நாட்டைப்பார், இந்த மக்களினம் அசீரியர்கள் அல்லர்: இவர்கள் சீதோன் நாட்டைக் காட்டுவிலங்குகளிடம் விட்டுச் சென்றனர்: அதைச் சுற்றிலும் தங்கள் கொத்தளங்களை எழுப்பினர். அதன் அரண்களைத் தரைமட்டாக்கினர். நாடு பாழடைந்த மண்மேடாகக் கிடக்கின்றது. |
| 14 | தர்சீசின் கப்பல்களே! கதறியழுங்கள்: ஏனெனில் ஆற்றல்மிகு உங்கள் அரண்கள் அழிவுற்றன. |
| 15 | அந்நாளில், ஓர் அரசனின் வாழ் நாளான எழுபது ஆண்டுகள் தீர் நகர் மறக்கப்பட்டிருக்கும். எழுபது ஆண்டுகளுக்குப்பின், விலைமாதின் கவிதையில் காணப்படுவது தீர் நகருக்கு நேரிடும்: |
| 16 | 16”மறக்கப்பட்ட விலைமாதே! யாழினைக் கையிலெடுத்து, நகரைச் சுற்றி வலம் வா. உன் நினைவு நிலைக்குமாறு இன்னிசை மீட்டு: பண் பல பாடு.” |
| 17 | எழுபது ஆண்டுகளுக்குப்பின் ஆண்டவர் தீர்நகரைத் தேடிவருவார். அப்பொழுது அவள் தன் முன்னைய தொழிலுக்குத் திரும்பி, மண்ணுலகின் எல்லா நாட்டு அரசுகளோடும் வேசித்தனம் செய்வாள். |
| 18 | ஆனால் அவளது வாணிபத்தால் கிடைக்கும் வருவாய் ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்படும். அது சேமித்து வைக்கப்படுவதுமில்லை: பதுக்கி வைக்கப்படுவதுமில்லை: அவளது வாணிபம் ஆண்டவர் திருமுன் வாழ்வோர்க்கு நிறைவளிக்கும் உணவும் சிறந்த உடையும் பெற்றுத்தரும். |