| 1 | கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லோரும் கர்த்தரைப் பாடுங்கள். |
| 2 | கர்த்தரைப் பாடி, அவருடைய பெயருக்கு நன்றி சொல்லி, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாக அறிவியுங்கள். |
| 3 | தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும், எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். |
| 4 | கர்த்தர் பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; எல்லா தெய்வங்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. |
| 5 | எல்லா மக்களுடைய தெய்வங்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர். |
| 6 | மகிமையும், மேன்மையும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது. |
| 7 | மக்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். |
| 8 | கர்த்தருக்கு அவருடைய பெயருக்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய முற்றங்களில் நுழையுங்கள். |
| 9 | பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூமியில் உள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். |
| 10 | கர்த்தர் ராஜரிகம்செய்கிறார், ஆகையால் உலகம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும். அவர் மக்களை நிதானமாக நியாயந்தீர்ப்பார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லுங்கள். |
| 11 | வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, கடலும் அதின் நிறைவும் முழங்குவதாக. |
| 12 | நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டுமரங்களெல்லாம் கெம்பீரிக்கும். |
| 13 | அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் உலகத்தை நீதியோடும், மக்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார். |