1 | யாக்கேயின் மகனாகிய ஆகூர் என்னும் ஆண்மகன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்ன உபதேச வாக்கியங்கள்: |
2 | மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்; மனிதர்களுக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. |
3 | நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை. |
4 | வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை துணியிலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் நிறுவியவர் யார்? அவருடைய பெயர் என்ன? அவருடைய மகனுடைய பெயர் என்ன? அதை அறிவாயோ? |
5 | தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர். |
6 | அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய். |
7 | இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரணமடையும்வரைக்கும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். |
8 | மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் செல்வத்தையும் எனக்குக் கொடுக்காமல் இருப்பீராக. |
9 | நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரமடைகிறதினால் திருடி, என்னுடைய தேவனுடைய நாமத்தை வீணாக கெடுக்காதபடிக்கும், என்னுடைய படியை எனக்கு அளந்து எனக்கு உணவளியும். |
10 | எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றம் சுமத்தாதே; அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய். |
11 | தங்களுடைய தகப்பனைச் சபித்தும், தங்களுடைய தாயை ஆசீர்வதிக்காமலும் இருக்கிற சந்ததியாரும் உண்டு. |
12 | தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும், தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு. |
13 | வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள். |
14 | தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும் சாப்பிடுவதற்கு வாளுக்கு ஒப்பான பற்களையும் கத்திகளுக்கு ஒப்பான கடைவாய்ப்பற்களையும் உடைய சந்ததியாரும் உண்டு. |
15 | கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு. திருப்தி அடையாத மூன்று உண்டு, போதும் என்று சொல்லாத நான்கும் உண்டு. |
16 | அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. |
17 | தகப்பனைப் பரியாசம்செய்து, தாயின் கட்டளையை அசட்டைசெய்கிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் சாப்பிடும். |
18 | எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு. |
19 | அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே. |
20 | அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது; அவள் சாப்பிட்டு, தன்னுடைய வாயைத் துடைத்து; நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள். |
21 | மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமுடியாது. |
22 | அரசாளுகிற அடிமைக்காகவும், உணவால் திருப்தியான மூடனுக்காகவும் |
23 | பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும், தன்னுடைய எஜமானிக்குப் பதிலாக மனைவியாகும் அடிமைப் பெண்ணுக்காகவுமே. |
24 | பூமியில் சிறியவைகளாக இருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்கு உண்டு. |
25 | அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும், கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும் |
26 | பெலமில்லாத உயிரினமாக இருந்தும், தங்களுடைய வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுயல்களும் |
27 | ராஜா இல்லாமல் இருந்தும், கூட்டம் கூட்டமாகப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும் |
28 | தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி, அரசர்கள் அரண்மனைகளில் இருக்கிற சிலந்திப் பூச்சியுமே. |
29 | விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு; விநோத நடையுள்ளவைகள் நான்கும் உண்டு. |
30 | அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும் |
31 | போர்க்குதிரையும், வெள்ளாட்டுக் கடாவும், ஒருவரும் எதிர்க்க முடியாத ராஜாவுமே. |
32 | நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாக இருந்தால், கையினால் வாயை மூடு. |
33 | பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும். |