| 1 | எனக்கு அதிக துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது; |
| 2 | நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவியானவருக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாக இருக்கிறது. |
| 3 | சரீரத்தின்படி என் இனத்தைச் சேர்ந்த என் சகோதரர்களுக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே. |
| 4 | அவர்கள் இஸ்ரவேலர்களே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவ ஆராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே; |
| 5 | முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். |
| 6 | தேவவசனம் நிறைவேறாமல்போனது என்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் இஸ்ரவேலர் இல்லையே. |
| 7 | அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தினராக இருந்தாலும் அனைவரும் பிள்ளைகள் அல்லவே; ஈசாக்கினிடம் உன் வம்சம் விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே. |
| 8 | அது எப்படியென்றால், சரீரத்தின்படி பிள்ளைகள் ஆனவர்கள் தேவனுடைய பிள்ளைகள் அல்லவே, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகள் ஆனவர்களே அந்த வம்சம் என்று எண்ணப்படுகிறார்கள். |
| 9 | அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள் என்பதே. |
| 10 | இதுமட்டுமல்லாமல், நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது |
| 11 | குழந்தைகள் இன்னும் பிறக்காமலும், நன்மை தீமை ஒன்றும் செய்யாமல் இருக்கும்போது, தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படி இருக்கிற அவருடைய தீர்மானம், செயல்களினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படி |
| 12 | மூத்தவன், இளையவனுக்கு ஊழியம் செய்வான் என்று அவளுக்கு சொல்லப்பட்டது. |
| 13 | அப்படியே, யாக்கோபை நேசித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது. |
| 14 | ஆகவே, நாம் என்னசொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே. |
| 15 | அவர் மோசேயைப் பார்த்து: எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் இரக்கமாக இருப்பேன், எவன்மேல் உருக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் உருக்கமாக இருப்பேன் என்றார். |
| 16 | ஆகவே, விரும்புகிறவனாலும் இல்லை, ஓடுகிறவனாலும் இல்லை, இரங்குகிற தேவனாலே ஆகும். |
| 17 | மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிப்பதற்காகவும், என்னுடைய பெயர் பூமியில் எங்கும் பிரசித்தமடைவதற்காகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனோடு சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது. |
| 18 | எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். |
| 19 | அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். |
| 20 | அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? |
| 21 | மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? |
| 22 | தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும் |
| 23 | தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன? |
| 24 | அவர் யூதர்களிலிருந்து மட்டுமல்ல, யூதரல்லாத மக்களிடமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே. |
| 25 | அந்தப்படி: எனக்கு மக்களாக இல்லாதவர்களை என்னுடைய மக்கள் என்றும், நேசிக்கப்படாமல் இருந்தவளை நேசிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன். |
| 26 | நீங்கள் என்னுடைய மக்கள் இல்லை என்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது. |
| 27 | அல்லாமலும் இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருந்தாலும், மீதியாக இருப்பவர்கள்மட்டும் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்; |
| 28 | அவர் நீதியோடு சீக்கிரமாகத் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும், ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான். |
| 29 | அல்லாமலும் ஏசாயா முன்பே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு வம்சத்தைக்கூட மீதியாக வைக்காமல் இருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவைப்போல இருந்திருப்போம். |
| 30 | இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத யூதரல்லாத மக்கள் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினால் உண்டாகும் நீதியே. |
| 31 | நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை. |
| 32 | ஏனென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேடினதினால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள். |
| 33 | இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுகிறதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடி நடந்தது. |