| 1 | நீயோ ஆரோக்கியமான உபதேசத்திற்குரியவைகளைப் போதிக்கவேண்டும். |
| 2 | முதிர்வயதுள்ள ஆண்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாக இருக்கும்படி புத்திசொல்லு. |
| 3 | முதிர்வயதுள்ள பெண்களும் அப்படியே பரிசுத்தத்திற்குரியவிதமாக நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்திற்கு அடிமைப்படாதவர்களுமாக இருக்கவும் |
| 4 | தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு வாலிபப் பெண்கள் தங்களுடைய கணவர்களிடமும், தங்களுடைய பிள்ளைகளிடமும் அன்புள்ளவர்களும் |
| 5 | தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாக இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத்தக்க நல்லகாரியங்களைப் போதிக்கிறவர்களுமாக இருக்கவும் முதிர்வயதுள்ள பெண்களுக்குப் புத்திசொல்லு. |
| 6 | அப்படியே, இளைஞர்களும் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்கவும் நீ புத்திசொல்லி |
| 7 | நீயே எல்லாவற்றிலும் உன்னை நல்ல செயல்களுக்கு மாதிரியாகக் காண்பித்து |
| 8 | எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே வேறுபாடில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாக இருப்பாயாக. |
| 9 | வேலைக்காரர்கள் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவிதத்திலும் கவரக்கூடியதாக்கும்படி |
| 10 | தங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, எல்லாவிதத்திலும் உண்மையையும் நேர்மையையும் காண்பிக்கும்படி புத்திசொல்லு. |
| 11 | ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது வெளிப்பட்டது. |
| 12 | நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, |
| 13 | நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்திற்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் வருகைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. |
| 14 | அவர் நம்மை எல்லா அக்கிரமங்களிலிருந்து மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த மக்களாகவும், நல்லசெயல்களைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். |
| 15 | இவைகளை நீ பேசி, போதித்து, எல்லா அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடுக்காதிருப்பாயாக. |