| 1 | தேவனுடைய கிருபையை நீங்கள் வீணாகப் பெற்றுக்கொள்ளாதபடி, தேவனுடைய உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். |
| 2 | சரியான காலத்திலே நான் உன் வார்த்தையைக் கேட்டு, இரட்சிப்பின் நாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே சரியான காலம், இப்பொழுதே மீட்பின் நாள். |
| 3 | இந்த ஊழியம் குற்றஞ்சாட்டப்படாமல் இருக்க, நாங்கள் யாருக்கும் இடறல் உண்டாக்காமல், எல்லாவிதத்திலும், எங்களை தேவ ஊழியர்களாக விளங்கப்பண்ணுகிறோம். |
| 4 | அதிக பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும் |
| 5 | அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும் |
| 6 | கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமில்லாத அன்பிலும் |
| 7 | சத்தியவசனத்திலும், தேவபலத்திலும்; நீதியாகிய வலது இடதுபக்கத்து ஆயுதங்களை அணிந்திருக்கிறதிலும் |
| 8 | கனத்திலும், கனவீனத்திலும், இகழ்ச்சியிலும், புகழ்ச்சியிலும்; ஏமாற்றுபவர்கள் என்று சொல்லப்பட்டாலும், உண்மை உள்ளவர்களாகவும் |
| 9 | அறியப்படாதவர்கள் என்னப்பட்டாலும் நன்றாகத் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடு இருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும் |
| 10 | துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், ஏழைகள் என்னப்பட்டாலும் அநேகரை செல்வந்தர்களாக்குகிறவர்களாகவும், ஒன்றும் இல்லாதவர்கள் என்னப்பட்டாலும் எல்லாவற்றையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம். |
| 11 | கொரிந்தியர்களே, எங்களுடைய வாய் உங்களோடு பேசத் திறந்திருக்கிறது, எங்களுடைய இருதயம் உங்களுக்குத் திறந்திருக்கிறது. |
| 12 | எங்களுடைய உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை, உங்களுடைய உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது. |
| 13 | எனவே அதற்குப் பதிலாக நீங்களும் உங்களுடைய இருதயங்களைத் திறவுங்கள் என்று, குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன். |
| 14 | அவிசுவாசிகளுடன் இணைக்கப்படாமல் இருங்கள்; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது? |
| 15 | கிறிஸ்துவிற்கும் பேலியாளுக்கும் ஒப்பந்தம் ஏது? அவிசுவாசியுடன் விசுவாசிக்குப் பங்கு ஏது? |
| 16 | தேவனுடைய ஆலயத்திற்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தம் ஏது? நான் அவர்களுக்குள்ளே வாழ்ந்து, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்களுக்கு தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடியே, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களே. |
| 17 | எனவே, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். |
| 18 | அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாக இருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரர்களும் குமாரத்திகளுமாக இருப்பீர்கள் என்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். |