1 | என் மகனே, நீ உன்னுடைய நண்பனுக்காகப் பொறுப்பேற்று, அந்நியனுக்கு உறுதியளித்தால் |
2 | நீ உன்னுடைய வாய்மொழிகளால் சிக்கிக்கொண்டாய், உன்னுடைய வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய். |
3 | இப்பொழுது என் மகனே, உன்னுடைய நண்பனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டதால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய். |
4 | உன்னுடைய கண்ணுக்கு தூக்கத்தையும், உன்னுடைய கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன்னுடைய நண்பனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள். |
5 | வெளிமான் வேட்டைக்காரனுடைய கைக்கும், குருவி வேடனுடைய கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள். |
6 | சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். |
7 | அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாமல் இருந்தும் |
8 | கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும். |
9 | சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன்னுடைய தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? |
10 | இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? |
11 | உன்னுடைய தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன்னுடைய வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும். |
12 | வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான். |
13 | அவன் தன்னுடைய கண்களால் சைகைகாட்டி, தன்னுடைய கால்களால் பேசி, தன்னுடைய விரல்களால் போதனை செய்கிறான். |
14 | அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு; இடைவிடாமல் தீங்கைப் பிணைத்து, வழக்குகளை உண்டாக்குகிறான். |
15 | ஆகையால் திடீரென அவனுக்கு ஆபத்து வரும்; உதவியில்லாமல் திடீரென நாசமடைவான். |
16 | ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். |
17 | அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை |
18 | மிகக்கொடிய சிந்தனைகளைத் தூண்டுகின்ற இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்து ஓடும் கால் |
19 | பொய்யானதைப் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை உண்டாக்குதல் ஆகிய இவைகளே. |
20 | என் மகனே, உன்னுடைய தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன்னுடைய தாயின் போதகத்தைத் தள்ளாதே. |
21 | அவைகளை எப்பொழுதும் உன்னுடைய இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டிக்கொள். |
22 | நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உனக்கு போதிக்கும். |
23 | கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகதண்டனையே வாழ்வின் வழி. |
24 | அது உன்னைத் துன்மார்க்கப் பெண்ணுக்கும், ஆசை வார்த்தைகளைப் பேசும் நாக்கை உடைய ஒழுங்கீனமானவளுக்கும் விலக்கிக் காக்கும். |
25 | உன்னுடைய இருதயத்திலே அவளுடைய அழகை ரசிக்காதே; அவள் தன்னுடைய கண்ணின் இமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே. |
26 | விபசாரியினால் ஒரு அப்பத்துண்டையும் இழக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள். |
27 | தன்னுடைய உடை வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளமுடியுமா? |
28 | தன்னுடைய கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கமுடியுமா? |
29 | பிறனுடைய மனைவியிடம் தவறான உறவுகொள்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், தண்டனைக்குத் தப்பமாட்டான். |
30 | திருடன் தன்னுடைய பசியை ஆற்றத் திருடினால் மக்கள் அவனை இகழமாட்டார்கள்; |
31 | அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும்; தன்னுடைய வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும். |
32 | பெண்ணுடனே விபசாரம்செய்கிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான். |
33 | வாதையையும் வெட்கத்தையும் அடைவான்; அவனுடைய நிந்தை ஒழியாது. |
34 | பெண்ணைப்பற்றிய எரிச்சல் ஆணுக்கு கடுங்கோபத்தை உண்டாக்கும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடமாட்டான். |
35 | அவன் எந்த நஷ்டத்தையும் பார்க்கமாட்டான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான். |