| 1 | ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த ஆடைகளுடையவராகவும், மகத்துவமாக அணிந்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாகப் பேசி காப்பாற்ற வல்லவராகிய நான்தானே. |
| 2 | உம்முடைய ஆடைகள் சிவப்பாகவும், ஆலையை மிதிக்கிறவனுடைய ஆடைகளைப்போலவும் இருக்கிறதென்ன? |
| 3 | நான் தனி ஒருவனாக ஆலையை மிதித்தேன்; மக்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் கடுங்கோபத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் ஆடைகளின்மேல் தெறித்தது, என் ஆடைகளையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன். |
| 4 | நீதியைநிலைப்படுத்தும் நாள் என் மனதிலிருந்தது; என்னுடையவர்களை விடுவிக்கும் வருடம் வந்தது. |
| 5 | நான் பார்த்தேன், துணை செய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு பாதுகாப்பாகி, என் கடுங்கோபமே என்னைத் தாங்கியது. |
| 6 | நான் என் கோபத்திலே மக்களை மிதித்து, என் கடுங்கோபத்திலே அவர்களை வெறியாக்கி, அவர்கள் சாரத்தைத் தரையிலே இறங்கச்செய்தேன். |
| 7 | கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் ஏற்றதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்திற்குச் செய்த மகா நன்மைக்கு ஏற்றதாகவும், கர்த்தருடைய செயல்களையும், கர்த்தருடைய துதிகளையும் பிரபலப்படுத்துவேன். |
| 8 | அவர்கள் என் மக்கள்தானென்றும், அவர்கள் வஞ்சனை செய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார். |
| 9 | அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை காப்பாற்றினார் அவர் தமது அன்பின் காரணமாகவும், தமது பரிதாபத்தின் காரணமாகவும் அவர்களை விடுவித்தது, ஆரம்ப நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார். |
| 10 | அவர்களோ கலகம்செய்து, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்கு எதிரியாக மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாக போர்செய்தார். |
| 11 | ஆகிலும் அவர் ஆரம்பநாட்களையும், மோசேயையும், தம்முடைய மக்களையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும் தமது மந்தையின் மேய்ப்பனையும் கடலிலிருந்து ஏறச்செய்தவர் இப்பொழுது எங்கே? |
| 12 | அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக் கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்திய புகழ்ச்சியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து, |
| 13 | ஒரு குதிரை வனாந்திரவெளியிலே நடக்கிறதுபோல, அவர்கள் இடறாதபடிக்கு அவர்களை ஆழங்களில் நடக்கச்செய்தவர் எங்கே? |
| 14 | கர்த்தருடைய ஆவியானவர் அவர்களைப் பள்ளத்தாக்கிலே போய் இறங்குகிற மிருகஜீவன்களைப்போல இளைப்பாறச்செய்தார்; இப்படியே தேவரீர், உமக்கு மகிமையுள்ள புகழ்ச்சியை உண்டாக்கும்படி உம்முடைய மக்களை நடத்தினீர். |
| 15 | தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மனஉருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ? |
| 16 | தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது ஆரம்பகாலமுதல் உம்முடைய நாமம். |
| 17 | கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகச்செய்து, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்கு ஏன் கடினப்படுத்தவேண்டும்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உமக்குச் சொந்தமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும். |
| 18 | பரிசுத்தமுள்ள உமது மக்கள் கொஞ்சக் காலமாத்திரம் அதைச் சுதந்தரித்தார்கள்; எங்கள் எதிரிகள் உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மிதித்துப்போட்டார்கள். |
| 19 | நாங்களே உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் சூட்டப்பட்டதுமில்லை. |