1 | பின்பு இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் கர்த்தருடைய கட்டளையின்படி சீன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு, பயணம்செய்து, ரெவிதீமிலே வந்து முகாமிட்டார்கள்; அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது. |
2 | அப்பொழுது மக்கள் மோசேயோடு வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடு ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான். |
3 | மக்கள் அந்த இடத்தில் தண்ணீர்த் தாகமாக இருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்களுடைய பிள்ளைகளையும் எங்களுடைய ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தாகத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர் என்றார்கள். |
4 | மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த மக்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான். |
5 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பர்களில் சிலரை உன்னோடு கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன்னுடைய கோலை உன்னுடைய கையில் பிடித்துக்கொண்டு, மக்களுக்கு முன்னே நடந்துபோ. |
6 | அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பர்களின் கண்களுக்கு முன்பாகச் செய்தான். |
7 | இஸ்ரவேலர்கள் வாதாடினதற்காகவும், கர்த்தர் எங்களுடைய நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரை சோதித்துப் பார்த்ததினாலும், அவன் அந்த இடத்திற்கு மாசா என்றும், மேரிபா என்றும் பெயரிட்டான். |
8 | அமலேக்கியர்கள் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தார்கள். |
9 | அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதர்களைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கியர்களோடு யுத்தம்செய்; நாளைக்கு நான் மலைமேல் தேவனுடைய கோலை என்னுடைய கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான். |
10 | யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கியர்களோடு யுத்தம்செய்தான். மோசேயும், ஆரோனும், ஊர் என்பவனும் மலைமேல் ஏறினார்கள். |
11 | மோசே தன்னுடைய கையை மேலே பிடித்திருக்கும்போது, இஸ்ரவேலர்கள் வெற்றிபெற்றார்கள்; அவன் தன்னுடைய கையைகீழே விடும்போது, அமலேக்கு வெற்றிபெற்றான். |
12 | மோசேயின் கைகள் சோர்ந்துபோனது, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும், ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறுபக்கத்திலும் இருந்து, அவனுடைய கைகளைத் தாங்கினார்கள்; இந்த விதமாக அவனுடைய கைகள் சூரியன் மறையும்வரையும் ஒரே நிலையாக இருந்தது. |
13 | யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் கூர்மையான பட்டயத்தாலே தோற்கடித்தான். |
14 | பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்படி, நீ ஒரு புத்தகத்தில் எழுதி, யோசுவாவின் காதிலே கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழே எங்கும் இல்லாதபடி நாசம் செய்வேன் என்றார். |
15 | மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பெயரிட்டு |
16 | அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்திற்கு விரோதமாக இருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாக கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான். |