1 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
2 | தொழுநோயாளியினுடைய சுத்திகரிப்பின் நாட்களில் அவனுக்குரிய விதிமுறைகள் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும். |
3 | ஆசாரியன் முகாமிற்கு வெளியே போய்; அவனுடைய தொழுநோய் சுகமாகிவிட்டது என்று கண்டால் |
4 | சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக் கட்டளையிடுவானாக. |
5 | பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பானையிலுள்ள சுத்தமான தண்ணீரின்மேல் கொல்லச்சொல்லி |
6 | உயிருள்ள குருவியையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் சுத்தமான தண்ணீரின்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே நனைத்து |
7 | தொழுநோய் நீங்கச் சுத்திரிக்கப்படுகிறவன்மேல் ஏழுமுறை தெளித்து, அவனைச் சுத்தம்செய்து, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடுவானாக. |
8 | சுத்திகரிக்கப்படுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தன் முடி முழுவதையும் சிரைத்து, தான் சுத்தமாவதற்காக தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்கு வந்து, தன் கூடாரத்திற்கு வெளியே ஏழுநாட்கள் தங்கி |
9 | ஏழாம் நாளிலே தன் தலையையும், தாடியையும், புருவங்களையும் தன்னுடைய முடிமுழுவதையும் சிரைத்து, தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளிக்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருப்பான். |
10 | எட்டாம்நாளிலே அவன் பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், ஒருவயதுடைய பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், உணவுபலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், ஒரு ஆழாக்கு எண்ணெயையும் கொண்டுவரக்கடவன். |
11 | சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அப்பொருட்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன். |
12 | பின்பு, ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி, |
13 | பாவநிவாரணபலியும் சர்வாங்கதகனபலியும் செலுத்தும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது. |
14 | அந்த குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசுவானாக. |
15 | பின்பு, ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் ஊற்றி |
16 | தன் இடதுகையிலுள்ள எண்ணெயில் தன் வலதுகையின் விரலை நனைத்து, தன் விரலினால் ஏழுமுறை அந்த எண்ணெயில் எடுத்து, கர்த்தருடைய சந்நிதியில் தெளித்து |
17 | தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயிலே கொஞ்சம் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும், ஏற்கனவே பூசியிருக்கிற குற்றநிவாரணபலியினுடைய இரத்தத்தின்மேல் பூசி |
18 | தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவனுடைய தலையிலே ஊற்றி கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். |
19 | ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்கதகனபலியைக் கொன்று |
20 | சர்வாங்கதகனபலியையும் உணவுபலியையும் பலிபீடத்தின்மேல் வைத்து, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் சுத்தமாக இருப்பான். |
21 | அவன் இவ்விதம் செய்யமுடியாத ஏழையாக இருந்தால், அவன் தன் பாவநிவிர்த்திக்கென்று அசைவாட்டும் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்குட்டியையும், உணவுபலிக்கு எண்ணெயில் பிசைந்த ஒரு மரக்கால் மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கையும், ஆழாக்கு எண்ணெயையும் |
22 | தன் தகுதிக்குத் தக்கபடி இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்று பாவநிவாரணபலியாகவும், மற்றொன்று சர்வாங்கதகனபலியாகவும் செலுத்தும்படி வாங்கி |
23 | தான் சுத்திகரிக்கப்படும்படி எட்டாம் நாளில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவருவானாக. |
24 | அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் உணவுபலியாக அசைவாட்டி |
25 | குற்றநிவாரணபலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக் கொன்று, குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசி |
26 | அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் ஊற்றி |
27 | தன் இடதுகையிலுள்ள எண்ணெயிலே தன் வலதுவிரலை நனைத்து, கர்த்தருடைய சந்நிதியில் ஏழுமுறை தெளித்து |
28 | தன் உள்ளங்கையில் இருக்கிற எண்ணெயில் கொஞ்சம் எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் குற்றநிவாரணபலியின் இரத்தம் பூசியிருக்கிற இடத்தின்மேல் பூசி |
29 | தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி |
30 | பின்பு, அவன் தன் பெலத்திற்கும் தகுதிக்கும் தக்கதாக காட்டுப்புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவந்து |
31 | அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, உணவுபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். |
32 | தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கமுடியாத தொழுநோயாளியைக் குறித்த விதிமுறைகள் இதுவே என்றார். |
33 | பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: |
34 | நான் உங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் சொந்தமான தேசத்தில் ஒரு வீட்டிலே பூசணத்தை நான் வரச்செய்தால் |
35 | அந்த வீட்டிற்குச் சொந்தமானவன் வந்து, வீட்டிலே பூசணம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன். |
36 | அப்பொழுது வீட்டிலுள்ள அனைத்தும் தீட்டுப்படாதபடி, ஆசாரியன் அந்தப் பூசணத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை காலிசெய்துவைக்கச் சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய் |
37 | அந்தப் பூசணம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்ற சுவரைவிட பள்ளமாக இருக்கக்கண்டால் |
38 | ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாட்கள் அடைத்துவைத்து |
39 | ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப்பார்த்து, பூசணம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால் |
40 | பூசணம் இருக்கும் அந்த இடத்தின் கற்களைப் பெயர்க்கவும், பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு |
41 | வீட்டின் உட்புறம் சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும் |
42 | வேறே கற்களை எடுத்துவந்து, அந்தக் கற்களுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக. |
43 | கற்களைப் பெயர்த்து, வீட்டைச்செதுக்கி, புதிதாகப் பூசினபின்பும், அந்தப் பூசணம் மீண்டும் வீட்டில் வந்ததானால் |
44 | ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன்; பூசணம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற பூசணம்; அது தீட்டாயிருக்கும். |
45 | ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கற்களையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும். |
46 | வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். |
47 | அந்த வீட்டிலே உறங்கியவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன். |
48 | ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தப் பூசணம் படரவில்லை என்று கண்டானேயாகில், பூசணம் நீங்கிவிட்டதால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்மானிக்கக்கடவன். |
49 | அப்பொழுது வீட்டைச் சுத்திகரிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து |
50 | ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று |
51 | கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் நனைத்து, வீட்டின்மேல் ஏழுமுறை தெளித்து |
52 | குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டைச் சுத்திகரித்து |
53 | உயிருள்ள குருவியைப் பட்டணத்திற்கு வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாக இருக்கும். |
54 | இது சகலவித தொழுநோய்க்கும், சொறிக்கும் |
55 | உடைப் பூசணத்திற்கும், வீட்டுப்பூசணத்திற்கும் |
56 | தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் உரிய விதிமுறை. |
57 | தொழுநோய் மற்றும் பூசணம், எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்கு தொழுநோய்க்குரிய விதிமுறைகள் இதுவே என்றார். |