1 | ஆமோத்சின் மகனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும்குறித்துக் கண்ட காட்சி. |
2 | கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய மலை, மலைகளின் உச்சியில் அமைக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; எல்லா தேசத்தார்களும் அதற்கு ஓடிவருவார்கள். |
3 | திரளான மக்கள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். |
4 | அவர் தேசங்களிடையே நியாயந்தீர்த்து, திரளான மக்களின் வாக்குவாதங்களைத் தீர்த்துவைப்பார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் மாற்றுவார்கள்; நாட்டிற்கு விரோதமாக நாடு பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் போர்ப்பயிற்சி எடுப்பதுமில்லை. |
5 | யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள். |
6 | யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய மக்களைக் கைவிட்டீர்; அவர்கள் கிழக்குத் திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தர்களைப்போல் நாள்பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய மக்கள்மேல் பிரியப்படுகிறார்களே. |
7 | அவர்களுடைய தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்களுடைய தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய இரதங்களுக்கும் முடிவில்லை. |
8 | அவர்களுடைய தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளாலும், தங்கள் விரல்களாலும் உருவாக்கியவைகளைப் பணிந்துகொள்கிறார்கள். |
9 | சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர். |
10 | கர்த்தரின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமையின் புகழ்ச்சிக்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள். |
11 | மனிதர்களின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனிதர்களின் வீணான பிடிவாதமும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். |
12 | அனைத்தும் தாழ்த்தப்படுவதற்காக சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும், |
13 | லீபனோனிலுள்ள உயரமும் உயர்ந்ததுமான எல்லாக் கேதுருக்களின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின்மேலும் |
14 | உன்னதமான எல்லா மலைகளின்மேலும், உயரமான எல்லா மலைகளின்மேலும் |
15 | உயர்ந்த எல்லாக் கோபுரத்தின்மேலும், பாதுகாப்பான எல்லா மதிலின்மேலும் |
16 | தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், அனைத்துச் சித்திர விநோதங்களின்மேலும் வரும். |
17 | அப்பொழுது மனிதர்களின் மேட்டிமை தாழ்ந்து, மனிதர்களின் வீறாப்புத் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். |
18 | சிலைகள் முற்றிலுமாக ஒழிந்துபோம். |
19 | பூமியைத் தத்தளிக்கச்செய்யக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப் புகழ்ச்சிக்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள். |
20 | பூமியைத் தத்தளிக்கச்செய்யக் கர்த்தர் எழும்பும் அந்நாளிலே, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப் புகழ்ச்சிக்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளும்படிக்கு |
21 | மனிதன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி சிலைகளையும், தன் பொன் சிலைகளையும், மூஞ்சூறு எலிகளுக்கும் வெளவால்களுக்கும் எறிந்துவிடுவான். |
22 | நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள்; மதிக்கப்படுவதற்கு அவன் எம்மாத்திரம். |