| 1 | எரிகோவின் அருகே யோர்தானைச் சேர்ந்த மோவாபின் சமவெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி: |
| 2 | இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய சொந்த நிலத்தை லேவியர்கள் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு; அந்தப் பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும் லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டும். |
| 3 | அந்தப் பட்டணங்கள் அவர்கள் குடியிருப்பதற்கும், அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்கள் அவர்களுடைய ஆடு மாடுகளுக்கும், அவர்களுடைய சொத்துக்களுக்கும், அவர்களுடைய எல்லா மிருக ஜீவன்களுக்கும் குறிக்கப்படவேண்டும். |
| 4 | நீங்கள் லேவியர்களுக்கு கொடுக்கும் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலங்கள் பட்டணத்தின் மதில்துவங்கி, வெளியிலே சுற்றிலும் ஆயிரமுழ தூரத்திற்கு எட்டவேண்டும். |
| 5 | பட்டணம் மத்தியில் இருக்க, பட்டணத்தின் வெளிப்புறம் துவங்கி, கிழக்கே இரண்டாயிரமுழமும், தெற்கே இரண்டாயிரமுழமும், வடக்கே இரண்டாயிரமுழமும் மேற்கே இரண்டாயிரமுழமும் அளந்துவிடவேண்டும்; இது அவர்களுடைய பட்டணங்களுக்கு வெளிநிலங்களாக இருப்பதாக. |
| 6 | நீங்கள் லேவியர்களுக்கு கொடுக்கும் பட்டணங்களில் அடைக்கலத்திற்காக ஆறு பட்டணங்கள் இருக்கவேண்டும்; கொலை செய்தவன் அங்கே தப்பி ஓடிப்போகிறதற்கு அவைகளைக் குறிக்கவேண்டும்; அவைகளையல்லாமல், நாற்பத்திரண்டு பட்டணங்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். |
| 7 | நீங்கள் லேவியர்களுக்கு கொடுக்கவேண்டிய பட்டணங்களெல்லாம் நாற்பத்தெட்டுப் பட்டணங்களும் அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்களுமே. |
| 8 | நீங்கள் இஸ்ரவேல் மக்களின் சுதந்தரத்திலிருந்து அந்தப் பட்டணங்களைப் பிரித்துக் கொடுக்கும்போது, அதிகமுள்ளவர்களிடத்திலிருந்து அதிகமும், கொஞ்சமுள்ளவர்களிடத்திலிருந்து கொஞ்சமும் பிரித்துக்கொடுக்கவேண்டும்; அவரவர் சுதந்தரித்துக்கொண்ட சுதந்தரத்தின்படி தங்களுடைய பட்டணங்களில் லேவியர்களுக்கு கொடுக்கவேண்டும் என்றார். |
| 9 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
| 10 | நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான் தேசத்தில் நுழையும்போது> |
| 11 | கை தவறி ஒருவனைக் கொன்று போட்டவன் ஓடிப்போயிருக்கும் அடைக்கலப்பட்டணங்களாகச் சில பட்டணங்களைக் குறிக்கவேண்டும். |
| 12 | கொலைசெய்தவன் நியாயசபையிலே நியாயம் விசாரிக்கப்படும் முன்பு சாகாமல், பழிவாங்குகிறவன் கைக்குத் தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் உங்களுக்கு அடைக்கலப்பட்டணங்களாக இருக்கவேண்டும். |
| 13 | நீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்திற்காக இருக்கவேண்டும். |
| 14 | யோர்தானுக்கு இப்புறத்தில் மூன்று பட்டணங்களையும், கானான்தேசத்தில் மூன்று பட்டணங்களையும் கொடுக்கவேண்டும்; அவைகள் அடைக்கலப்பட்டணங்களாகும். |
| 15 | கை தவறி ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படி, அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல் மக்களுக்கும் உங்களின் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாக இருக்கவேண்டும். |
| 16 | ஒருவன் இரும்பு ஆயுதத்தினால் ஒருவனை வெட்டினதினால் அவன் செத்துப்போனால், வெட்டினவன் கொலைபாதகனாக இருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும். |
| 17 | ஒருவன் ஒரு கல்லை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவன்மேல் எறிகிறதினாலே அவன் செத்துப்போனால் கல்லெறிந்தவன் கொலைபாதகனாக இருக்கிறான்; அவன் கொலைசெய்யப்படவேண்டும். |
| 18 | ஒருவன் தன்னுடைய கையில் ஒரு மர ஆயுதத்தை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவனை அடித்ததினால் அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகனாக இருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும். |
| 19 | பழிவாங்கவேண்டியவனே கொலைபாதகனைக் கொல்லவேண்டும்; அவனைக் கண்டவுடன் அவனைக் கொன்று போடலாம். |
| 20 | ஒருவன் பகையினால் ஒருவனை விழத்தள்ளினதினாலோ, பதுங்கியிருந்து அவன் சாகும்படி அவன்மேல் ஏதாகிலும் எறிந்ததினாலோ> |
| 21 | அவனைப் பகைத்து, தன்னுடைய கையினால் அடித்ததினாலோ, அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகன்; அவன் கொலைசெய்யப்படவேண்டும், பழிவாங்குகிறவன் கொலைபாதகனைக் கண்டவுடன் கொன்றுபோடலாம். |
| 22 | ஒருவன் பகையொன்றும் இல்லாமல் திடீரென ஒருவனைத் தள்ளி விழச்செய்ததாலோ, பதுங்காமல் எந்த ஒரு ஆயுதத்தை அவன்மேல் பட எறிந்ததினாலோ> |
| 23 | அவனுக்கு எதிரியாக இல்லாமலும் அவனுக்குத் தீங்கு செய்ய நினைக்காமலும் இருக்கும்போது, ஒருவனைக் கொன்றுபோடும்படியான ஒரு கல்லினால் அவனைபார்க்காமல் எறிய, அது அவன்மேல் பட்டதினாலோ, அவன் செத்துப்போனால்> |
| 24 | அப்பொழுது கொலைசெய்தவனையும் பழிவாங்குகிறவனையும் சபையார் இந்த நியாயப்படி விசாரித்து> |
| 25 | கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்திற்கு அவனைத் திரும்பப்போகும்படி செய்யவேண்டும்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையும்வரை அவன் அதிலே இருக்கவேண்டும். |
| 26 | ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது> |
| 27 | பழிவாங்குகிறவன் கொலை செய்தவனை அடைக்கலப்பட்டணத்திற்கு வெளியே கண்டுபிடித்துக் கொன்றுபோட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை. |
| 28 | கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையும்வரை அடைக்கலப்பட்டணத்தில் இருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன்னுடைய சுதந்தரமான தன்னுடைய சொந்த நிலத்திற்குத் திரும்பிப்போகலாம். |
| 29 | இவைகள் உங்களுடைய வீடுகளில் எங்கும் உங்களுடைய தலைமுறைதோறும் உங்களுக்கு நியாயவிதிப் பிரமாணமாக இருப்பதாக. |
| 30 | எவனாவது, ஒரு மனிதனைக்கொன்றுபோட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படி அந்தக் கொலைபாதகனைக் கொலைசெய்யவேண்டும்; ஒரே சாட்சியைக்கொண்டுமட்டும் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச்செய்யக்கூடாது. |
| 31 | சாகிறதற்கேற்ற குற்றம் சுமந்த கொலைபாதகனுடைய உயிருக்காக நீங்கள் மீட்கும் பொருளை வாங்கக்கூடாது; அவன் தப்பாமல் கொலைசெய்யப்படவேண்டும். |
| 32 | தன்னுடைய அடைக்கலப்பட்டணத்திற்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன்னுடைய நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும் பொருளை வாங்கக்கூடாது. |
| 33 | நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேஅன்றி, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்தப்பட்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை. |
| 34 | நீங்கள் குடியிருக்கும் என்னுடைய வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; கர்த்தராகிய நான் இஸ்ரவேல் மக்களின் நடுவே வாழ்ந்திருக்கிறேன் என்று சொல் என்றார். |