| 1 | நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியது என்று உணர்ந்து பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. |
| 2 | பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம், இனி எவ்விதமாக இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை; ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற பிரகாரமாகவே நாம் அவரைக் காண்பதினால், அவருடைய சாயலாக இருப்போம் என்று அறிந்திருக்கிறோம். |
| 3 | அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவன் எவனும், அவர் சுத்தமுள்ளவராக இருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான். |
| 4 | பாவம் செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். |
| 5 | அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவம் இல்லை. |
| 6 | அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவம் செய்கிறதில்லை; பாவம் செய்கிற எவனும் அவரைக் காணவும் இல்லை, அவரை அறியவும் இல்லை. |
| 7 | பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் ஏமாற்றப்படாமலிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராக இருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாக இருக்கிறான். |
| 8 | பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான்; ஏனென்றால், பிசாசானவன் ஆரம்பமுதல் பாவம் செய்கிறான், பிசாசினுடைய செயல்களை அழிப்பதற்காக தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். |
| 9 | தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டன், ஏனென்றால், அவருடைய வித்து அவனுக்குள் நிலைத்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவம் செய்யமாட்டான். |
| 10 | இதினாலே தேவனுடைய பிள்ளைகள் யாரென்றும், பிசாசின் பிள்ளைகள் யாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவன் இல்லை. |
| 11 | நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்பதே நீங்கள் ஆரம்பமுதல் கேள்விப்பட்ட செய்தியாக இருக்கிறது. |
| 12 | சாத்தானால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போல இருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் செய்கைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய செய்கைகள் நீதி உள்ளவைகளுமாக இருந்ததினிமித்தம்தானே. |
| 13 | என் சகோதர்களே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாமலிருங்கள். |
| 14 | நாம் சகோதரர்களிடம் அன்பு செலுத்துகிறபடியால், மரணத்தைவிட்டு விலகி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைபெற்றிருக்கிறான். |
| 15 | தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். |
| 16 | அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாக இருக்கிறோம். |
| 17 | ஒருவன் இந்த உலகத்தின் செல்வம் உடையவனாக இருந்து, தன் சகோதரனுக்கு வறுமை உண்டென்று அறிந்து, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைபெறுகிறது எப்படி? |
| 18 | என் பிள்ளைகளே, வசனத்தினாலும் பேச்சினாலுமல்ல, செயல்களினாலும் உண்மையினாலும் அன்பு செலுத்துவோம். |
| 19 | இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்கள் என்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். |
| 20 | நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராக இருந்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். |
| 21 | பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருந்தால், நாம் தேவனிடத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்து |
| 22 | அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடித்து அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் கேட்டுக்கொள்ளுகிறது எதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். |
| 23 | நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாக இருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டுமென்பதே அவருடைய கட்டளையாக இருக்கிறது. |
| 24 | அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியானவராலே அறிந்திருக்கிறோம். |