வேதாகமத்தை வாசி

Click to Subscribe

உன்னதப்பாட்டு 4

                   
புத்தகங்களைக் காட்டு
1நீ அழகு மிகுந்தவள், என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களைப்போல் இருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் இலைகளை மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போல் இருக்கிறது.
2உன்னுடைய பற்கள், ரோமம் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் அனைத்தும் இரட்டைக்குட்டி ஈன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது.
3உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும், உன் வாய் இன்பமுமாக இருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது.
4உன்னுடைய கழுத்து, பராக்கிரமசாலிகளின் ஆயிரம் கேடகங்கள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது.
5உன் இரண்டு மார்பகங்களும் லீலிமலர்களுக்கு இடையில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.
6பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலைக்கும் சாம்பிராணிமலைக்கும் போயிருப்பேன்.
7என் பிரியமே! நீ பூரண அழகுமிகுந்தவள்; உன்னில் குறையொன்றும் இல்லை.
8லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் உச்சியிலிருந்தும், சேனீர் எர்மோனின் உச்சியிலிருந்தும், சிங்கங்களின் குகைகளிலிருந்தும், சிறுத்தைகளின் மலைகளிலிருந்தும் கீழே பார்.
9என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களில் ஒன்றிலும் உன் கழுத்திலுள்ள ஒரு நகையிலும் என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்.
10உன் நேசம் எவ்வளவு இன்பமாக இருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சைரசத்தைவிட உன் நேசம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைவிட உன் நறுமண தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!
11என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் உடைகளின் வாசனை லீபனோனின் வாசனைக்கு ஒப்பாக இருக்கிறது.
12என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், பாதுகாக்கப்பட்ட கிணறுமாக இருக்கிறாய்.
13உன் தோட்டம் மாதுளம்செடிகளும், அருமையான பழமரங்களும், மருதாணிச் செடிகளும், நளதச்செடிகளும்
14நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன மரங்களும், சகலவித கந்தவர்க்கச் செடிகளுமுள்ள சிங்கார வனமாக இருக்கிறது.
15தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் கிணறும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.
16வாடைக்காற்றே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்திற்கு வந்து, தமது அருமையான பழங்களைச் சாப்பிடுவாராக.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.