| 1 | அன்றியும், சகோதரர்களே, ஆவியானவருக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாமலிருக்க எனக்கு மனதில்லை. |
| 2 | நீங்கள் தேவனை அறியாதவர்களாக இருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே. |
| 3 | ஆதலால், தேவனுடைய ஆவியானவராலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவன் என்று சொல்லமாட்டான் என்றும், பரிசுத்த ஆவியானவரைத்தவிர வேறு ஒருவனும் இயேசுவைக் கர்த்தரென்று சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். |
| 4 | வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. |
| 5 | ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. |
| 6 | கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லோருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. |
| 7 | ஒவ்வொருவனுக்கும் அருளப்பட்ட ஆவியானவரின் வரங்கள் அனைவருடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. |
| 8 | எப்படியென்றால், ஒருவனுக்கு ஆவியானவராலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே அறிவை உணர்த்தும் வசனமும் |
| 9 | வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே குணமாக்கும் வரங்களும் |
| 10 | வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல மொழிகளைப் பேசுதலும், வேறொருவனுக்கு மொழிகளை வியாக்கியானம் செய்தலும் அளிக்கப்படுகிறது. |
| 11 | இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது விருப்பத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார். |
| 12 | எப்படியென்றால், சரீரம் ஒன்று, அதற்கு உறுப்புகள் அநேகம்; ஒரே சரீரத்தின் உறுப்புகளெல்லாம் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றாகவே இருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். |
| 13 | நாம் யூதர்களானாலும், கிரேக்கர்களானாலும், அடிமைகளானாலும், சுயாதீனர்களானாலும், எல்லோரும் ஒரே ஆவியானவராலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் செய்யப்பட்டு, எல்லோரும் ஒரே ஆவியானவருக்குள்ளாகவே தாகம் தீர்க்கப்பட்டோம். |
| 14 | சரீரமும் ஒரே உறுப்பாக இல்லாமல் அநேக உறுப்புகளாக இருக்கிறது. |
| 15 | காலானது நான் கையாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ? |
| 16 | காதானது நான் கண்ணாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ? |
| 17 | சரீரம் முழுவதும் கண்ணாக இருந்தால், கேட்கும் திறன் எங்கே? அது முழுவதும் காதாக இருந்தால், மோப்பம் செய்யும் திறன் எங்கே? |
| 18 | தேவன் தமது விருப்பத்தின்படி உறுப்புகள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார். |
| 19 | அவையெல்லாம் ஒரே உறுப்பாக இருந்தால், சரீரம் எங்கே? |
| 20 | உறுப்புகள் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றே. |
| 21 | கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு தேவையில்லையென்றும்; தலையானது கால்களைப் பார்த்து: நீங்கள் எனக்குத் தேவையில்லையென்றும் சொல்லமுடியாது. |
| 22 | சரீர உறுப்புகளில் பலவீனமுள்ளவைகளாகக் காணப்படுகிறவைகளே மிகவும் தேவையானவைகளாக இருக்கிறது. |
| 23 | மேலும், சரீர உறுப்புகளில் கனவீனமாகக் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்; |
| 24 | நம்மில் இலட்சணமானவைகளுக்கு அலங்கரிப்பு தேவையில்லை. |
| 25 | சரீரத்திலே பிரிவினை உண்டாகாமல், உறுப்புகள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாக இருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். |
| 26 | ஆதலால் ஒரு உறுப்பு பாடுபட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து பாடுபடும்; ஒரு உறுப்பு மகிமைப்பட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து சந்தோஷப்படும். |
| 27 | நீங்களே கிறிஸ்துவின் சரீரமாகவும், தனித்தனியே உறுப்புகளாகவும் இருக்கிறீர்கள். |
| 28 | தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலர்களையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், உதவி செய்யும் ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித அந்நிய மொழிகளையும் ஏற்படுத்தினார். |
| 29 | எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் தீர்க்கதரிசிகளா? எல்லோரும் போதகர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? |
| 30 | எல்லோரும் குணமாக்கும் வரங்களை உடையவர்களா? எல்லோரும் அந்நிய மொழிகளைப் பேசுகிறார்களா? எல்லோரும் வியாக்கியானம் செய்கிறார்களா? |
| 31 | இப்படியிருக்க, முக்கியமான வரங்களை விரும்புங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன். |