| 1 | கடலையடுத்த பாலைநிலம் குறித்த திருவாக்கு: தென்னாட்டிலிருந்து சுழல்காற்றுகள் வீசுவதுபோல், அச்சம்தரும் நாடான பாலைநிலத்திலிருந்து அழிவு வருகின்றது. |
| 2 | கொடியதொரு காட்சி எனக்குக் காண்பிக்கப்பட்டது: நம்பிக்கைத் துரோகி துரோகம் செய்கின்றான்: நாசக்காரன் நாசம் செய்கின்றான். “ஏலாம் நாடே! கிளர்ந்தெழு: மேதியாவே! முற்றுகையிடு” அதன் பெருமூச்சுகள் அனைத்துக்கும் முடிவு வரச் செய்வேன். |
| 3 | ஆதலால், என் அடிவயிறு வேதனையால் துடிக்கிறது. பெண்ணின் பேறுகால வேதனைக்கு ஒத்த வேதனைகள் என்னைக் கவ்விக் கொண்டன: கலக்கமடைந்து செவிடன் போல் ஆனேன்: திகைப்புற்றுக் குருடன் போல் ஆனேன். |
| 4 | என் மனம் பேதலிக்கிறது: திகில் என்னை ஆட்கொண்டது: நான் நாடிய கருக்கல் வேளை என்னை நடுக்கமுறச் செய்கிறது. |
| 5 | பந்தி தயார் செய்கிறார்கள்: கம்பளத்தை விரிக்கிறார்கள்: உண்கிறார்கள், குடிக்கிறார்கள்: தலைவர்களே, எழுங்கள்: கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள். |
| 6 | ஏனெனில் என் தலைவர் எனக்குக் கூறியது இதுவே: “நீ போய்க் காவலன் ஒருவனை நிறுத்திவை: தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும். |
| 7 | இருவர் இருவராய்க் குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து வருவதையும், கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும் வீரர்கள் ஏறி வருவதையும் அவன் காணும்போது மிகவும் கவனமாய்க் கண்காணிக்கட்டும்.” |
| 8 | அப்போது காவல்காரன் கூக்குரலிட்டான்: “என் தலைவரே, பகல்முழுவதும் நான் காவல் மாடத்தின்மேல் நின்று கொண்டிருக்கின்றேன்: இரவெல்லாம் என் பணியில் நிறுத்தப்பட்டுள்ளேன். |
| 9 | இதோ, ஒரு சோடிக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில், ஏறி ஒருவர் வருகின்றார். அவர் பதிலுரையாக, 'பாபிலோன் வீழ்ந்தது, வீழ்ச்சியடைந்து விட்டது: அதன் தெய்வங்களின் சிலைகள் அனைத்தையும் தரையில் மோதி உடைக்கப்பட்டாயிற்று' என்று கூறுகிறார்.” |
| 10 | போராடிக்கப்பட்டுக் களத்தில் சிதறிக் கிடக்கும் என் மக்களே, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவரிடமிருந்து கேட்டவற்றை நான் உங்களுக்கு அறிவித்துள்ளேன். |
| 11 | தூமாவைப் பற்றிய திருவாக்கு: சேயிரிலிருந்து என்னைக் கூப்பிட்டு, “சாமக்காவலனே, இரவு எப்போது முடியும்? சாமக்காவலனே, இரவு எப்போது முடியும்?” என்று ஒருவர் கேட்க, |
| 12 | 12”காலை வருகிறது, அவ்வாறே இரவும்: கேட்பதென்றால், கேளுங்கள், மீண்டும் திரும்பி வாருங்கள்” என்று சாமக்காவலன் கூறினான். |
| 13 | அரேபியாவைக் குறித்த திருவாக்கு: தெதானின் வணிகப் பயணிகளே! அரேபியாவின் பாலைநிலச் சோலைகளில் நீங்கள் கூடாரம் அடியுங்கள்: |
| 14 | தேமா நாட்டில் குடியிருப்போரே! தாகமுற்றோர்க்குத் தண்ணீர் கொண்டு வாருங்கள்: அகதிகளை உணவுடன் சென்று சந்தியுங்கள். |
| 15 | ஏனெனில், வாள்களுக்குத் தப்பி அவர்கள் ஓடுகின்றார்கள்: உருவிய வாளுக்கும், நாணேற்றிய வில்லுக்கும் போரின் கடுமைக்கும் அஞ்சி ஓடுகின்றார்கள். |
| 16 | என் தலைவர் எனக்குக் கூறியது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒத்த ஓராண்டிற்குள், கேதாரின் மேன்மை மங்கிப் போகும். |
| 17 | கேதார் மக்களுள் வலிமை வாய்ந்த வில்வீரர்களுள் எஞ்சினோர் மிகச் சிலராகவே இருப்பர். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே இதைக் கூறியுள்ளார். |