| 1 | கொள்ளையிடப்படாமலிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம் செய்யாதிருக்கிறவர்களுக்குத் துரோகம் செய்கிறவனுமாகிய உனக்கு ஐயோ! நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம் செய்துமுடிந்தபின்பு உனக்குத் துரோகம்செய்வார்கள். |
| 2 | கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்களுடைய புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும். |
| 3 | அமளியின் சத்தத்தினாலே மக்கள் அலைந்தோடி, நீர் எழுந்திருக்கும்போது தேசங்கள் சிதறடிக்கப்படும். |
| 4 | வெட்டுக்கிளிகள் சேர்க்கிறதுபோல உங்கள் கொள்ளை சேர்க்கப்படும்; வெட்டுக்கிளிகள் குதித்துத் திரிகிறதுபோல மனிதர்கள் அதின்மேல் குதித்துத் திரிவார்கள். |
| 5 | கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார். |
| 6 | பூரண இரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம். |
| 7 | இதோ, அவர்களுடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து பிரதிநிதிகள் மனங்கசந்து அழுகிறார்கள். |
| 8 | பாதைகள் பாழாயின; வழிப்போக்கர்கள் இல்லை; உடன்படிக்கையை மீறுகிறான்; நகரங்களை இகழுகிறான்; மனிதனை மதிக்காமல் போகிறான். |
| 9 | தேசம் துக்கித்து சோர்வடைந்திருக்கிறது; லீபனோன் வெட்கி வாடுகிறது; சாரோன் வனாந்திரத்திற்கு ஒப்பாகிறது; பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது. |
| 10 | இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்கிறார். |
| 11 | பதரைக் கர்ப்பந்தரித்து வைக்கோலைப் பெறுவீர்கள்; நெருப்பைப்போல் உங்கள் சுவாசமே உங்களை சுட்டெரிக்கும். |
| 12 | மக்கள் சுண்ணாம்பைப்போல நீர்த்துப்போவார்கள்; வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள். |
| 13 | தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே, என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார். |
| 14 | சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரர்களை நடுக்கம்பிடிக்கிறது; சுட்டெரிக்கும் நெருப்பிற்கு முன்பாக நம்மில் தங்கியிருப்பவன் யார்? நிலையான நெருப்புத்தழலுக்கு முன்பாக நம்மில் குடியிருப்பவன் யார் என்கிறார்கள். |
| 15 | நீதியாக நடந்து, செம்மையானவைகளைப் பேசி, துன்பம் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, லஞ்சங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தம் சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவன் எவனோ |
| 16 | அவன் உயர்ந்த இடங்களில் குடியிருப்பான்; கன்மலைகளின் பாதுகாப்பு அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவனுடைய உணவு அவனுக்குக் கொடுக்கப்படும்; அவனுடைய தண்ணீர் அவனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும். |
| 17 | உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும். |
| 18 | உன் மனம் பயங்கரத்தை நினைவுகூரும்; கணக்காளன் எங்கே? தண்டல்காரன் எங்கே? கோபுரங்களை எண்ணினவன் எங்கே? |
| 19 | உனக்குப் புரியாத மொழியையும், புரிந்துகொள்வதற்குக் கடினமான ஒருவிதமான பேச்சையுமுடைய அந்தக் கொடூர மக்களை இனி நீ பார்க்கமாட்டாய். |
| 20 | நம்முடைய பண்டிகைகள் அனுசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமைதலான குடியிருப்பாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்துபோவதுமில்லை. |
| 21 | மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மிக அகலமான நதிகளும் ஆறுகளுமுள்ள இடம் போலிருப்பார்; தண்டுவலிக்கிற படகு அங்கே ஓடுவதும் இல்லை; பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை. |
| 22 | கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை காப்பாற்றுவார். |
| 23 | உன் கயிறுகள் தளர்ந்துபோகும்; பாய்மரத்தைப் பலப்படுத்தவும், பாயை விரிக்கவும் முடியாமற்போகும்; அப்பொழுது திரளான கொள்ளைப்பொருள் பங்கிடப்படும்; சப்பாணிகளும் கொள்ளையிடுவார்கள். |
| 24 | வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் குடியிருக்கிற மக்களின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும். |